உலக போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன. -7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன.
துபாயில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறும் தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடிய லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினர். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், பும்ரா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். புவனேஷ்வர்குமார் 54 ரன்கள் வாரி வழங்கியதுடன் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆர்.அஸ்வின் பந்துவீச்சில் சிக்கனத்தை காட்டினார்.
கடந்த ஆட்டத்தில் விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர், சுழற்பந்து வீச்ச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக தனது பேட்டிங் வரிசையை சோதித்து இறுதி செய்ய இந்திய அணி இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும்.
ஆஸ்திரேலிய அணி தனது முந்தைய பயிற்சி ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருக்கையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், மேத்யூ வேட் தவிர மற்றவர்கள் கணிசமாக பங்களிப்பை அளித்தனர். ஜோஷ் இங்லிஸ் கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டி அணி வெற்றி இலக்கை கடக்க உதவினார்.
ஐ.பி.எலில் சோடை போன வார்னர், முதலாவது பயிற்சி ஆட்டத்திலும் டக்-அவுட் ஆனது அந்த அணி நிர்வாகத்துக்கு கவலை அளித்துள்ளது. இனி வார்னர் அவ்வளவு தான் என்ற விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. ஆனால் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள சக வீரர் மேக்ஸ்வெல், ‘வார்னரின் திறமை மீது சந்தேகப்பட்டால் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தற்போதைய நிலைமையை மாற்றப்போகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டார். நிறைய ரன்கள் குவித்துள்ளார். எங்கள் அணியில் மிகப்பெரிய வீரராக அவர் இருப்பார்’ என்றார்.
இரு அணியிலும் தரமான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் களம் காணுகின்றன.