வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்காமல் மரணசான்றிதழ் வழங்குவதை ஐநா ஆதரித்தால் அது வரலாற்று தவறு- என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு( எதுவித நீதி பொறுப்புக்கூறலும் இன்றி ) மரண சான்றிதழ் வழங்க போவதாக ஐநா பொது செயலாளரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவித்திருக்கிறார்.
ஐநாவின் அடிப்படை நியாயப்பாடுகளையே கேலிக்குள்ளாக்கும் இந்த செயல்பாடுகளை ஐநா ஆதரிக்குமானால், அது ஒரு வரலாற்று தவறாகவே பதியப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நாம் நிச்சயம் அந்த அநீதியை எதிர்ப்போம்.
“காணமற்போனவர்கள் இறந்துவிட்டதாக மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், இந் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அது எந்த நடவடிக்கை? நியுயோரக்குக்குச் செல்வதற்கு முன்னர், பழையவற்றை மறந்து விடுங்கள். உங்களுடைய அன்புக்குரிவர்களை தேடுவதில் காலத்தை வீணடிக்காதீர்கள் என்று காணமற்போனவர்களின் உறவினர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துப்படுத்துகிற அமைப்புகளுக்கும் தெனாவட்டுடன் கூறியிருக்கிறார். அவ்வாறாயின் இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? காணாமற் போனவர்கள் என்ன காரணங்களுக்காக பாதுக்காப்புப்படையினரால் கொல்லப்பட்டார்கள்? என்பதைனை விசாரிக்கமால், வெறுமனே மரணச் சான்றிதழ்களை விநியோகிக்கப் போகிறார்.
இவ்வாறு பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை விலக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஐக்கியநாடுகள் சபை ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்.
இந்நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு வழங்குமேயானால், அதனை எந்தவித தயக்கமுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாம் எதிர்புத் தெரிவிப்போம். ஏனெனில் இது ஐநா சபையின் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் முரணானது. அவ்வாறு ஐ.நா.சபை நடந்துகொள்ளுமேயானால் இது வரலாற்றில் தவறானதாகவே பதியப்படவேண்டியது.”