ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் சார்பில் தாங்கள் பங்கேற்று பேச அனுமதி அளிக்கும்படி தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் தங்களது அரசை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தலிபான்கள் அரசில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. மேலும் அமைச்சரவையில் சில பயங்கரவாதிகளும் இடம் பெற்றுள்ளனர். இதனால் தலிபான்கள் அரசை உலக நாடுகள் ஏற்க மறுத்து அங்கீகாரம் அளிக்கவில்லை.
ஆனாலும் சர்வதேச அங்கீகாரத்தை பெற தலிபான்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று தலிபான்கள் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் சார்பில் தாங்கள் பங்கேற்று பேச அனுமதி அளிக்கும்படி தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் ஐ.நா. சபைக்கான ஆப்கானிஸ்தானின் புதிய தூதராக முகமது சுஹைல் ஷாகீனை நியமித்து உள்ளனர். இது தொடர்பாக தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெசுக்கு எழுதிய கடிதத்தில் ஆப்கானிஸ்தான் தூதர் நியமனம் பற்றியும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் படுத்த தூதரை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முந்தைய ஆப்கானிஸ்தான் அரசின் தூதர் குலாம் இசக்சாயின் பணி முடிந்துவிட்டதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
தலிபான்களிடம் இருந்து கடிதம் வந்திருப்பதை ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தி உள்ளார்.