நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கடந்தவாரம் அரசாங்கம் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சில நிபந்தனைகள் விதித்திருக்கிறது.அப்பொருட்ட்களுக்குள் உள்ளாடைகளும் அடங்கும்.அதன்படி பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் வணிகர்கள் கொள்வனவு விலைக்கு நிகரான தொகையை வங்கியில் வைப்பிலிட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் இறக்குமதி சக்தி குறைந்து விட்டது என்றும்,அதற்கு காரணம் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்தமைதான் என்றும் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது இப்பொழுதுதான் என்பதல்ல.வைரஸ் தொற்றுக்கு முன்னரே நாட்டின் சுற்றுலாத்துறை மோசமாகமாக பாதிக்கப்பட்டிருந்தது.ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து நாடு உல்லாசப் பயணிகளை கவரும் தன்மையை பெருமளவுக்கு இழந்துவிட்டது.வைரஸ் வந்து நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தரும் துறைகளான ஆடை உற்பத்தித்துறை,சுற்றுலாத்துறை,புலம் பெயர்ந்து உழைக்கும் இலங்கையர்களின் உழைப்பு மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறைகள் போன்றவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் நாட்டின் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்துவிட்டது.அதனால் அரசாங்கம் பல பொருட்களில் இறக்குமதியை நிறுத்தியது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வசதி படைத்தவர்கள் ஓடும் வாகனங்கள் முதற்கொண்டு கீழ் மத்தியதர வர்க்கத்தினரின் மோட்டார்சைக்கிள்கள் உள்ளடங்கலாக வாகனத் இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது.அதைப்போலவே மஞ்சள்,உரம் உட்பட பல்வேறு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 623 பொருட்களில் இறக்குமதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.அந்த நிபந்தனைகள் மறைமுகமாக இறக்குமதியை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக அது சிறிய நடுத்தர ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடியது.அதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிர்வகிப்பதற்கு ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்தது.அத்தியாவசியப் பொருட்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய ஒரு நிலைமை தோன்றியபோதே இலங்கை தீவு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கருதும் ஒரு நிலைமை தோன்றியது.
இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவசரகால சட்ட விதிகளின்கீழ் கொண்டுவந்த பின்னர் போலீசார் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெரிய மற்றும் சிறிய பண்டகசாலைகளின் மீது திடீரென்று பாய்ந்தனர் .இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி,மா,சீனி போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு உணர்வு நாடு முழுதும் உருவாக்கப்பட்டது.
எனினும் உள்ளூர் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் சீனிக்கும் மாமாவுக்கும் பால்மாவுக்கும் இப்போதும் தட்டுப்பாடு உண்டு. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் சீனி,பால்மா இருக்கும் இடங்கள் காலியாக இருக்கின்றன.பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் விலை பொறிக்கப்பட்ட சீனிப் பொதிகளை காண முடியவில்லை.மிகச்சில பல்பொருள் அங்காடிகளில் சீனி சொரியலாக விற்கப்படுகிறது. பால்மா பக்கட்டுக்ககளை குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில பல்பொருள் அங்காடிகள் ரகசியமாக கொடுக்கின்றன.அந்தப் பெட்டிகளை ஒரு பேப்பர் பைக்குள் வைத்து ரகசியமாக கொடுக்கும் அளவுக்குத்தான் நாட்டில் பால்மா கிடைக்கிறது.அதாவது அத்தியாவசிய பொருட்களுக்கு ஆணையாளராக ஒரு மேஜர் ஜெனரலை நியமித்த பின்னரும் பொருட்களின் விலை இறங்கவில்லை என்று பொருள்.
அண்மையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு பதில் கூறிய அஜித் கப்ரால் வணிகர்கள் பொருட்களை பதுக்கிய படியால்தான் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் பொருட்களின் விலை அதிகரித்தது என்றும் விளக்கம் கூறுகிறார்.இவர் ராஜாங்க அமைச்சராக இருந்து இப்பொழுது மதியவங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ளார்.ஆனால் வணிகர்கள் ஏன் பொருட்களை பதுக்குகிறார்கள்?ஏனென்றால் பொருட்களின் இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்படடால் எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அதிக லாபத்தை பெறும் நோக்கத்தோடுதான்.இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையும் திடீர் பாய்ச்சல்களின் மூலம் கைப்பற்றுகின்றனர்.கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்தால் சதோச மூலம் வினியோகிக்கப்படுதாக செய்திகள் வெளிவருகின்றன.ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசாங்கம் அதைப் பதுக்கிய வர்தகர்களிடமே சந்தை விலைப்படி கொள்வனவு செய்வதாகவும் அதை பதுக்கிய முதலாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தியாவசிய பொருட்களும் உட்பட பல பொருட்களுக்கு நாட்டில் நெருக்கடி உண்டு.அரசாங்கம் அந்த நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தனமாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.ஆனால் அவை எதிர்பார்த்த விளைவுகளை இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் தரவில்லை. அதுமட்டுமல்ல அரசாங்கம் வேறு ஒரு உத்தியையும் கையாள்கின்றது.சில பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால் வரக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்காக அல்லது பொதுசனங்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக அரசாங்கம் உள்ளூர் உற்பத்தி,சுற்றுச்சூழலை பாதுகாப்பது,மண்வளத்தை பாதுகாப்பது போன்ற கவர்ச்சியான பசுமை கோஷங்களை முன்வைக்கின்றது. இப்பசுமைக் கோஷங்கள் உன்னதமான அரசியல் பொருளாதார இலட்சியங்கள்தான். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபின் அதிலும் குறிப்பாக ஒரு பெருந்தொற்றுச்சூழலில் அவற்றை திடீரென்று அமல்படுத்த முடியாது.அவை போன்ற உன்னதமான இலட்சியங்களை அடைவதற்கு நீண்டகால திட்டங்கள் வேண்டும். நீண்டகால அணுகுமுறைகள் வேண்டும்.
மாறாக இறக்குமதியை திடீரென்று நிறுத்திவிட்டு,இடைக்கிடை சமூக முடக்கங்களை அறிவித்துக் கொண்டு,மக்களை உள்ளூர் உற்பத்திக்கு திரும்புமாறு கேட்பது பொருத்தமானதா?இது ஒரு பெரும்தொற்றுக் காலம். உலகம் முழுவதும் ஒரு அசாதாரணச் சூழல் நிலவுகிறது.இப்படிப்பட்ட ஓர் அசாதாரணச்சூழலில் இதுபோன்ற பரிசோதனைகளையும் நீண்டகால நோக்கிலான திட்டங்களையும் எப்படி முன்னெடுப்பது? உதாரணமாக மஞ்சளின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது. அதனால் பெருந்தொகை பணத்தை அரசாங்கம் சேமித்தது.உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மஞ்சளை உள்ளூரில் உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை ஊக்குவித்தது. ஆனால் அதன்மூலம் நாட்டின் மஞ்சள் தேவையில் அரை வாசியைத்தான் ஈடுசெய்ய முடிந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் மஞ்சள் கஞ்சாவை போல மாறிவிட்டது. அது இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகிறது.கடத்திவரப்படும் கஞ்சாவைக் கைப்பற்றும் அரசாங்கம் அதை முன்பு எரித்தது.ஆனால் இப்பொழுது சதொசவில் சந்தை விலைக்கு விற்கிறது.
இப்போது அரசாங்கம் 623பொருட்களுக்கு இறக்குமதிக்கான நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இதனால் மேற்படி பொருட்களும் இனிமேல் கஞ்சாபோல கடத்தப்படலாம் என்று தெரிகிறது.சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு தகவலின்படி இந்தியாவில் இருந்து மஞ்சளுடன் சேர்த்து வீட்டுத் தேவைக்கான மின்னியல் சாதனங்களும் கடத்தி வரப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.அதாவது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் நிதி முகாமைத்துவம் போன்றவை கள்ளச்சந்தையைத்தான் ஊக்குவிக்கின்றனவா?அதேபோல அரைச்சமூக முடக்கமும் நாட்டில் பதுக்கலையும் கொரோனா சந்தைகளையும்தான் உற்பத்தி செய்திருக்கிறது.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி முகாமைத்துவம் மட்டும் அல்ல ராணுவ மயமாக்கல் கொள்கையும் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்று சில பெரிய வணிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக சுங்கப் பகுதிக்கும் துறைமுக அதிகார சபைக்கும் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.மிகக்குறிப்பாக துறைமுக அதிகாரசபைக்கு அவ்வாறு நியமிக்கப்பட்ட படைஅதிகாரி விவகாரங்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.உதாரணமாக இலங்கையின் கொழும்பு துறைமுகம் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தை விடவும் பெரியது.எனவே தூத்துக்குடிக்கு வரும் பெரிய கப்பல்கள் இடைத்தங்கல் நிலையமாக கொழும்பைப் பயன்படுத்துகின்றன. ஆனால் புதிய நிர்வாகத்தின்கீழ் இவ்வாறு வரும் கப்பல்களின் தொகை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக கப்பல் கொம்பனிகள் துபாய் நோக்கி செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் அவற்றை காலிசெய்து புதிய ஏற்றுமதி பொருட்களை அவற்றின் நிரப்புவது தாமதமாகிறது என்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறாக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள்,நிதி முகாமைத்துவம்,ராணுவ மயமாக்கல் போன்றவற்றால் மொத்த பொருளாதாரமும் நெருக்கடிக்குள் சிக்கிவிட்டது என்று பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தது.அவர் நிதியமைச்சராக வந்ததிலிருந்து கிழமைக்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்படுகிறது.ஆனால் இவை எவற்றாலும் சரிந்துவிழும் பொருளாதாரத்தை இன்றுவரையிலும் நிமிர்த்த முடியவில்லை.ஏன் ?
நாட்டின் பொருளாதாரம் சரிந்து விழுந்தமைக்கு தனிய பெருந் தொற்றுநோய் மட்டும் காரணமல்ல. அல்லது அதற்கு முன் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு மட்டும் காரணமல்ல.காரணம் அதைவிட ஆழமானது. தென்னாசியாவின் திறந்த சந்தைப் பொருளாதாரத்துக்கு முதலில் திறக்கப்பட்ட நாடு இலங்கைத்தீவுதான்.ஆனால் இலங்கைத் தீவுக்கு பின் அவ்வாறு திறக்கப்பட்ட பல நாடுகள் எங்கேயோ போய்விட்டன. இந்தோனேஷியா வியட்நாம் பங்களாதேஷ் போன்றவை இலங்கையை விடவும் முன்னேறிவிடடன.ஆனால் சிறிய இலங்கைத்தீவு எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த போதிலும் முன்னேற முடியவில்லை. காரணம் மிகவும் எளிமையானது. பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப இலங்கைத்தீவில் தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள்.அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத்தீவின் பொருளாதாரம் சரிந்துவிழக் காரணம்.
எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த அழகிய சிறியதீவை பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்ப சிங்களத் தலைவர்களால் முடியவில்லை.அதன் விளைவாக பொருளாதாரம் சீரழியத் தொடங்கியது. யுத்தம் இலங்கைத்தீவின் முதலீட்டு கவர்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது. அப்படிப்பார்த்தால் 2009ஆம் ஆண்டுக்குப்பின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் முடியவில்லை.ஏன்?
ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற அரசாங்கத்தால் முடியவில்லை.அது மட்டுமல்ல ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்ப வெற்றியாக மாற்றி அந்த அடித்தளத்தின் மீது ஒரு கட்சியையும் கட்டி எழுப்பி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் யுத்த வெற்றிக்கு தலைமை தாங்குகிறார்கள். யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறியதால்தான் அதாவது இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடிக்க தவறியதால்தான் கடந்த12 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் நாட்டின் முதலீட்டு கவர்ச்சி அதிகரிக்காது. இதுதான் அடிப்படைப் பிரச்சினை.
பசிலை மட்டுமல்ல வேறு யாரைக் கொண்டு வந்தாலும் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனைதான் உண்டு. யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவது. பல்லினத் தன்மை மிக்க ஓரழகிய சிறிய தீவை கட்டியெழுப்புவது. ஆனால் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டு அந்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியுமா?
நிலாந்தன்