அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்படமாட்டார் என, சட்டமா அதிபர், உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று(08) இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர், இந்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால், அருட்தந்தை சிறில் காமினிக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் அவருக்குப் பதிலாக அருட்தந்தையர்கள் 3 பேர் முன்னிலையானதுடன், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினிக்கு ஒரு வாரக் கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தனர்.
இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal