மனித உரிமைப் பேரவையின் இந்த மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானத்தின் முடிவுக்கிணங்க ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் முன்வைத்த வாய்மூல அறிக்கையை வழக்கம்போல இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
சீனா அதற்கு பக்கப்பாட்டு வாசித்துள்ளது. கோதபாய அரசு செய்யத் தவறியவைகளையும் செய்ய வேண்டியவைகளையும் ஆணையாளரின் அறிக்கை பட்டியலிட அதில் சொல்லப்படாதவைகளை தமிழர் தரப்பு பட்டியலிடுகிறது. அப்படியானால் 49ம் 51ம் அமர்வுகளுக்கு முற்கூட்டியே அவ்விடயங்களை பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கானது. இதனை செய்யத் தவறின் இதற்கும் தனியான பொறுப்புக்கூறல் தீர்மானம் தேவைப்படலாம்.
மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை எதிர்பார்க்கப்பட்டவாறு இந்த மாதம் 13ம் திகதி பேரவையின் 48வது அமர்வில் வெளியானது.
கடந்த மாதம் இடம்பெற்ற பேரவையின் 46வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட 46:1 இலக்கத் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டவாறு, அத்தீர்மானத்தை மையப்படுத்தி ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் தொடர்ச்சியாக சமர்ப்பிக்க வேண்டிய மூன்று அறிக்கைகளில் இது முதலாவது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
46:1 இலக்கத் தீர்மானத்தில் குறிப்பிட்டவற்றில் எவைகளை இலங்கை அரசு பரிசீலனைக்கு எடுத்தது, எவற்றை நிறைவேற்றியது, எவைகளை புறக்கணித்தது, மனித உரிமைப் பேரவை எதனை எதிர்பார்க்கிறது, அடுத்து என்ன நடைபெறவேண்டும் என்பவைகளை விபரிப்பது மட்டுமே வாய்மூல அறிக்கைக்குரிய பொறுப்பு என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.
இதன் அடுத்த கட்டமாக, அடுத்த வருட மார்ச்சில் இடம்பெறும் 49வது அமர்வில் இது தொடர்பாக குறிப்பிட வேண்டிய விடயங்களை எழுத்து மூல அறிக்கையாக சமர்ப்பிப்பதோடு, அடுத்த வருட செப்டம்பரில் இடம்பெறும் 51வது அமர்வில் பூரண அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விடயம் விபரமாக 46:1 தீர்மானத்தின் 16ம் இலக்கப் பந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மாத 48வது அமர்வில் தமக்குப் பணிக்கப்பட்டவாறு வாய்மூல அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பித்தார்.
பேரவையின் வழமையான நியமப்படி இந்த அறிக்கையின் சாராம்சம் ஏற்கனவே இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கோதபாய அரசின் நிலைப்பாட்டை 13 பக்க அறிக்கையாக பேரவைக்கு அனுப்பி வைத்தார்.
வழக்கம்போல, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணியில் கோதபாய ஆட்சி எல்லாவற்றையும் செயற்படுத்த ஆரம்பித்துவிட்டது போன்ற தோற்றப்பாட்டில் இந்த அறிக்கை அமைந்திருந்தது. அதேசமயம் மனித உரிமைகள் பேரவை மனித உரிமைகள் விவகாரத்தைக் கையாள்கிறதா அல்லது அரசியல் செய்கிறதா என்ற கேள்வியையும் அமைச்சர் பீரிஸ் ஒரு கட்டத்தில் எழுப்பியதிலிருந்து, கோதபாய தரப்பின் சினம் வெளியானது.
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொண்ட அப்போதைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் வெளியிட்ட பொறுப்புக்கூறல் கூட்டறிக்கையின் அடிப்படையில் இவ்விவகாரம் மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றது. பேரவை நியமித்த தருஸ்மன் குழு அறிக்கை சுட்டிய விடயங்களின் அடிப்படையில் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேறின. ஆனால், இவை எதனையும் இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை.
2015 அக்டோபரில் இலங்கை அரசின் இணைஅனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30:1 இலக்கத் தீர்மானம் இவற்றுள் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. மைத்திரி-ரணில் கூட்டரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பங்காளியாக்கி இத்தீர்மானத்தை நிறைவேற்ற ஜெனிவாவில் காலநீடிப்பைப் பெற்றுவிட்டு எதனையும் செய்யாது அம்போ என்று கழன்றுவிட்டது.
இந்த வரலாற்றை நினைவுபடுத்தினால் மட்டுமே பேரவையின் நிகழ்கால முயற்சிகளை புரிந்து கொள்வது இலகுவாம். 2019 நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோதபாய, 2020 ஆகஸ்ட் மாத பொதுத்தேர்தல் மூலம் நாடாளுமன்ற ஆட்சியையும் கைப்பற்றியதையடுத்து, எதேச்சாதிகாரமாக 30:1 இலக்கத் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.
இதன் அடுத்த கட்டமாகவே மனித உரிமைப் பேரவையின் இந்த வருட மார்ச் மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்க 11 நாடுகளே எதிர்த்து வாக்களித்தன.
பேரவையின் ஆணையாளர் பச்சிலற் அம்மையார் 46:1 இலக்கத் தீர்மானத்தில் சில முக்கிய விடயங்களை முன்மொழிந்தார். இவற்றுள் கடந்த ஆறு மாதங்களில் இலங்கை அரசு எவைகளை எவ்வாறு அணுகியது என்பதை இந்த மாத அமர்வில வாய்மூல அறிக்கையாக வெளியிட்டார். இப்பத்தியாளரின் பார்வையின்படி இவற்றில் முக்கியமானவையாக பின்வருவன உள்வாங்கப்பட்டிருந்தன.
இத்தீர்மானத்தை ஏற்க முடியாதென பகிரங்கமாக அறிவித்து வந்த கோதபாய, கடந்த ஜூனில் ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்த தயாராகவிருப்பதாக அறிவித்ததை ஆணையாளர் பச்சிலற் தனது அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தி, கோதபாயவின் இரட்டை முகத்தை அவருக்கு வாக்களித்து பதவி கொடுத்த சிங்கள மக்கள் முன்னால் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தாம் எதிர்பார்ப்பதாகவும், இவ்விடயத்தில் இணைந்து செயற்பட தமது அலுவலகம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (கோதபாயவின் அறிவிப்பை வரவேற்பதாக இங்கே ஆணையாளர் குறிப்பிடவில்லையென்பதைக் கவனிக்கவும்). கோதபாய சொல்பவைகளை செய்ய மாட்டாரென்பதை தமது அறிக்கையின் வரிகளுக்கிடையான வெளிகளால் ஆணையாளர் வெளிப்படுத்தியிருப்பதை அறிய முடிகிறது.
ஆகஸ்ட் 30ம் திகதி இலங்கை அரசு பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட நடைமுறை, உணவுத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுகளை தடுக்கவென சுட்டிக்காட்டப்பட்டாலும், ராணுவ நடவடிக்கைகள் விரிவுபடுத்த உதவுவதாக ஆணையாளர் இங்கு காட்டியுள்ளார்.
சமூக அமைப்புகளுடன் உரையாடல் இடம்பெறுகின்ற அதேவேளை, பொதுமக்கள் மீதான கண்காணிப்பு அதிகரிப்பு, பயமுறுத்தல், துன்புறுத்தல், ஊடகவியலாளர், மாணவர், மதத்தலைவர்கள் போன்றவர்கள் மீதான நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ள ஆணையாளர், அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள், நினைவேந்தல் போன்றவற்றில் அதீத நெருக்கடிகளும் கைதுகளும் தடுத்து வைப்பதும் இடம்பெறுவதை குறிப்பிடத் தவறவில்லை.
2008-2009 காலத்தில் பதினொரு இளைஞர்களைக் கைது செய்து காணாமல் ஆக்கியது தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவை சட்டமா அதிபர் விலத்தியதையும் இந்த அறிக்;கையில் முக்கியமாகக் காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ள ஆணையாளர், இது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறவில்லையென்று குறிப்பிட்டுள்ளதோடு, இவ்விடயத்தில் மேலும் வெளிப்படைத் தன்மை தேவையென்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையிலிருப்பதை ஆணையாளர் கவனத்திலெடுத்து இச்சட்டத்தைப் பயன்படுத்தி கைதுகள், தடுத்து வைத்தல் இடம்பெறுவதை காட்டியுள்ளார். இச்சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறியுள்ள அரசாங்கம் அதுவரை இச்சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு (மோறரோறியம்) கேட்டுள்ளது மிக முக்கியமானது. (ஆனால், இதனை கோதபாய அரசு கவனிக்கப் போவதில்லை).
போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் சம்பந்தமாக 1,20,000 வரையிலான தகவல்களும் தரவுகளும் தங்களால் சேகரிக்கப்பட்டுள்ளதும், இதற்கான செயலகம் விரைவில் ஆரம்பமாகுமென்பதும், இவற்றைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், எதிர்கால தேவைக்கென பாதுகாத்தல் என்பவை இந்த அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டவைகளில் ஒன்றாகும்.
இதற்கான நிதி ஒதுக்கீடு விடயத்தில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவைக் கோரியுள்ள ஆணையாளர், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை நிலைமையை மேம்படுத்த அவசியமான ஆதரவை வழங்குமாறு கேட்டுள்ளதோடு, இலங்கை நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்துமாறும் அங்கத்துவ நாடுகளிடம் ஆதரவு கோரியுள்ளார்.
இத்தனை விடயங்களையும் குறிப்பிட்டுள்ள ஆணையாளர் சில விடயங்களில் கவனம் செலுத்தவில்லையென்ற ஆதங்கத்தை தமிழர் தரப்பிலிருந்து சிலர் வெளியிட்டுள்ளனர். முக்கியமாக, தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் வாழ்நிலங்களை சிங்கள மயமாக்கப்படுவது உள்வாங்கப்படவில்லையென்று பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
46:1 இலக்கம் தொடர்பான அடுத்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர,; தமிழர் தரப்பு – முக்கியமாக தமிழ்த் தேசிய மூன்று கட்சிகளும் காணி அபகரிப்பு விடயத்தில் கவனம் செலுத்தி பேரவையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக இரண்டு மூன்றாகப் பிரிந்து நின்று கடிதங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து, எதிர்கால அறிக்கைக்குத் தேவையானவற்றை நேர்த்தியாக காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டியது அவசர அவசிய தேவை. இதற்காக அடுத்த வருட மார்ச் மாதம் முதல் வாரம்வரை காத்திருக்கக் கூடாது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எழுதிய கடிதத்தில் தெரிவித்த விடயங்கள் ஆணையாளரின் இந்த மாத அறிக்கையில் இடம்பெற்றுள்ளனவென்று அதனைத் தயாரித்த சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததோடு அதனை வரவேற்பதாகவும் கூறியிருந்தார். அப்படியானால், தமிழர் நிலபுலன் சிங்கள மயமாக்கல் பற்றி சம்பந்தன் தனது அறிக்கையில் ஆணையாளருக்குத் தெரிவிக்கத் தவறினாரா என்ற கேள்வி எழுகின்றது.
ஆணையாளரின் அறிக்கையை அமைச்சர் பீரிஸ் நிராகரித்துள்ளார். வெளியக விசாரணைப் பொறிமுறை தேவையில்லையென்ற இவரது நிலைப்பாட்டை, வெளியுறுவு அமைச்சின் செயலாளரான முன்னாள் கடற்படை அதிகாரி கொலம்பகே வழிமொழிந்துள்ளார். இலங்கையின் உள்ளக விடயங்களில் மனித உரிமைகள் பேரவை தலையிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆணையாளர் இந்த அறிக்கையில் சுட்டிய விடயங்கள் இலங்கைக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது நன்றாகத் தெரிகிறது. 49வது 51வது அமர்வுகளில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கைகள் இந்த மாத அறிக்கையைவிட மிகமிக முக்கியமானவையாக அமையும். இந்த இடைக்காலத்தில் சிங்களத் தரப்பு இதனை முறியடிக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு தனது கூட்டாளிகளை இணைத்துப் பலப்படுத்தும்.
மறுதரப்பில் தமிழ்த் தேசிய தரப்பினர் ஜெனிவாவுக்குத் துணையாக காய்களை எவ்வாறு நகர்த்தப் போகின்றனர். வழக்கம்போல குடுமிபிடிச் சண்டையா? ஊடக அறிக்கைப் போரா? அடுத்த தேர்தலை மையப்படுத்திய தங்கள் இருப்புக்கான போட்டியா?
பனங்காட்டான்