2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 பேரில் ஐம்பது வீதமானோர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். அன்றுஇ 633,654 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு 2009க்குப் பின்னர் கதிரை அரசியலுக்கு மாறி கடந்த வருடத் தேர்தலில் 327,168 வாக்குகள் மட்டும் பெற்று பத்து ஆசனங்களுடன் சரிவு நிலைக்கு வந்துள்ளது. ‘கட்டாக்காலி’ அரசியலால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாக கூட்டமைப்பு ஆகிவிட்டது.
1940க்குப் பின்னரான இலங்கைத் தமிழர் அரசியலில் முதலில் தோற்றம் பெற்ற அரசியல் கட்சி ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ். 1944 ஆகஸ்ட் மாதம் இக்கட்சி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இக்கட்சியின் கொள்கை தமிழ்த் தேசியம் என்று அன்றே பதிவிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இக்கட்சியில் அங்கம் வகித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சி.வன்னியசிங்கம், செனட்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் பிரிந்து சென்று 1949ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தனர். இதனை சமஸ்டிக் கட்சி என்றும் அழைத்தனர்.
ஆனால்இ 1972ல் இவ்விரு கட்சிகளும் காலத்தின் தேவை கருதி, தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கின.
1976ல் இந்த முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக மாறியபோது, தொண்டமான் நியாயமான காரணத்தைக் கூறி அதிலிருந்து விலகினார். வடக்கும் கிழக்கும் இணைந்த தனிநாட்டுக் கொள்கைக்கு தமது மலையகம் அதன் புவியியல் அமைப்பு ரீதியாக சேர்ந்திருக்க முடியாதென்பதே தொண்டமான் கூறிய காரணம்.
எனினும், 1977ம் ஆண்டு வரலாற்றுமிக்க பொதுத்தேர்தலில் தொண்டமான் தமது தார்மீக ஆதரவை கூட்டணிக்கு வழங்கினார். வடக்கு கிழக்கில் சூரியன் உதிக்கும்போது மலையகத்தில் சேவல் கூவும் என்பது இவரது அறிவிப்பாக அமைந்தது. (கூட்டணியின் சின்னம் உதய சூரியன், தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸின் சின்னம் சேவல்).
இதன் அடுத்த கட்டமாக, 2001ம் ஆண்டு அக்டோபரில் உருவான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததோடு சிங்கள தேசத்தையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.
இந்த மாதத்தின் மூன்றாவது வாரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகி இரு தசாப்தங்கள் (இருபது ஆண்டுகள்) முடிவடைந்துள்ள வேளையில், அதன் ஆரம்பம், செல்நெறி, நிகழ்காலப் போக்கு என்பவைகளை மீள்பார்வை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
போராளியாக அறிமுகமாகி ஊடகவியலாளராக மிளிர்ந்த தராக்கியின் (தர்மரட்ணம் சிவராம்) பங்கு இதன் உருவாக்கத்தில் அதிமுக்கியமானது. கனடிய தலைநகரான ஒட்டாவாவில் இடம்பெற்ற தமிழர் தேசிய மாநாடு ஒன்றில் பங்குபற்றிய தராக்கியுடன், ஒரே வாகனத்தில் ரொறன்ரோவரை இப்பத்தி எழுத்தாளர் பயணம் செய்தவேளை இதுபற்றிய வரலாற்றினை அவர் சொல்லக் கேட்க முடிந்தது.
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி தராக்கியை சிங்கள அரச பயங்கரவாதம் கொன்றொழித்திருக்காவிட்டால், கூட்டமைப்பின் தோற்றுவாய் உட்பட்ட வரலாற்றுக்கு அவரே நிகழ்காலச் சாட்சியாக இருந்திருப்பார். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லையென்று கூறுபவர்களுக்கும், கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கியது தமக்குத் தெரியாதென்று கை விரிப்பவருக்கும் தராக்கி நேர்நின்று சாட்டையடி கொடுத்திருப்பார்.
2001ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பை பின்னால் நின்று உருவாக்கியது விடுதலைப் புலிகள் என்பது அதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்களது வாதம். கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம் வகித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே மூத்த அரசியல் கட்சியாக இருந்ததால், அதனுடைய சின்னமான உதயசூரியனில் அத்தேர்தலைச் சந்திக்க இணக்கம் காணப்பட்டது.
2001ம் ஆண்டுத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலுமாக 348,146 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு பதினைந்து ஆசனங்களைப் பெற்றது. 2002ல் விடுதலைப் புலிகளும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் சமாதான பேச்சுவார்த்தை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதையடுத்து, விடுதலைப் புலிகளின் அரசியல் வகிபாகம் முக்கியத்துவம் பெற்றது.
இந்த வகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக விடுதலைப் புலிகளின் அரசியல் வடிவமானது. இதனை ஏற்றுக் கொள்ளாத கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி அதன் தேர்தல் சின்னமான உதயசூரியனை கூட்டமைப்பு தொடர்ந்து பயன்படுத்த மறுத்ததோடு கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொண்டார்.
2004ம் ஆண்டுத் தேர்தலின்போது கூட்டமைப்புக்குள்ளிருந்து விலகிய கூட்டணியின் வெற்றிடத்தை தமிழரசுக் கட்சி நிரப்பியது. இதனால் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேசமயம் கூட்டமைப்பு என்பது சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது.
‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகதலைமை” என்று நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறலாயினர். வன்னியிலிருந்து அழைப்பு வந்தபோதெல்லாம் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பினர் சென்று ஆலோசனைகள் பெற்று இயங்கினர். இச்சந்திப்புகளுக்கு இரா.சம்பந்தன் சென்று வந்தார்.
2004ம் ஆண்டுப் பொதுத்தேர்தலின்போது விடுதலைப் புலிகள் கூட்டமைப்பை மக்கள் இயக்கமாக மாற்ற விரும்பி அதற்கேற்றவாறு அபேட்சகர்களை நியமித்தனர். கூட்டமைப்பில் இடம்பெற்ற அரசியல் அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட எண்ணிக்கைக்கு நிகராக பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் வேட்பாளர்களாக நியமித்தனர்.
மாணவர் – இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கடற்றொழிலாளர் அமைப்பு, போக்குவரத்துத்துறைசார் அமைப்பு, பனம்பொருள் உற்பத்தியாளர் அமைப்பு, ஊடகவியலாளர் – கல்வியாளர் – சமூகப்பணியாளர் பிரிவுகள் என்ற வகையில் அந்தத் தெரிவு இடம்பெற்றது.
2004ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற 22 பேரும் மொத்தமாக 633,654 வாக்குகளைப் பெற்றனர். இதுவே கூட்டமைப்பு இதுவரை பெற்ற ஆகக்கூடிய வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 பொதுத்தேர்தலில் எவருமே பொது அமைப்புகளைச் சார்ந்தவர்களாக இருக்கவில்லை. ஆனால், 2004 பொதுத்தேர்தல் வெற்றி மாறுபட்டதாக அமைந்தது. வெற்றி பெற்ற 22 பேரில் ஐம்பது வீதமானோர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். கே.சிவநேசன், பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், சொலமன் சிறில், சதாசிவம் கனகரத்தினம், கே. பத்மநாதன், தோமஸ் வில்லியம், தங்கேஸ்வரி கதிரமன், தமன்பிள்ளை கனகசபை, எஸ்.ஜெயனந்தமூர்த்தி, பி.அரியநேந்திரன் ஆகியோர் இவர்கள். (இவர்களில் சிலர் அடுத்த தேர்தலில் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து கொண்டனர்).
இந்தத் தேர்தல் முடிவு கூட்டமைப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்த தமிழரசுக் கட்சிக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. அதுமட்டுமன்றி சில கட்சிகளை கூட்டமைப்பிலிருந்து அவர்களைத் தாமாகவே வெளியேற வைக்கும் சூழ்ச்சியையும் மேற்கொண்டு தமிழரசுக் கட்சி வெற்றி கண்டது.
2009 முள்ளிவாய்க்கால் போர் உறைநிலைக்குச் சென்ற காலம்வரை அடக்கியும் அடங்கியும் இயங்கிய தமிழரசுக் கட்சி, அதன் பின்னர் ‘கட்டாக்காலி|’ அரசியலை முன்னெடுத்தது. இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூற முடியும்.
2009வரை கூட்டமைப்புக்கு தலைவரென எவருமே நியமிக்கப்படவில்லை. நாடாளுமன்ற அமர்வின் தேவைக்காக மட்டும் இதன் நாடாளுமன்ற குழுத் தலைவராக திருமலை எம்.பி. இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.
2009வரை கூட்டமைப்புக்கு பேச்சாளர் எவரும் இருக்கவில்லை. அதனை விடுதலைப் புலிகள் சிந்திக்கவும் இல்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தங்கள் தங்கள் பணிகளை தாமே கவனித்துக் கொண்டன. ஆனால், 2010ல் தேசியப் பட்டியல் வழியாக பின்கதவால் நுழைந்த சுமந்திரனை அதன் பேச்சாளராக சம்பந்தன் நியமித்து ஆசீர்வதித்தார்.
2010 தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், அதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறின (வெளியேறும் சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது). இதிலிருந்து கூட்டமைப்பின் கீழிறக்கம் ஆரம்பமானது. விடுதலைப் புலிகளால் ஆரம்பத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட புளொட்டை கூட்டமைப்பு உள்வாங்கிக் கொண்டது அடுத்த கட்டம். 2010ம் ஆண்டின் பின்னர் படிப்படியாக சரிவு நிலைக்குச் சென்ற கூட்டமைப்பு இறுதியாக இடம்பெற்ற 2020 தேர்தலில் 10 ஆசனங்களை மட்டுமே வெற்றி கண்டது.
கூட்டமைப்பின் தலைவரென அழைக்கப்படும் இரா. சம்பந்தனின் மேலாதிக்க மடாதிபதிநிலை அரசியல் போக்கும், பேச்சாளரான சுமந்திரனின் தன்னாதிக்க அரசியல் செயல்பாடுமே இன்று அதன் உட்பூசல்களை அதிகரிக்க வைத்துள்ளது.
இவ்விடத்தில் சம்பந்தனின் தமிழீழ அரசியல் தடத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். 1977ம் ஆண்டுத் தேர்தலிலேயே இவர் முதன்முறையாக திருமலையில் வெற்றி பெற்றார். ஆனால் 1989, 1994ம் ஆண்டுத் தேர்தல்களில் இவரால் வெற்றிபெற முடியவில்லை. 1994ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தங்கத்துரை 1997ல் காலமானதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு இவர் நியமனமானார். ஆனால், 2000ம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் தோல்வியையே தழுவினார்.
2001ம் ஆண்டில் கூட்டமைப்பினூடாகவே இவரால் திருமலையில் வெற்றி பெற முடிந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றாராயினும், 2020ம் ஆண்டுத் தேர்தலில் அருந்தப்பில் வெற்றி பெற்றார். திருமலை மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்றைய கட்சிகளின் மூன்று உறுப்பினர்களுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் 21,422 வாக்குகளை மட்டுமே இவரால் பெற முடிந்தது.
”விடுதலைப் புலிகள் போட்ட பிச்சையால் சம்பந்தன் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது” என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணிப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டது அவருக்கு நினைவூட்டவே.
கூட்டமைப்பின் இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும் பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறைய விடயமுண்டு. ஆனால், இப்பத்தியின் விரிவஞ்சி, இன்னொரு சந்தர்ப்பத்தில் அவைகளை எழுத விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமை அணியாக அறுகுபோல் வேரூன்றி, ஆல்போல் விழுதெறிந்து தமிழ்த் தேசியத்தின் அரணாக இயங்குகிறதா?
அல்லது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போகிறதா? இதற்கான பதில் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் நன்கறிந்தது.