நவீன வாழ்க்கையின் அடையாளங்களுள் ஒன்று மனஅழுத்தம். ஒருவரிடம் தொடர்ச்சியாக நீடித்திருக்கும் மனஅழுத்தம் உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவருக்குப் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கின்றன ஆய்வுகள். ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் என உடல் சார்ந்த நோய்கள் பலவும் இளம் வயதிலேயே வருவதற்கு நீடித்திருக்கும் இந்த மனஅழுத்தம்தான் முக்கியமான காரணம்.
மனஅழுத்தம் என்றால் என்ன?
ஒரு ஆபத்தையோ அல்லது எதிர்பார்க்காத வகையில் ஏற்படும் நெருக்கடியையோ எதிர்கொள்ள வேண்டுமானால், நமக்கு ஏராளமான ஆற்றல் தேவைப்படும், அந்த ஆற்றலும் உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆபத்தை எதிர்கொள்ளவோ அல்லது அதிலிருந்து தப்பித்துச் செல்லவோ முடியும். இப்படி உடனடியாக ஏராளமான ஆற்றலை உற்பத்திசெய்வதற்காக உடலில் கண நேரத்தில் ஏற்படும் சில மாற்றங்களையே நாம் மனஅழுத்தம் எனச் சொல்கிறோம். மனஅழுத்தம் என்றால், ஒரு உடனடித் தூண்டுதல் அல்லது அழுத்தம் எனக் கொள்ளலாம். இது இயல்பான ஒரு உயிரியல் செயல்பாடு. அந்த நேரத்தில் இதயத் துடிப்பு அதிகமாகும், மூச்சின் வேகம் அதிகரிக்கும், வியர்த்துக் கொட்டும், நாக்கு வறண்டுபோகும், சிறுநீர் போக வேண்டும்போல இருக்கும், சுற்றுப்புறத்தின் மீது ஜாக்கிரதை உணர்வு மேலோங்கும், அதைத் தவிர வேறு எதிலும் கவனம் இருக்காது, பசியெடுக்காது, தூக்கம் வராது, மனம் முழுக்க இனம் புரியாத அச்சவுணர்வு நிறைந்திருக்கும். ஆபத்துடன் போராடுவதற்கு உண்டான ஆற்றலை நாம் இந்த மனஅழுத்தத்திலிருந்தே பெற முடியும். அந்த ஆபத்திலிருந்து அல்லது நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்போது உடல் பழைய சகஜ நிலைக்குத் திரும்பிவிடும்.
மனஅழுத்தம் எப்போது பிரச்சினையாகிறது?
உடலின் இயல்பான செயல்பாடாக இருக்கும் மன அழுத்தம் இரண்டு தருணங்களில் பிரச்சினையாக மாறுகிறது. ஒன்று, ஆபத்தையோ அல்லது நெருக்கடியையோ எதிர்கொண்டு முடிக்கும்போது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அதே நிலையிலேயே நீடித்துக்கொண்டிருந்தால் அது பிரச்சினையாக மாறுகிறது. இதயத் துடிப்பிலிருந்து சுவாசம் வரை உடனடியாகச் சீராகாமல், இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அதே விதத் தூண்டுதலோடும் அழுத்தத்தோடும் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருந்தால் நீண்ட நாள் நோக்கில் அது பாதிப்புகளை உண்டாக்கும். நவீன கால வாழ்க்கை முறைகளில் நாம் எந்த நேரமும் ஏதாவது ஒரு நெருக்கடியோடு எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், உடலும் மனமும் எப்போதும் இந்த அதீத அழுத்த நிலையிலேயே நீடிக்கிறது. அதன் விளைவாகத்தான் மனஅழுத்தம் இன்று முக்கியமான பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.
இரண்டாவது, அப்படி எந்தப் புற ஆபத்துகளும் நெருக்கடிகளும் இல்லாத சூழலிலும் உடலில் தன்னிச்சையாக இந்த மனஅழுத்தம் உருவாகிறது. அப்போதும் அது பிரச்சினையாகிறது. இது பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளின் விளைவாக உருவாகக்கூடிய நிலை. மனப்பதற்றம், மனச்சோர்வு, ஃபோபியா போன்ற மனநலச் சீர்கேடுகளின் விளைவாக இந்த நீடித்த மனஅழுத்தம் உருவாகிறது. இந்த மனநலச் சீர்கேடுகளைச் சரியாகக் கண்டறிந்து, அதற்கு முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வதன் வழியாக இப்படிப்பட்ட மனஅழுத்தத்திலிருந்து மீளலாம்.
மனஅழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது?
நம் அன்றாட வாழ்க்கை முறைகளை நாம் முறையாகத் திட்டமிட்டுக்கொள்ளும்போதும், நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய அளவில் நாம் முழுத் தயாரிப்புடனும் அதற்குரிய முன்னேற்பாடுகளுடனும் இருக்குமாறு நாம் நமது தினசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதன் வழியாகவும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ளலாம். நமது பெரும்பாலான நேரத்தை நமது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவே செலவழிக்கிறோம். இதனால், நமது அத்தியாவசியத் தேவைகளுக்காக நாம் செலவிடும் நேரம் குறைந்து அவற்றை சரிவர முடிக்க முடியாத நிலை உருவாகிறது. அத்தியாவசியத் தேவைகளில் ஏற்படும் இந்த இழப்பு, நம்மைப் பதற்றப்பட வைக்கிறது, அது தினசரி வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதன் வழியாக இயலாமையும் நம்பிக்கையின்மையும் தோன்றுகிறது, அது மேலும் பல நெருக்கடிகளை உருவாக்குகிறது. இது போன்ற, சரியாகத் திட்டமிடாத தினசரி வாழ்க்கைதான் நாம் எந்த நேரமும் மனஅழுத்தத்துடன் இருப்பதற்கு முக்கியமான காரணமாகிறது.
மனஅழுத்தம் பிரச்சினையாகாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது?
சரியான திட்டமிடுதலுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
சக மனிதர்களுடன் ஆழமான, ஆரோக்கியமான உறவைப் பேண வேண்டும்.
மனிதர்களை அவர்களின் குறைகளுடன் ஏற்றுக்கொண்டு, அவர்களின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு, இணக்கமாக இருக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உணர்வுகளைப் பக்குவமாக, முதிர்ச்சியுடன் கையாள வேண்டும். முக்கியமாக, மிதமிஞ்சிய நமது உணர்வுகளால் நாமோ மற்றவர்களோ பாதிக்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்களில் சோர்ந்துபோகாமல் அதை எதிர்கொள்வதற்கான அத்தனை முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான நேரத்தில் தூக்கம், சரியான நேரத்தில் உணவு, போன்ற ஒழுங்குடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பச் சாதனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் ஆக்கபூர்வமான நேரத்தைச் செலவிட வேண்டும்.
சமூக வலைதளங்களில் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும்.
மது, புகையிலை போன்ற போதைப் பழக்க வழக்கங்களை மனஅழுத்தத்திலிருந்து மீளும் வழியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
நம்மையும் மீறி நாம் பதற்றமாக இருக்கிறோம் என உணரும்போது, அதற்கான ஆலோசனைகளைப் பெறத் தயங்கக் கூடாது.
நவீன கால வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கம். அதை நாம் ஒரு நோயாகக் கொள்ளத் தேவையில்லை. அதைச் சரியான வகையில் எதிர்கொண்டு மீண்டுவந்தால் போதுமானது. அப்படி மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில்தான் மனஅழுத்தம் ஒரு நோயாக மாறுகிறது. மனிதர்கள் அனைவருக்கும் மனஅழுத்தத்திலிருந்து மீண்டுவருவதற்கான ஆற்றல் இயல்பிலேயே இருக்கிறது. அதனால் மனஅழுத்தத்தைக் கண்டு சோர்ந்துபோகாமல் அதைச் சரியான வகையில் எதிர்கொள்ளும் திறன்களையும் வாழ்க்கை முறையையும் அமைத்துக்கொண்டாலே போதுமானது.
– சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்/ எழுத்தாளர்.
தொடர்புக்கு: sivabalanela@gmail.com