அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், பிரிஸ்பன், அடேலையிட், மெல்பேர்ண் பெருநகரங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
சிட்னியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் ஜபார் கலந்து சிறப்புரையாற்றினார்.
தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இம்முறை எழுச்சியுடன் சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் நினைவெழுச்சிநாள் – 2016 – ஒஸ்ரேலியா- மெல்பேர்ண்
தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் தமிழீழ மாவீரர்நாள்- 2016 நிகழ்வுகள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்தி ஐநூறிற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் செல்வன் லூயின் பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் செல்வி துளசி தெய்வேந்திரன் (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமையில் மாலை 6.00 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல்நிகழ்வாக மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் முதன்மைச்சுடர் ஏற்றப்பட்டது. இவ் முதன்மைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் கபிலன் நந்தகுமார்அவர்கள் ஏற்றிவைத்தார். அதனையடுத்து ஒஸ்ரேலியத் தேசியக்கொடியினை திரு சாள்ஸ் வோல்கர் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியினை திரு எட்றியன் சின்னப்பு அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதற்களப்பலியாகிய மாவீரர் லெப்ரினன்ட் சங்கர்அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதற்பெண்மாவீரர் 2-ம்லெப்ரினன்ட் மாலதிஅவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி மாலா பாஸ்கர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கு அவர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஈகைச்சுடர்கள் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து மக்களும் நீண்டவரிசையில் சென்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக மவர்வணக்கம் செலுத்தினார்கள்.
மலர்வணக்க நிகழ்வையடுத்து இதுவரைகாலமும் தாயகமண் மீட்புப்போரில் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களையும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவிற்கொண்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்ட சிட்டிகளை கைகளில் ஏந்தியிருக்க சமநேரத்தில் “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை…..” என்ற மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. அதனையடுத்து அனைவரும் மாவீரர் நாளிற்கான உறுதியுரையை எடுத்தனர்.
தொடர்ந்து அரங்கநிகழ்வுகளாக மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவர்களின் “விழிமடல்மூடி துயில்கின்றவீரர் வித்துடல்மீதிலே வீரசபதம்…….” என்ற பாடலுக்கான வணக்க நடனம் இடம்பெற்றது. அடுத்து மாவீரர்கள் நினைவுசுமந்த கவிதையினை செல்வன் துவாரகன் சந்திரன் அவர்கள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மாவீரர் நாள் நினைவுரை இடம்பெற்றது. இவ் நினைவுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் “கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் ஆனையிறவுப்படைத்தளத்தில் காயமடைந்து பலதுன்பங்களை அனுபவித்தும் தன்னை அழித்துக்கொள்ளும் தெரிவை தவிர்த்து தான் வாழ்வதற்கு ஊடாகவே போராட்டத்தில் மேலும் சாதிக்கலாம் என்ற தற்துணிவோடு மூன்று நாட்களின் பின்னர் தளம்வந்து அவர் கொடுத்திருந்த தகவல்களே பின்நாளில் ஆனையிறவுப் படைத்தளத்தை நாம் வெற்றிகொள்ள வழிவகுத்தது..” என்றும் “வெடிபொருள் களஞ்சியம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு ஒன்றின் வெடிப்பி வெடித்துவிட மறுகணப்பொழுதில் நிகழப்போகும் அபாயத்தை உணர்ந்த கப்டன் அன்பரசன் ஒருகணமும் தாமதிக்காது அந்த வெடிகுண்டை தன்னோடு அணைத்து வெடித்து தன்னுயிரை ஈந்து அந்தப் பாசறையிலிருந்த மற்றைய போராளிகளின் உயிர்களைக் காத்தவன் கப்டன் அன்பரசன்” என்றும் மாவீரர்களான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் மற்றும் கப்டன் அன்பரசன் ஆகிய மாவீரர்களின் தியாகங்களையும் விளக்கியதோடு தாயகத்தின் சமகாலஅரசியல் நிலவரங்களையும் சுருக்கமாக ஆராய்ந்து தனது நினைவுரையினை நிகழ்த்தியிருந்தார்.
அதையடுத்து பரதசூடாமணி பள்ளி மாணவர்களின் “காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை……” என்ற பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. இறுதியாக சமூக அறிவித்தல்களோடு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதிமொழியுடன் இரவு 8.15 மணிக்கு மாவீரர்நாள்-2016 நிகழ்வுகள் நிறைவுற்றன. மாவீரர்களின் நினைவுகளைச்சுமந்து ஆண்டுதோறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்படுகின்ற “காந்தள்மலர் புத்தகம்” இவ்வாண்டும் மிகவும் தரமான முறையில் அச்சுப்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2016 – மாவீரர் நினைவெழுச்சிநாள் – ஒஸ்ரேலியா- சிட்னி
அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் 2016 மாவீரர் நாள் நவம்பர் 27ந் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நிகழ்ந்தேறியது. சிட்னி நகரின் புறநகர் ஒன்றில் திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர். சிட்னி வாழ் உறவுகளில் 120 மாவீரர்களின் குடும்பங்கள் பங்குபற்றினார்கள்.
மைதானம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டது. வாசலில் மாவீரர் நாள் வளைவு தமிழீழத்தில் இருந்தவை போல் அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்துள், மாவீரர் கல்லறைகள் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததுமே மாவீரர்களை நினைத்து உருக வைக்கக்கூடியதாக மாவீரர் துயிலும் இல்லம் போன்றதொரு அமைப்பு செய்யப்பட்டு சிட்னி வாழ் உறவுகளின் மாவீரர் கல்லறைகளில் அவர்கள் படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
2001ம் ஆண்டு வீரகாவியமாகிய வீரவேங்கை ஆழியமுது அவர்களின் சகோதரன் சுமன் பொதுச்சுடர் ஏற்றிவைத்ததுடன் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்கள் கொடியை சிறிகரன் அவர்கள் ஏற்ற, அவுஸ்திரேலிய கொடியை ஆனா பரராஜசிங்கம் அவர்கள் ஏற்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி பொறுப்பாளர் ஜனகன் சிவராமலிங்கம் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். அவுஸ்திரேலிய கொடி ஏற்றப்படும் போது அவுஸ்திரேலிய தேசிய கீதமும் எமது தேசியக் கொடி ஏற்றப்படும் போது கொடிப்பாடலும் இசைக்கப்பட்டது.
ஈகைச்சுடரை சுரேஷ்குமார் ஏற்றி வைத்தார். இவர் 2ம் லெப்டினன் கவிதாஸ் அவர்களின் சகோதரன். துயிலும் இல்லப் பாடல் இசைக்கப்பட, மாவீரர் குடும்பங்கள் மலர், தீப வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொது மக்கள் மலர் வணக்கம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து வந்திருந்த, எழுத்தாளர், ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பார் சிறப்புரையாற்றினார். அதன்போது, தேசியத் தலைவரைத் தான் சந்தித்த அனுபவங்களை சுவைபடச் சொன்னார். மேலும், தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எப்படி தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்லலாம் என்ற தனது கருத்தையும் பகிர்ந்தார்.
எமது போராட்ட வரலாற்றுடன் ஒற்றுமைகள் பலவுள்ள பாரி மன்னன் கதை, அற்றைத் திங்கள் என்ற பரதமும் கூத்தும் கலந்த நாடகத்தில் அழகாக எடுத்துவரப்பட்டது. மக்களுடன் மாவீரரும் மாண்டு போயினர் என்று அந்த நாடகத்தில் பாடப்படும்போது வந்திருந்தவர்கள் அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து சத்தியன் இளங்கோ மற்றும் ஆனந்தசிங்கம் சிவதாஸ் இருவரும் மாவீரர் புகழ் பாடும் பாடல்களைப் பாடினார்கள். இறுதியாக, சிட்னி இளைஞர் ஜனனி ஜெகன்மோகன் உணர்ச்சி மிக்க உரை ஒன்றை ஆங்கிலத்தில் வழங்கினார். கொடியிறக்கலைத் தொடர்ந்து, மக்கள் உறுதிமொழி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.