அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது சிதைக்கும் செயல்

மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக்கி பொதுத் தேசிய கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது அரசியலமைப்பை சிதைக்கும் செயலாகும் எனவே, கலந்துரையாடல்களின் பின்னர் முடிவு பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கலந்துகொள்வது அவசியம் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
இன்று எமது நாட்டில் கூட்டணி அரசாங்கம் ஒன்றே உள்ளது. இக்கூட்டணி அரசாங்கத்துக்குள்
பல கட்சிகள் இணைந்துள்ளன. அக்கட்சிகளுக்பென அடையாளங்கள் உள்ளன. எனவே
அனைத்து காரணங்கள் தொடர்பிலும் 100 சதவீத இணக்கப்பாட்டுக்கு அனைத்து கட்சிகளும்
வருவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

எனினும், இது ஓர் அரசாங்கமாகும். அதில், பொதுக் கொள்கை காணப்பட வேண்டும். இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்று கூடி கலந்துரையாடி ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். பின்னர் அரசாங்கத்தின் அனைத்து பங்குதாரர்களும் அந்த முடிவுகளை அரசாங்கத்தின் பொதுவான கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த அரசாங்கம் தேசிய மற்றும் வெளிநாட்டு சவால்களுக்கு மத்தியிலேயே ஆட்சியமைத்தது.
மக்களின் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது
அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அந்த பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கத்துக்குள் உள்ள
சகல கட்சிகளும் கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து செயற்பட முழு பொறுப்பு
உள்ளது என்றார்.

நாம் கடந்த வாரம் பிரித்தானியாவில் இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்ட
கலந்துரையாடல்கள் மூலம், பிரித்தானியாவின் முதலீடுகளை இலங்கைப் பெற்றுக்கொள்ளும்
வாய்ப்புகள் இருப்பதாக தெளிவாக தெரிந்தது. முதலீடு மாத்திரமல்ல. சிறந்த வர்த்தக உறவு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி உறவை விரிவுப்படுத்துவதற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.

எமது நாட்டில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சாதகமாகியுள்ளதால், எமக்கிருக்கும் சிறந்த சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்தி கொள்வது இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிகவும் இன்றியமையாததாகும் என்றார்.

இதனை வெற்றிக்கொள்வதற்கு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்வது
அவசியமானதாகும். இதன்மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை முன்னோக்கி
கொண்டு செல்லலாம்.