இந்திய அழுத்தம் – மாகாண சபைத் தேர்தலுக்கு, இலங்கை ஆயத்தமா?

இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது.

இலங்கை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியத் தரப்பில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு, இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருக்கு, இலங்கையின் சில கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்திய அரசின் அழுத்தத்தால் தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவிக்கிறது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்காக ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

அத்துடன், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

கடந்த அரசாங்கமான ‘நல்லாட்சி’ காலப் பகுதியிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது போன பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தினாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை காணப்பட்டது. (மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.)

மாகாண சபைத் தேர்தல் முறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் மற்றும் கோவிட் பரவல் ஆகிய காரணங்கள், மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான காரணியாக அமைந்திருந்தது.

குறிப்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையினால், தேர்தலை நடத்தாத பிரதான காரணமாக அமைந்திருந்தது. இந்த சட்டமூலம் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

விகிதாசார மற்றும் கலப்பு முறையில் மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்வது, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், தேர்தல் தொகுதிகளை வரையறுப்பதற்காக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

கொரோனா நெருக்கடிக்கு நடுவே இலங்கை 2020ல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது.
படக்குறிப்பு,கொரோனா நெருக்கடிக்கு நடுவே இலங்கை 2020ல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது. (கோப்புப்படம்)

எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பின்னணியிலேயே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலை நடத்துவதற்கு மாற்று திட்டங்கள் முன்வைப்பு

மாகாண சபைத் தேர்லை நடத்துவதற்கு இரண்டு மாற்று திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • எல்லை நிர்ணயத்தை நிறைவு செய்து, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல்.
  • புதிய சட்டமூலமொன்றின் ஊடாக, பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துதல்.

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு அண்மையில் கூடியுள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு யோசனைகள் தொடர்பில், தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சட்ட மாஅதிபரின் நிறைப்பாட்டை கோரியுள்ளார்.

சட்டமொன்றை நிறைவேற்றாமல், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்ட மாஅதிபர், தெரிவுக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஏனைய கட்சிகளுடன் க லந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழைய முறைப்படி தேர்தலை நடத்த தீர்மானம்?

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடத்துவதற்கு தற்போது பல கட்சிகள் இணக்கம் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் விவாதிக்கப்படவுள்ளமையினால், வரவு செலவுத்திட்ட விவாதம் நிறைவடைந்ததன் பின்னர், தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் பழைய முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டமூலம் நிறைவேற்றப்படும் நாள் முதல், எதிர்வரும் ஓரிரு மாதங்களில் தேர்தலை நடத்த கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு அனைத்து கட்சிகளும் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

சிறிய சட்ட திருத்தத்தின் ஊடாக, பழைய முறையின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என தான் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

எம்..ஏ.சுமந்திரன்

இந்த சட்ட திருத்தம் தொடர்பிலான சட்டமூலமொன்றை தான் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்திருந்ததாக அவர் கூறுகின்றார்.

பழைய முறையின் பிரகாரம், தேர்தலை நடத்த முடியும் என்ற விதத்தில் சட்ட மாஅதிபர் பதிலளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திற்கு வருகைத் தந்திருந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தமக்கு பல அழுத்தங்கள் காணப்படுவதாக அன்றைய கூட்டத்தில் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு, தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னணியிலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு

பழைய முறையின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதனை தாம் முழுமையாக வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

V. Radhakrishnan

இந்திய வெளியுறவுத்துறை செயலாளரினால் இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்களே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம் என அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எட்டியதன் பின்னணியில், 100 வீதம் இந்தியாவின் அழுத்தம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், அண்மையில் நிறைவடைந்த ஐ.நா பொதுச் சபை கூட்டத்தின் போதும், இதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கூறுகின்றார்.

சிறுபான்மை கட்சிகள் இந்தியாவிடம் விடுத்த கோரிக்கை

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயத்தின் போது, அவரை அதிகாரபூர்வமாக சந்தித்த தமிழ் கட்சிகள், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்; முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமை மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இந்த கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருந்தனர்.

இந்தியாவின் நிலைப்பாடு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்களை பகிர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயத்தின் பின்னர், இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்மானிப்பது இந்தியாவா இலங்கை நாடாளுமன்றமா?

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுச் செயலர்
படக்குறிப்பு,இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுச் செயலர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா எந்தவிதத்திலும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது, எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.

புதிய சட்டமூலமொன்றை கொண்டு வந்து, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு என்ன சொல்கிறது?

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து அரசாங்கம் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் வசமானது எனவும் அவர் கூறுகின்றார்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே, தமக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், நாட்டின் கோவிட் நிலைமை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே, தமக்கு தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எட்ட முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக