வரலாறு காணாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடக அமையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “இந்த நாட்டில் உண்மையில் மிக மிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசாங்கம் என்று சொன்னால், அது இதுவாகத் தான் இருக்கும்.
“பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள்.
“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளியிட்டிருந்தார்.
“அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீட் பாதை போடுவதோ, கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி, காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
“அந்த வகையிலே எங்கள் விவசாயிகள் இன்று உரமில்லாமல், களை நாசினிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனினும், அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெறுமனே தென்னங்கன்றுகளைக் கொடுத்து, வளர்க்கச் சொல்லுகின்றார்கள்.
“ஆனால், அந்தத் தென்னங் கன்றுகளுக்கு வண்டு அடித்தால், அதனைத் தடை செய்வதற்கான உரிய கிரிமி நாசினிகள் இங்கு இல்லை. எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது அபிவிருத்தி அரசியல் அல்ல” என்றார்.