‘கடவுள் இருக்கான் குமாரு’ – விமர்சனம்

இயக்குநர் எம். ராஜேஷின் திரைப்படங்களில் கதை, லாஜிக் என்று பெரிதாக ஏதும் இருக்காது. நாயகன்  தன் காதலைத் துரத்துவது. இருவருக்கும் நேரும் ஊடலும் கூடலும், உதவி செய்கிறேன் என்கிற பேரில் உபத்திரவம் செய்யும் நண்பன்.

அவருடைய எல்லாத் திரைப்படங்களிலும் இந்த ஒருவரிக்கதைதான் திரும்பத் திரும்ப வரும். இந்த திரைப்படத்திலும் அதேதான்.

சமகால இளைஞர்களின் கலாய்ப்புத்தன்மையுடன் கூடிய உரையாடல்கள்தான் ராஜேஷ் உருவாக்கும் நகைச்சுவையின் அடிப்படை. வானத்தின் கீழே உள்ள சகல விஷயங்களையும் நபர்களையும் கதறக் கதறக் கலாய்ப்பார்கள். கூடவே பரஸ்பரம் தங்களையும் கிண்டலடித்துக் கொள்வார்கள். அப்போதைய சர்ச்சைகள், வம்புகள் ஆகியவற்றை மீம்ஸ் ஆக உருமாற்றி இணையத்தில் நகைச்சுவையாக்கும்  அதே பாணிதான். சமயங்களில் எல்லை மீறிப் போனாலும் இவற்றில் சில ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

இதுபோன்ற தொடர் நகைச்சுவையைத் தனது பிரத்யேகமான திரைக்கதையாக உருவாக்குவது ராஜேஷின் பாணி. இந்த வகையில் ஒழுங்கும் கோர்வையும் மிக கச்சிதமாக ஒருங்கிணைந்து வந்த முன்உதாரணம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆனால் இந்த மாயாஜாலம் ‘கடவுள் இருக்கான் குமாரு’வில் நிகழாமல் போனது பரிதாபம்.

***

முதல் காட்சியிலேயே படம் நேரடியாகத் தொடங்கிவிடுகிறது. குமாருக்கும் ப்ரியாவுக்கும் நிச்சயதார்த்தம். அடுத்த இரண்டு நாள்களில் திருமணம். குமாரின் முன்னாள் காதலியான நான்சி என்கிற பெயர் இடையூறாக இவர்களின் இடையில்  நுழைகிறது. ப்ரியா கடுப்பாகிறாள். ‘இனி அவள் பெயரையே உச்சரிப்பதில்லை’ என்கிற போலி வாக்குறுதியின் பேரில் குமார் தப்பிக்கிறான். பாண்டிச்சேரியில் ‘பாச்சுலர் பார்ட்டி’ கொண்டாடுவதற்காக அவளிடம் கெஞ்சிக்கூத்தாடி கிளம்புகிறான். ஆனால் திரும்பி வரும் வழியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். திருமணத்துக்காக அவன் சென்னை திரும்பியேயாக வேண்டும். ஆனால் முட்டுக்கட்டையாக சில நெருக்கடிகள் உருவாகின்றன.

குமாரின் அந்தச் சிக்கல்கள் என்ன, அது தீர்ந்ததா, திருமணம் நடந்ததா, நான்சி யார் என்கிற விவரங்களை முற்பாதியில் சுவாரசியமாகவும் பிற்பாதியில் இழுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

***

இசையமைப்பாளர்கள் நடிக்க வந்து விடும் காலக்கட்டம் இது. தம்முடைய  திறமை பிரகாசிக்கும் துறையில் நீடிப்பதே ஒருவரின் வளர்ச்சிக்கு நல்லது என்பதற்கான சிறந்த உதாரணம் ஜி.வி. பிரகாஷ். திரையில் அவர் நடிப்பதைப் பார்க்கும் அபத்தங்களைப் பார்க்கும்போது சிறுவனொருவன் இளைஞனின் வேடத்தை ஒட்டிக்கொண்டு ஃபேன்ஸி டிரஸ் போட்டியில் கலந்து கொள்வதைப் போலவே எனக்குத் தோன்றும். இதிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆச்சரியகரமாக இத்திரைப்படத்தில் நடிக்க முயன்றிருக்கிறார். ராஜேஷின் பிரத்யேகமான கதாநாயகன் நன்றாக எட்டிப் பார்க்கிறான். ஜி.வி. பிரகாஷ் சில காட்சிகளில்  ரசிக்க வைக்கிறார்.

ஆஸ்தான துணை நாயகனான சந்தானம் இல்லாத குறையை ஆர்.ஜே. பாலாஜி தீர்க்க முயல்கிறார். இவர் சொல்லும் எதிர்வசன நகைச்சுவைகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரகாஷ்ராஜ் தனது வழக்கமான கடுமையையும் நகைச்சுவையையும் இணைந்து தர முயன்றிருக்கிறார். ஆனால் இறுதிக்காட்சியில் மட்டும் இது எடுபடுகிறது. ரோபோ சங்கர், சிங்கம்புலி போன்றவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் எதையோ செய்ய முயன்றிருக்கிறார்கள்.

‘மைக்கேல் ஆசிர்வாதமாக’ வரும் எம்.எஸ்.பாஸ்கர், தனது வழக்கமான நடிப்பை கைவிட்டு இதில் வித்தியாசமாக நடிக்க முயன்றிருப்பது சிறப்பு. பணக்காரத் தோரணையுடன் தோன்றும் ஆனந்தி அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். பாடல்காட்சிகளில் நிக்கி கல்ராணி கவர்ச்சியான உடைகளில் வரும்போது, ஆனந்தி கண்ணியத்தைக் காப்பாற்றியிருக்கிறார். நிக்கி  கல்ராணிக்கு பெரிதான வாய்ப்பில்லை.
***

ஹாரிஸ் ஜெயராஜின் கிறிஸ்துவ பாடல்களின் இசை நகல், சிம்பு, பிஎஸ்என்எல் விளம்பரம், மீனம்பாக்கம் விமானநிலையத்தில் கண்ணாடி தொடர்ச்சியாக உடைதல், விஜய் டிவி அவார்ட் அழுகை என்று சமகாலத்தின் சகல விஷயங்களையும் வசனங்களில் தைரியமாக நக்கலடிக்கிறார்கள். சில விஷயங்கள் எல்லை மீறிப் போகின்றன. தமிழ்நாடு மறந்து போயிருக்கிற ஃபீப் சாங்கை மறுபடியும் நினைவுப்படுத்தியிருக்கும் விபத்தும் நிகழ்ந்திருக்கிறது.

இந்தக் கிண்டல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற தொலைக்காட்சி ‘கட்டபஞ்சாயத்து’ நிகழ்ச்சிகளைச் சகட்டு மேனிக்குக் கிண்டலடித்திருக்கும் பகுதியைச் சொல்லலாம். தங்களின் வணிகத்துக்காக அப்பாவியான, எளிய சமூக மக்களின் குடும்ப விஷயங்களில் மூக்கை நுழைத்து தப்பும் தவறுமாக பஞ்சாயத்து செய்து அதில் பரபரப்பு மசாலாக்களைக் கூட்டி அவர்களின் பிரச்னைகளை இன்னமும் பூதாகரமாக்கும் விஷயத்தை நகைச்சுவையின் இடையே அம்பலப்படுத்தியிருப்பது சிறப்பு. தொலைக்காட்சி உத்தரவிடுவதற்கேற்ப தன் நிலையை மாற்றிக்
கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஊர்வசி அசத்தியிருக்கிறார். ஆனால் மிகையான அலட்டல். இந்தப்பகுதி சுவாரசியமாக இருந்தாலும் இழுவையான நீளம்.

ராஜேஷின் படங்களில் ‘டாஸ்மாக்’ குடி காட்சிகள் நிறைய வருகின்றன என்கிற புகாரினாலோ என்னவோ இத்திரைப்படத்தில் அவற்றை தவிர்த்திருக்கிறார். மதுபாட்டில்களை காட்டுவதோடு சரி. அதற்கு மாறாக நாயகனும் நண்பனும் ‘கும்பகோணம் காபி’ குடிக்கும் காட்சி மட்டுமே வருகிறது. (சாதா தம்ளர்ல குடிச்சா சாதா காஃபி, பித்தளை தம்ளர்ல குடிச்சா கும்பகோணம்  காபி).

ஜி.வி.பிரகாஷே இசையும் கூட. அவர் நடிப்பதைப் பார்க்கும் கொடுமையோடு இதையும் அனுபவிக்க நேர்கிறது. தமிழ் சினிமாவின் வழக்கமான விபத்து போல எரிச்சலூட்டும் ஸ்பீடு பிரேக்கர்களாக பாடல்கள். ‘இரவினில் ஆட்டம்’ என்கிற சிவாஜியின் பழைய பாடலை ரீமிக்ஸ் செய்ய முயன்றிருப்பது மட்டும் சற்று ரசிக்க வைக்கிறது.

முதல் பாதி சற்று சுவாரசியமாகச் செல்லும்போது இரண்டாம் பாதி சறுக்கி விடுகிறது. பேய்ப்படங்களை கிண்டலடித்திருக்கும் பகுதி சுவாரசியமில்லாதது மட்டுமன்றி திரைக்கதை சுவாரசியத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விடுகிறது.

***

இத்திரைப்படத்தின் குழுவே நேர்மையாக ஒப்புக் கொண்ட படி, 2009-ல் வெளிவந்த ‘The Hangover’ எனும் ஹாலிவுட் திரைப்படத்தை உள்ளூர் வடிவத்துக்கு ஏற்றபடி மனம் போன போக்கில் திரைக்கதையாக மாற்றியிருக்கிறார்கள். பிரேக் இல்லாத வாகனம் போல இதன் திரைக்கதை அதன் இஷ்டத்துக்கு அலைபாய்ந்து நம் மீது வந்து மோதி நிற்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி எம்.ராஜேஷ் அவருடைய பாணியில் இதுவரை உருவாக்கிய  திரைப்படங்களில் முழுமையான அழகும் கோர்வையும் கூடி நின்ற திரைப்படம் என்பது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. எந்த விஷயத்திலும் ஆர்வமும் நோக்கமும் இன்றி இலக்கின்றி அலைபாயும் சமகால இளைஞர்களின் மனோபாவத்தை அதன் நாயகன் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

குறிப்பாக ஒரு காட்சியை சொல்ல வேண்டுமானால் வங்கி மேலாளரிடம் நாயகன் கடன் கேட்கச் செல்லும் காட்சியைச் சொல்லலாம். ‘எதற்காக, எவ்வளவு கடன்?’ என்கிற அடிப்படையான, சாதாரணமான கேள்விக்கு கூட தடுமாற்றத்துடன் தெளிவில்லாமல் அலட்சியத்துடன் நாயகன் பதில் சொல்லும் காட்சியைக் கவனியுங்கள். அதுதான் அந்தப் பாத்திரத்தின் வடிவமைப்பின் சிறப்பு. ‘சிவா மனசுல சக்தியும்’ கவரக்கூடிய படைப்பே. முந்தைய படங்களைத் தாண்டிச் செல்வதை விட்டு விட்டு  அதிலிருந்து பின்னோக்கிச் செல்வது இயக்குநரின் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. ஆனால் தனது முந்தைய திரைப்படங்களின் பாணியிலிருந்து சற்று விலக முயன்றிருப்பது மகிழ்ச்சி.

சமகால இளைஞர்களின் மனோபாவத்தை கேளிக்கையாக மாற்றித் தருவதே ராஜேஷ் திரைப்படங்களின் பாணி. அதற்கு மேல் இவற்றுக்கு மதிப்பில்லை. இந்தத் திரைப்படம் அந்த நோக்கத்தையும் கூட சிறப்பாக நிறைவேற்றவில்லை.

‘கடவுள் இருக்கான் குமாரு, ஆனால் கதையே இல்லையே ராஜேஷூ!’