Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / மனப்பான்மையை மாற்றுங்கள் வாழ்க்கை அழகாகும்…

மனப்பான்மையை மாற்றுங்கள் வாழ்க்கை அழகாகும்…

குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான்.

பெண்மையின் சிறப்பு “பன்முகத் தன்மை”. பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்திடும் ஆற்றல் பெற்றவள் பெண். தன் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாதனை கனவுகளோடு சமூகத்திற்குள் அடியடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணின் முன்பும் இன்று விஸ்வரூப வினாவாய் எழுந்து நிற்பது குடும்பத்தையும், அலுவல் பணியையும் சரியாக சமன் செய்கிறேனா? என்பது தான். ஆம், ஆணுக்கு பெண் சரி சமம் என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து விட்டனர் பெண்கள்.

இனி சமன் செய்ய வேண்டியது “குடும்ப அலுவலக சமநிலை தான்” வீட்டைத் தாண்டி வேலைக்காக வரும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவால்கள் ஏராளம். ஒரு காலத்தில் சமுதாயம் இட்ட கட்டுப்பாடுகளை மீறி இடஒதுக்கீடு பெற்று வேலைக்குள் நுழைந்த, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பளத்துடன் சலுகையாய்க் கிடைக்கிறது குடும்பத்தை கவனிக்க முடியவில்லையே என்ற மன உளைச்சல். குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான்.

நீல்சன் என்ற ஆராய்ச்சியாளரால் 2011-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி 87சதவீதம் இந்திய பெண்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக பதிவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 82 சதவீதம் பெண்கள் தங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் இல்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆய்வின் முடிவாக இந்திய பெண்களே அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. அதிலும் 22 வயது முதல் 55 வயதிற்கு இடையேயான பெண்கள் தங்கள் குடும்பத்தையும் வேலையையும் சமன் செய்ய சிரமப்படுவதாக அறிவுறுத்தியுள்ளது. இன்றைய கால கட்டத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் அநேக நோய்களுக்கும் முதற்காரணமாகக் காணப்படுவது மன அழுத்தம் மட்டுமே.

உலக சுகாதார நிறுவனத்தின்படி ஆரோக்கிய வாழ்வு என்பது ஆரோக்கியமான உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும், மனதும் ஆரோக்கியமாக இருப்பதே ஆகும். உடலும், மனமும் இரண்டறப் பின்னிப் பிணைந்ததே ஆகும். உடலில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பும் மனதைத் தீண்டும்; மனக்குறை உடலைச் சீர்குழைக்கும். அதிகமான கோபம், தனிமை விரும்புதல் உறக்கமின்மை போன்ற பல வெளிப்பாடுகள் மனநலக் குறைபாட்டின் அறிகுறிகள் தான். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் அவல நிலை எதுவென்றால் வாழ்வியல் முறைகளைப் பயிற்றுவிக்கும் வீட்டுப் பள்ளிக்கூடம் வெற்றிடமாகி, வெளியுலகில் மனநல ஆலோசகர்களின் தேவை அதிகரித்திருப்பது தான்.

ஒரு காலத்தில் ஆயுதங்கள் தான் போரின் கருவிகளாக இருந்தன, பின் தொழில்நுட்ப மாறுபாட்டால் ஆயுதங்கள் கருவிகளாகின. அதைத்தொடர்ந்து நுண்ணுயிரிகளை வைத்து போர் தொடுக்கப்பட்டது. இனி தொடங்கப்படும் போரானது மனிதனின் மனோபாவமே கருவியாகப் படும். மனிதனுக்கு கிடைக்காதவை மட்டுமே குறைகளாக சுட்டிக் காட்டப்பட்டு மனிதனுக்குள் மன எழுச்சி தூண்டப்படும். அது மட்டுமில்லாமல் மன கிளர்ச்சியைத் தூண்டி மரணம் வரை கொண்டு செல்லும் விளையாட்டுகள் கூட நாம் அறிந்ததுண்டு.

இன்று பலரின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணம் மற்றவரின் பேச்சுகளையும், செயல்பாடுகளையும் தன் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர வைத்திருப்பது தான். மனதின் குப்பைகள் மன அழுத்தத்தின் முதல் காரணி.

டேன்ஷே என்ற அறிஞர் கூறியது போல் மன அழுத்தம் என்பது குப்பை போன்றது. நாம் ஒவ்வொருவரும் உருவாக்குகிறோம். ஆனால் அதை சரியாக அப்புறப்படுத்தாவிட்டால் அது நம்மை ஆட்கொண்டு விடும் என்பதே உண்மை. மன அழுத்தம் என்பது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட புதிய கருத்து அல்ல, மனிதன் உருவான காலத்தில் இருந்து உருப்பெற்றது தான்.

ஆனால் அதைச்சரியான முறையில் கழிவிறக்கம் செய்த நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை அவர்களுக்கு நிறைவாழ்வைத் தந்தது. இன்று மன அழுத்த மேம்பாட்டிற்காக பயிலப்படும் ஜீம்பா நடனமும், நவீனமுறை நடைமுறைகளும் மேலைநாடுகளில் இருந்து பெறப்பட்டவை அல்ல. மன அழுத்தத்தை கையாள ஆடலும், பாடலும் நம் முன்னோர்களின் வாழ்வியலோடு ஒருங்கிணைந்தவை தான். கும்மிப்பாட்டு, வாய்ப்பாட்டு, தாலாட்டு என நம் முன்னோர்கள் கையாண்ட வாழ்க்கை முறை தான் இன்றைய மன அழுத்த மேலாண்மைக்கான மருத்துவ முறைகள்.

“ஒரு மனிதன் உறுப்புகளால் உருப்பெறுகிறான், ஆனால் எண்ணங்களால் தான் உயிர் பெறுகிறான்”. எனவே, மன அழுத்தம் வரும் முன் காக்கும் மருந்தும், வந்தபின் குறைக்கும் மருந்தும் மாத்திரையாகவோ, ஊசியாகவோ இதுவரை கண்டறியப்படவில்லை. மனதை மகிழ்ச்சியாகவும், நமக்குத் தரப்பட்ட நிறைகளை மட்டுமே எண்ணி திருப்தியடையவும் வைத்திருக்கும் நல்ல எண்ணங்கள் மட்டுமே மன அழுத்தத்தைப் போக்கும் அருமருந்து. உங்களின் மகிழ்ச்சியான மனோபாவம் உங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தரும். நம்முடைய மனோபாவங்களே நம்முடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்தும். மனப்பான்மையை மாற்றினால் மகத்தான வெற்றி பெறலாம்.

டி. லாவண்யா ஷோபனா, மனவள பயிற்சியாளர், சென்னை.

About குமரன்

Check Also

ஊசிக் கதைகள்

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய ...