ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான வெளிப்படையான விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (04) தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் பின்னணி தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் வரை நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
அரசாங்கம் உறுதியளித்தபடி, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் குறிப்பாக கர்தினால் காத்திருப்பார்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தினால் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு அதன் மூளையாக செயல்பட்டவர்களை கண்மூடித்தனமாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களோடு ஐக்கிய மக்கள் சக்தி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவுக்கு அதற்கான பலமும் தைரியமும் தொடர்ந்து வழங்கப்பட்ட போதும் அவரது கருத்துக்கள் சிறிதும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
தனக்கும் புலனாய்வுப் பிரிவு பிரதானிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், அவர்களின் அறிவுரைகளை ஏற்று அரசியலில் ஈடுபடும் பழக்கம் தனக்கு இல்லை என்றார்.
Eelamurasu Australia Online News Portal