என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் உள்ளோம்!

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

2018ல் இத்தமிழ் அகதி குடும்பம் இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த ஆஸ்திரேலிய திட்டமிட்டிருந்த நிலையில், அந்நடவடிக்கை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கான தொடர் சட்டப் போராட்டத்தில் உள்ளது. கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர்களது இரண்டாவது குழந்தையான தருணிகா பெர்த் (Perth) நகரில் எவ்வித விசாவுமின்றி சமூகத்தடுப்பில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பிரியா, நடேசலிங்கம், கோபிகாவுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது குழந்தையான தருணிகா சமூகத் தடுப்பில் இருப்பதால், பெர்த் நகரை விட்டு வெளியேறி முன்பு வாழ்ந்த பிலோயலா (Biloela) பகுதிக்கு அக்குடும்பம் செல்ல முடியாத சூழல் நிலவுகின்றது.

இந்த நிலையில், பிரியா அவர்களது நிலைக் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் பேசியிருக்கிறார்.

“தற்போது இணைப்பு விசாவில் நாங்கள் இருப்பதால் எங்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் உள்ளது, ஆனால் மனம் இன்னும் ஓயவில்லை. அடுத்த என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் உள்ளோம். பிற குழந்தைகள் எதிர்கொள்ளாத சிரமங்களை, அதிர்ச்சியை எங்களது எதிர்கொள்கின்றனர். முன்பு அவர்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தார்கள், ஆனால் கொஞ்சம் வளர வளர அவர்களது நிலைக் குறித்து அதிகம் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். மீண்டும் ஆஸ்திரேலிய அரசு எங்களை தடுத்து வைக்கப் போகிறதா? தனிமைப்படுத்தப் போகிறதா? எனத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு இலங்கைக்கோ தடுப்புக்கோ திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற தொடர் அச்சம் எங்கள் எண்ணங்களை ஆட்கொண்டிருக்கிறது,” என பிரியா தெரிவித்திருக்கிறார்.