சென்னையில் நடந்த ‘2.0’ படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
‘கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘2.0’. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியின் முந்தைய படைப்பான ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகமாக இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக ‘2.0’ படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகலில் இருந்து படப்பிடிப்பு சென்னை அருகே மேலகோட்டையூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் அருகே நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை முடிந்த சில நிமிடங்களிலேயே அவர் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.