வெளிநாடுகளிலிருந்து விக்டோரியா திரும்பும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், விடுதிகளிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீக்கவுள்ள பின்னணியில் விக்டோரியாவும் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன்படி நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் விக்டோரியா வரும் ஆஸ்திரேலியர்கள்(முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்) மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் விடுதிகளில்/வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை.
விமானப் பயணம் மேற்கொள்ளும் நபர், குறித்த பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் கோவிட் சோதனையில் எதிர்மறை முடிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், விக்டோரியா வந்திறங்கிய 24 மணிநேரங்களுக்குள் கோவிட் சோதனையை மேற்கொள்வதற்கு இணங்கும் பட்சத்தில் அவர் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார் என Premier Daniel Andrews தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள நோய்நிலைமைகளால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும்கூட கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என குறிப்பிடப்படுகிறது.
இனிவரும் நாட்களில் கட்டாய விடுதி தனிமைப்படுத்தல் திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடுதிகளே பங்கேற்கும் எனவும், தடுப்பூசி போட்டிராத அல்லது ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தனிமைப்படுத்தவென இவ்விடுதிகள் பயன்படுத்தப்படும் எனவும் Daniel Andrews தெரிவித்தார்.
பின்வரும் தடுப்பூசிகள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கபடுகின்றன.
• Pfizer (Comirnaty)
• AstraZeneca (Vaxzevria)
• Moderna (Spikevax)
• COVID-19 Vaccine Janssen (Johnson and Johnson)
• Coronavac (Sinovac)
• Covishield (AstraZeneca/Serum Institute of India)