அமெரிக்க அரசின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு அகதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துளள்து.
ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல் ரியோ சர்வதேச பாலத்தின் அடியில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அவர்கள் தங்கியிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அவர்கள், அமெரிக்காவுக்குள் செல்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
10 ஆயிரத்தற்கும் அதிகமான ஹைத்தி மக்கள் கியூபா, வெனிசுலா, நிகரகுவா மக்களோடு சேர்ந்து அகதிகளாக அமெரிக்க எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெக்சாஸ் எல்லை நகரத்திலிருந்து வெள்ளிக்கிழமை சுமார் 2,000 மக்களை மற்ற குடியேற்ற செயலாக்க நிலையங்களுக்கு மாற்றியுள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விரைவாகக் காவலில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இத்தகைய இடமாற்றங்கள் தொடரும் என்றும், சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துளள்து.
வேலை மற்றும் பாதுகாப்புக்காக புலம்பெயர்ந்தோர் சிலர் அமெரிக்கா நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். எனினும், சமீபத்திய நாட்களில் தான் டெல் ரியோ, டெக்சாசில் திரண்ட அகதிகளின் எண்ணிக்கை பரவலான கவனத்தை ஈர்த்தது. இவர்களை கையாள்வது ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சவாலாக உள்ளது.
டெல் ரியோ சர்வதேச பாலத்தின் கீழ், அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மோசமான நிலையில் தங்கியிருக்கும் குடியேறிகளை அனுப்பி வைப்பதற்காக, ஹைத்தி மற்றும் பிற இடங்களுக்கு விரைவில் விமானங்களை அனுப்ப உள்ளதாகவும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறி உள்ளது.
Eelamurasu Australia Online News Portal