அவுஸ்ரேலியா உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக ஒரு பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சூசன் கீபெல் ஆவார். அவர் 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். பின்னர் தன் முயற்சியால் பள்ளிப்படிப்பை பகுதி நேர படிப்பாக படித்து தேறினார். தொடர்ந்து சட்டம் படித்தார்.
அப்போது வக்கீல் குமாஸ்தாவாகவும் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். குயின்ஸ்லாந்தில் 1987-ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு மாகாண உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனார். மறு ஆண்டில் பெடரல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இப்போது அவுஸ்ரேலிய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச் ஜனவரி மாதம் ஓய்வு பெறுவதையொட்டி, அந்த இடத்துக்கு சூசன் கீபெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை அந்த நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அப்போது அவர், “நீதிபதி கீபெல்லின் வாழ்க்கை, பலருக்கு உத்வேகமாக அமையக்கூடிய வாழ்க்கை” என்று புகழாரம் சூட்டினார்.
தனது பணி நியமனம் குறித்து கீ பெல் கூறுகையில்,“ 1903-ம் ஆண்டு இந்த கோர்ட்டு உருவான பின்னர் பிரசித்தி பெற்ற பலர் தலைமை நீதிபதி பதவி வகித்துள்ளனர். அவர்களது பாதச்சுவடுகளை பின்பற்றி பணியாற்றுவது எனக்கு கிடைத்துள்ள சிறப்பு வாய்ப்பு ஆகும்” என குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal