நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”நியூசிலாந்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்லாந்தில் மட்டும் பெரும்பாலானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக ஆகஸ்ட் மாதத்திலிருந்து கரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதன் காரணமாக கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. மக்கள்தொகை நெருக்கம் கொண்ட ஆக்லாந்தில் கடும் ஊரடங்கு நிலவுகிறது.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசியை விரைவாகச் செலுத்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஸ்பெயினிடமிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான பைஸர் கரோனா தடுப்பூசிகளை நியூசிலாந்து இறக்குமதி செய்துள்ளது. நியூசிலாந்தில் 32%க்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.