நூறு தொகுதிகளைக் கொண்டிருக்கும் ‘மகாத்மா காந்தி எழுத்துகளின் தொகுப்’பின் (The Collected Works of Mahatma Gandhi- CWMG) முதல் தொகுதியில் முதல் பதிவே ஒரு பாவமன்னிப்பைப் பற்றிய நினைவுகூரல்தான்: “என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி, என் தந்தையிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி, நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்குத் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இனி திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்துகொண்டேன்.” தான் படுகொலை செய்யப்படும் வரைக்கும் தன் வாழ்க்கையை ஆழமான சுயபரிசோதனை செய்துகொண்டிருந்த ஒரு காந்தியை, 15 வயது காந்தியிடம் அடையாளம் கண்டுகொள்வதற்கு நமக்குக் கிடைத்த ஆவணமே அவரது தொகுப்பு நூல்களின் முதல் பதிவாக இருப்பது எவ்வளவு பொருத்தம்.
அந்தப் பாவமன்னிப்பில் ஆரம்பித்த அவரது எழுத்துப் பயணம், அவர் சுட்டுக்கொல்லப்படும் நாள் வரை நீடித்தது. அவர் கைப்பட எழுதியது, அவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதியது, அவர் ஆற்றிய உரைகள், தந்திகள், முறையீடுகள், விண்ணப்பங்கள், மனுக்கள், குறிப்புகள், பத்திரிகைத் தலையங்கங்கள், மௌனவிரத நாட்களின் குறிப்புகள், கட்டுரைகள், கூற்றுகள், நேர்காணல்கள், உரையாடல்கள், கடிதங்கள் என்று அவருடைய எழுத்தின் வகைமைகளும் வெளிப்பாட்டு முறைகளும் மிகவும் பரந்தவை. அவைதான் அவரது தொகுதி நூல்களின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை நிரப்பியிருக்கின்றன. தன் காலத்தில் மிக அதிகமாகச் செயல்பட்டவர் மட்டுமல்ல காந்தி, மிக அதிகமாக எழுதியவரும்கூட. இங்கிலாந்தில் சட்டம் பயின்றபோது ‘தி வெஜிடேரியன்’ இதழில் எழுதத் தொடங்கினார். அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையைத் தொடங்கி, அதில் பெரும்பாலும் அவரே எழுதினார். இந்தியா திரும்பிய பிறகு அவர் தொடங்கிய ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய பத்திரிகைகளிலும் அவரே பெரும்பாலும் எழுதினார். கூடவே, ‘இந்திய சுயராஜ்ஜியம்’, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’, ‘சத்திய சோதனை’ போன்ற நூல்களும் எழுதியிருக்கிறார். சிக்கனம் கருதி, கிடைத்த தாள்களிலெல்லாம் காந்தி எழுதினார். அந்தத் தாள்கள், கடிதங்கள் உலகெங்கும் ஆயிரக்கணக்கானோரிடம் போய்ச் சேர்ந்தன.
இப்படி எல்லாவற்றையும் தொகுப்பது என்பது சாதாரணமான வேலை இல்லை. காந்தியின் துணிவில் சிறு அளவேனும் இதற்கு வேண்டும். காந்தியம் ஆன்மாவில் ஊறியிருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் இந்தத் தொகுப்பு நூல் வேலையில் ஈடுபட முடியும். நல்வாய்ப்பாக காந்திக்கு அப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் கிடைத்தார்கள். அவர்களின் தன்னலமற்ற கடும் உழைப்பும் நிபுணத்துவமும் இல்லையென்றால், 100 தொகுதிகளும் சாத்தியமாகியிருக்காது.
மாபெரும் பணி
மனித குல வரலாற்றில் மிகப் பெரிய உழைப்பு செலுத்தப்பட்ட நூல்களுள் ஒன்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. அதைப் போன்றதொரு பணிதான் காந்தி நூல்களின் தொகுப்பும். காந்தி படுகொலை செய்யப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே, காந்தியத்தை வருங்காலத்துக்குக் கொண்டுசெல்வதற்கு அவரது எழுத்துகள் தொகுக்கப்பட வேண்டும் என்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறினார். அதையடுத்து, அப்போதைய பிரதமர் நேரு இந்தப் பணியில் மிகுந்த தீவிரத்தைக் காட்டினார்.1956-ல் இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலருக்கும் நவஜீவன் அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி காந்தியின் எழுத்துகளைச் சேகரிக்கும் பொறுப்பு நவஜீவன் அறக்கட்டளையின் கீழ் வந்தது. நூலாக்கத்தில் அரசின் குறுக்கீடு எந்த வகையிலும் இருக்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக மொரார்ஜி தேசாய், காலேல்கர், தேவதாஸ் காந்தி, பியாரிலால் நய்யார் போன்றோரை உள்ளடக்கிய ‘ஆலோசகர்கள் குழு’ உருவாக்கப்பட்டது. இவர்கள் இந்தியா முழுவதிலிருந்தும் காந்தியத்திலும் வரலாறு, இலக்கியம், சட்டம், உலக மதங்கள், தத்துவம் என்று பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தது. அந்தக் குழு தேர்ந்தெடுத்த முதல் தொகுப்பாசிரியர் ஒரு தமிழர்: பரதன் குமரப்பா (ஜே.சி.குமரப்பாவின் சகோதரர்). ஓராண்டு கழித்து, ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தன. அதன் பிறகு 1960-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சுவாமிநாதன்தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பாசிரியராக இருந்தார்.
உலகெலாம் பரவிக்கிடக்கும் காந்தியின் எழுத்துகளைத் திரட்டுதல், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்தல், வந்து சேரும் பெரும் திரளான எழுத்துகளைக் குறிப்பிட்ட ஒழுங்கில் சரிசெய்தல், ஆங்கிலம் அல்லாத மொழிகளில் உள்ள பிரதிகளை ஆங்கிலத்துக்குத் துல்லியமாக மொழிபெயர்த்தல் என்று இமாலயப் பணிகளை அவர்கள் மேற்கொண்டார்கள். தற்போதைய தகவல் தொடர்பு, ஏனைய தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் இவையெல்லாம் எவ்வளவு கடினமான காரியங்களாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தத் தொகுப்புப் பணிகள் 1956-ல் தொடங்கி 1994-ல் நிறைவுபெற்றன. முதல் தொகுதி 1958-லும் 100-வது தொகுதி 1994-லும் வெளியாயின.