ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை

ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

அவ்வகையில், மெல்போர்னில் இன்று நடந்த போராட்டத்தின் போதும் வன்முறை வெடித்தது. காவல் துறையுடன் போராட்டக்காரர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல் துறை பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்தனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.