வெளிநாடு பயணிகளின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் உலக சுகாதார மையம் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சிகிச்சை முறை பொருட்கள் நிர்வாகம் (டிஜிஏ), ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாவது:-
சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள கோவேக்சின் மற்றும் பி.பி.ஐ.பி.பி. கார்வி ஆகிய தடுப்பூசிகள், ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இந்த தடுப்பூசிகள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குவதாகவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தொற்று பரவும் வாய்ப்புகள் குறைவு எனவும் கூடுதல் தகவல் தெரியவந்துள்ளது.
இதனால், கோவேக்சின் மற்றும் பி.பி.ஐ.பி.பி. கார்வி ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடையின்றி ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டு டோஸ் கோவேக்சின் போட்டுக்கொண்ட 12 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பி.பி.ஐ.பி.பி. கார்வி தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது சர்வதேச மாணவர்கள் நாடு திரும்புவதற்கும், தொழிலாளர்கள் பயணம் செய்வதற்கும் வழிவகை செய்யும்.
மேலும், நவம்பர் 1-ம்தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் பயண விலக்கு பெறாமலே வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
இவ்வாறு அறிவித்துள்ளது.