ஸ்பெயின் தீவில் எரிமலை வெடித்து சிதறியது

ஸ்பெயினுக்கு சொந்தமான தீவில் எரிமலை வெடித்து சிதறிய நிலையில் அப்பகுதி மக்கள் வெளியேறி இருந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன. அவை தற்போதும் அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலைகளில் ஒன்று ‘கும்ப்ரே வியாஜே’

1971-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து சிதறியது. அதன் பிறகு 50 ஆண்டு காலம் மவுனமாக இருந்த எரிமலையில் கடந்த ஒரு வார காலமாக லேசான புகை வந்தது. எனவே எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெடித்து சிதறிய எரிமலை எரிமலையை சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறின.

உடனே மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு ஓடினார்கள். மலையில் இருந்து வெளியேறிய லாவா குழம்புகள் பல கி.மீட்டர் தூரத்துக்கு ஓடியது. பல வீடுகளுக்குள்ளும் அவை புகுந்தது.

ஏற்கனவே மக்கள் வெளியேறி இருந்ததால் உயிர் பாதிப்பு இல்லை. இருந்தாலும் இன்னும் அதிகமாக வெடித்து சிதறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் 10 ஆயிரம் பேரை வெளியேற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஸ்பெயின் நாட்டில் இருந்து சிறப்பு மீட்புப்படை கேனரி தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.