தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது.இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது.அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன.

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது.2001, 2004, 2010, 2015, மற்றும் 2020 பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பு இரட்டை இலக்கத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுமத்தை வென்றெடுத்து வந்திருக்கின்றது.

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலிலும் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் பிரதிநிதிகளை கூட்டமைப்பு பெற்றது.

இந்த வெற்றிகளைத் தவிர,2018 உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் 40 க்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டமைப்பு ‘முதலாவதாக ‘ வந்தது.

2021 ஆம் ஆண்டில் இருப்பது 2001 ஆண்டு கூட்டமைப்பு அல்ல.2001 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது நான்கு அரசியல் கட்சிகள் அதிலா அங்கம் வகித்தன.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ( ரெலோ) மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி( ஈ. பி. ஆர். எல்.எவ். ) ஆகியவையே அவையாகும். இவற்றில் தமிழ் காங்கிரஸும் ஈ.பி.ஆர். எல்.எவ்.வும் தற்போது கூட்டமைப்பில் இல்லை.

தமிழர் ஐக்கிய விடுதலை கூடடணியும் மாறுதலுக்குள்ளாகி விட்டது.கூட்டணியின் தலைவரான வீரசிங்கம் ஆனந்தசங்கரி விடுதலை புலிகளின் வற்புறுத்தலை அடுத்து கூட்டமைப்பில் இருந்து “வெளியேற்றப்படார்”.சங்கரி சட்ட வழிமுறைகளின் மூலம் போராடி கூட்டணியின் கட்டுப்பாட்டை தன்னுடன் வைத்துக்கொண்டார்.அதற்கு பிறகு கூட்டணியின் பெரும்பகுதி உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியுடன் சேர்ந்துகொண்ட அதேவேளை சங்கரி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துபோன கூட்டணியின் தலைவராக இருந்துவருகிறார்.

சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட தமிழரசு கட்சி 1976 ஆம் ஆண்டில் இருந்து கூட்டணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக இருந்துவந்தது.2001 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு கூட்டணியின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.2004 ஆம் ஆண்டில் இருந்து அது தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.தற்போது கூட்டமைப்பில் தமிழரசு கட்சி,ரெலோ மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய மூன்று கட்சிகளே அங்கம் வகிக்கின்றன.தற்போதைய பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணம், வன்னி ,திருகோணமலை, அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களே இருக்கிறார்கள். தமிழரசு கட்சியைச் சேர்ந்த அறுவர்,ரெலோவைச் சேர்ந்த மூவர், புளொட்டைச் சேர்ந்த ஒருவர்.

தற்போது ஒரு புறத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையிலும் மறுபுறத்தில் பிரதான அங்கத்துவ கட்சியான தமிழரசு கட்சிக்குள்ளும் குழப்பம் நிலவிவருகிறது.

ரெலோவும் புளொட்டும் தமிழரசு கட்சிக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன.தமிழரசு கட்சிக்குள் இருப்பவர்களுக்கு இடையிலும் பதற்றம் நிலவுகிறது.கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும் போட்டியாளர்களும் ஊடகங்களும் கூட்டமைப்புக்குள் நிலவும் முரண்பாடு பெரிதாக வெடிக்கும் என்ற அபிப்பியாயத்தை கொண்டிருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு உண்மையாக வரும் என்றால் கூட்டமைப்பின் 20வது வருட கொண்டாட்டமே அது ஐக்கியப்பட்ட அணியாக இருக்கப்போகும் இறுதி சந்தர்ப்பமாக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதை மறுதலிக்கும் வேறு தரப்பினர் கூட்டமைப்புக்குள் நிலவும் பிளவுகள் ஒன்றும் புதியவை அல்ல, கூட்டமைப்பின் தொடக்கத்தில் இருந்தே இத்தகைய பிளவுகள் இருந்துவந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள்.

ஆனால், பொதுவில் கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் உள்ளக மற்றும் வெளிச்சவால்களை சந்திப்பதற்கு தற்போதைய தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதாக விடயமறிந்த தமிழ் வட்டாரங்களில் பரவலான கருத்து ஒருமிப்பு இருக்கிறது போன்று தோன்றுகிறது.

இத்தகைய பின்புலத்திலேயே இந்த கட்டுரை கூட்டமைப்பின் மீது கவனத்தை செலுத்துகிறது.கூட்டமைப்பு பற்றிய விடயங்கள் குறித்து நான் ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறேன். ஏனென்றால் இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அரசியல் அணியாக கூட்டமைப்பே விளங்குகிறது.

கூட்டமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி அவ்வப்போது எழுதிய தொடர்ச்சியான கட்டுரைகளின் உதவியுடன் இந்த கட்டுரையை எழுத முனைகிறேன்.கூட்டமைப்பு விடுதலை புலிகளின் உருவாக்கம் என்ற பரவலான நம்பிக்கைக்கு மாறாக அது சுயாதீனமாக (விடுதலை புலிகளின் ஜாக்கிரதையுடனான மறைமுக ஆதரவுடன் ) உருவாக்கப்பட்ட ஒரு அணியாகும்.அதற்கு பிறகுதான் விடுதலை புலிகள் கூட்டமைப்பை கட்டுப்படுத்த தொடங்கினார்கள்.அதனால் இந்த கட்டுரை கூட்டமைப்பு 2001 அக்டோபர் 22 எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதை அதன் இருபதாவது வருடாந்த நிறைவில் விளக்குகிறது.

2001தேர்தல் முடிவுகள்

கூட்டமைப்பின் தோற்றுவாய் கிழக்கிலேயே இருந்தது.2000 அக்டோபர் 10 பாராளுமன்ற தேர்தலே அதை தூண்டிவிட்ட காரணியாகும். அந்த தேர்தலின் முடிவுகள் பொதுவில் தமிழர்களுக்கும் குறிப்பாக தமிழ் கட்சிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன.

அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழர் எவரும் தெரிவாகவில்லை.மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியைச் சேர்ந்த இருவர் மாத்திரமே தெரிவாகினர்.ஆளும் பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இன்னொரு தமிழரும் வெற்றி பெற்றார்.அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி. டி. பி.)ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டார்.

6 ஆசனங்களைக் கொண்ட வன்னியில் இரு சிங்களவர்களும் (ளும் கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் சேர்ந்தவர்கள்) முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் தெரிவாகினர். ரெலோவைச் சேர்ந்த இருவரும் பளொட்டைச் சேர்ந்த ஒருவருமாக மூன்று தமிழ் எம். பி.க்கள் தெரிவாகினர்.அந்த நாட்களில் ஒன்பது ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈ. பி. டி. பி.போனஸ் ஆசனம் உட்பட நான்கு ஆசனங்களையும் கூட்டணி மூன்று ஆசனங்களையும் பெற்றன.அதேவேளை, தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் ஐ.தே.க. ஒரு ஆசனத்தையும் பெற்றன.

தேசியப்பட்டியல் ஆசனமொன்றைப் பெறக்கூடியதாக போதுமான வாக்குகளை எந்தவொரு தமிழ் கட்சியும் பெறவில்லை.2000 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்தது.மேலும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசிய கட்சிகளும் அரசாங்கத்துடன் சேர்ந்திருந்த ஈ.பி.டி.பி. போன்ற கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றன. அரசாங்கத்தைச் சாராத தமிழ்க்கட்சிகளின் பின்டைவுக்கான ஒரு காரணம் அவற்றுக்கிடையிலான ஐக்கியமின்மையும் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையும் உத்வேகத்தை தரக்கூடிய அரசியர் நிகழ்ச்சி திட்டம் இன்மையுமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக கருத்தரங்கு

நிலைவரத்தின் பாரதூரத்தன்மை பெரும்பாலும் ஒரே இனத்தவர்களே வாழும் வடக்கையும் விட மூவினத்தவர்களும் வாழும் கிழக்கில் கடுமையாக உணரப்பட்டது. நிலைவரத்தை ஆராயும் கருத்தரங்கொன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.டெயிலி மிறர் பத்திரிகையின் முன்னாள் பத்தியாளர் தர்மரத்தினம் சிவராம் என்ற தராக்கி அதற்கு தலைமை தாங்கினார்.பல கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என்று பல தரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.வாக்குகள் சிதறடிக்கப்படுவதை தடுக்க எதிரணியில் உள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு அணியில் ஐக்கியப்படவேண்டும் என்று கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது. அந்த அணி விடுதலை புலிகளுக்கு ஆதரவானதாக இருக்கவேண்டும் என்றும் ஒரு குடையின் கீழ் அணிதிரளும் இந்த முயற்சிக்கு புலிகளின் ஆதரவு பெறப்படவேண்டும் என்றும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.இந்த பணியை ஒருங்கிணைப்பதற்கு பிரதானமாக பத்திரிகையாளர்கள்,கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவும் மூவரைக்கொண்ட கூட்டு தலைமைக்குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த கடினமான முயற்சி மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருந்தது.முதலாவதாக,விடுதலை பலிகளின் அங்கீகாரமும் மறைமுகமான ஆதரவும்.எதிரணியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்படமாட்டார்கள் என்ற விடுதலை புலிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் இதற்கு தேவைப்பட்டது.அதற்கு பிரதியுபகாரமாக இந்த தமிழ் கட்சிகள் விடுதலை புலிகளின் முதன்மை நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்ததுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலை புலிகளை அங்கீகரிக்கவேண்டும்.

இரண்டாவதாக,ஈ. பி. ஆர்.எல்.எவ்., ரெலோ மற்றும் புளொட் போன்ற தீவிரவாத வரலாற்றைக் கொண்ட தமிழ் கட்சிகள் ஆயுதங்களை கீழே வைப்பதாகவும் விடுதலை புலிகளை வேட்டையாடுவதற்கு அரசுடன் ஒத்துழைப்பதில்லை என்றும் பிரகடனம் செய்யவேண்டியிருந்தது.இந்த கட்சிகள் ராசீக் குழு ( ஈ.பி. ஆர். எல். எவ்.), மோகன் குழு( புளொட்) மற்றும் ராஜன் குழு( ரெலோ) போன்ற துணை இராணுவக்குழுக்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை துண்டிக்கவேண்டியுமிருந்தது.மூன்று குழுக்ககளும் கிழக்கில் அப்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தன.

மூன்றாவதாக,தீவிரவாதிகள் அல்லாத தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி,தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முனானாள் தீவிரவாத குழுக்களுடன் ஒரு பொது முன்னணியில் சேர்ந்து செயற்படவேண்டியிருந்தது.முன்னாள் தீவிரவாத குழுக்களின் கரங்கள் இரத்தக்கறை படிந்தவை என்று உணர்ந்ததால் இவ்விரு கட்சிகளும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட தயக்கம் காட்டின.இது தவிர கூட்டணி ஆயுதமற்ற ஜனநாயகத்தை வேண்டிநின்றது.தமிழ் காங்கிரஸுக்கும் தமிழரசு கட்சி/கூட்டணிக்கும் இடையில் ஒரு நீண்ட பகைமை வரலாறும் இருந்தது.

கூட்டணியின் அச்சம்

கூட்டணியும் அதன் 1989 அனுபவம் காரணமாக அச்சம் கொண்டிருந்தது.புதுடில்லியின் நெருக்குதல் காரணமாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி( ஈ.என்.டி.எல். எவ்.)., ரெலோ,ஈ.பி.ஆர்.எல். எவ். போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட்டணியின் வேட்பாளர்களுடன் சேர்ந்து கூட்டணியின் சூரியன் சின்னத்தின் கீழ் பாராளுமன்ற தேர்தலில்போட்டியிட்டன. ஆனால், கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்கள் எவரும் வெற்றி பெறவில்லை.அப்பாபிள்ளை அமிருதலிங்கம் மாத்திரம் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்றார்.(அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டார்)

வன்னியில் இருந்த விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை செயன்முறைகளில் நேரடியாக சம்பந்தப்படவில்லை.ஆனால், மட்டக்களப்பு–அம்பாறைக்கான விடுதலை புலிகளின் அரசியல் பிரவு தலைவர் கரிகாலன் ஆதரவாக இருந்து பேச்சுவார்த்தைகளில் மறைமுகமாக சம்பந்தப்பட்டார்.பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தவேளையில் கூட ஆரையம்பதி பிரதேசசபையின் தலைவரான ரெலோவைச் சேர்ந்த “ரொபேர்ட்” விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டார்.(இந்த ரொபேர்ட் 2002 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை புலிகளினால் கொல்லப்பட்ட ஈ. பி. ஆர். எல்.எவ்.ரொபேர்ட்டை விட வேறுபட்டவர்)அந்த கொலை ரெலோவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.அதன் விளைவாக ஐக்கிய பேச்சுவார்த்தைகளில் இருந்து ரெலோ வெளியேற விரும்பியது.

எவ்வாறெனினும் வழிகாட்டல் குழு தொடர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுத்ததுடன் கிழக்கில் விடுதலை புலிகளின் இராணுவ தலைமைத்துவத்துவத்திடம் வேண்டுகோளும் விடுத்தது.அப்போது விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்திய இராணுவ தளபதியாக இருந்தவர் வேறு யாரும் அல்ல, விநாயகமூர்த்தி முரளிதரன் என்றகேணல் கருணா அம்மான்தான். புலனாய்வு பிரிவினருக்கும் அரசியல் பிரிவினருக்கும் இவையிலான தொடர்பாடலில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக ஏற்பட்ட தவறு என்று அந்த கொலைக்கு விடுதலை புலிகள் ” விளக்கம் ” கூறினர்.

இதைத் தொடர்ந்து ரெலோவையும் ஈ.பி.ஆர்.எல். எவ்.வையும் சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் கரிகாலனை இரகசியமாக சந்தித்து விடயத்தை ஆராய்ந்தனர். உறுதிமொழிகள் பெறப்பட்டன.அதே போன்றே கூட்டணி பிரமுகர்களும் விடுதலை புலிகளின் தலைவர்களைச் சந்தித்து பேசினர்.

இரண்டு சிறு சிக்கல்கள் ஏற்பட்டன. தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஐக்கியத்தை விரும்பியபோதிலும் அதன் செல்வாக்குமிக்க தளப்பிரதேசமான வவுனியாவில் உள்ள உறுப்பினர்கள் அங்கு செல்வாக்கு மிக்க இன்னொரு இயக்கமான ரெலோவுடன் அணி சேருவதற்கு விரும்பவில்லை.அதே போன்றே ரெலோவின் உயர்மட்டமும் வன்னியில் தங்களின் ஆதரவு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் புளொட்டுடன் ஐக்கியப்படுவதற்கு தயங்கியது.இறுதியில் புளொட் அல்லது அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்.) ஐக்கிய முயற்சிகளில் இருந்து விலகிக்கொண்டது.

இரண்டாவது சிக்கல் தமிழ் காங்கிரஸுக்கும் தமிழரசு கட்சி/ கூட்டணிக்கும் இடையிலான வெறுப்பாகும்.சகல கட்சிகளும் கூட்டணியின் சூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு பதிலாக தனது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று தமிழ் காங்கிரஸ் விரும்பியது.
2000 ஜனவரியில் தனது கணவரான குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டதையடுத்து தமிழ் காங்கிரஸில் ஆதிக்கம் மிக்க ஆளுமையாக வைத்திய கலாநிதி யோகலக்சுமி பொன்னம்பலம் விளங்கினார்.அவரது வீட்டில் நடைபெற்ற நீண்ட கலந்தாலோசனைக்கு பிறகு கட்சிகளின் ஐக்கியத்துக்கு இணங்கியதுடன் சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்தார்.அதேபோன்றே கூட்டணியில் இருந்த சில பிரமுகர்களும் தமிழ் காங்கிரஸுடனும் முன்னாள் தீவிரவாத குழுக்களுடனும் ஐக்கியப்படுவதற்கு தயக்கம் காட்டினர்.ஆனால்,நாளடைவில் அவர்களின் மனமும் மாற்றப்பட்டது.

பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டங்களில் வன்னியில் உள்ள விடுதலை புலிகள் நேரடியாக பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டனர்.கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ,ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஆகிய கட்சிகளின் சில தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளப்பட்டு கூட்டணியின் சூரியன் சின்னத்தின் கீழ் ஐக்கியப்பட்டு போட்டியிடுமாறு வலியுறுத்தப்பட்டது.பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைய விடுதலை புலிகள் காரணியாயமைந்தனர்.

செயல்முறை இணக்கப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அணியை உருவாக்குவதற்கு கூட்டணி, தமிழ் காங்கரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ்.மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளிடையே ஒரு செயல்முறை இணக்கப்பாடு காணப்பட்டது. கூட்டமைப்பு சூரியன் சின்த்தின் கீழ் போட்டியிடும் என்று முடிவானது. 2001 அக்டோபர் 22 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதயம் அறிவிக்கப்பட்டது.அந்த ஊடக அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஆகிய கட்சிகளின் சார்பில் முறையே இரா.சம்பந்தன், என்.குமரகுருபரன்,என்.ஸ்ரீகாந்தா, கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் கச்சாத்திட்டனர். ஊடக அறிக்கையில் நான்கு முக்கிய அம்சங்கள் அடங்கியிருந்தன.முதலாவது அம்சம் பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு பற்றியதாகும்.அந்த ஏற்பாடு வருமாறு;

யாழ்ப்பாணம்–கூட்டணி –7,தமிழ் காங்கரஸ் –3, ரெலோ –1,ஈ.பி.ஆர்.எல்.எவ் –1
வன்னி — கூட்டணி –3,தமிழ் காங்கிரஸ்–1, ரெலோ–4, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–1,
மட்டக்களப்பு– கூட்டணி — 5, தமிழ் காங்கிரஸ் –1,ரெலோ –2, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–1
திருகோணமலை– கூட்டணி — 3, தமிழ் காங்கிரஸ்– 1,ரெலோ –2, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–0
திகாமடுல்ல — கூட்டணி –5,தமிழ் காங்கிரஸ் –1,ரெலோ–1, ஈ.பி.ஆர்.எல்.எவ்.–0

இரண்டாவது அம்சம் தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் நியமனம் பற்றியது.இதற்கான முன்னுரிமை ஒழுங்கு கூட்டணி,தமிழ் காங்கிரஸ், ரெலோ மற்றும் ஈ. பி.ஆர்.எல்.எவ்.என்று அமைந்தது.கூட்டமைப்பு பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் அதற்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்குமானால் அது கூட்டணிக்கே செலலும்.இரண்டாவது தேசியப்பட்டியல் ஆசனம் கிடக்குமானால் அது தமிழ் காங்கிரஸுக்கே செல்லும்.

டி.பி.எஸ்.ஜெயராஜ்