ஆஸ்திரேலியக் குடியுரிமை விதிகளில் மாற்றம் அறிமுகம்

சில திறமைசாலிகள் குடியுரிமை பெறுவதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வகையில், குடியுரிமை விதிகளில் சில மாற்றங்களை குடியேற்றம், குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர், Alex Hawke நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.

“ஆஸ்திரேலிய குடியுரிமை ஒரு அரிய சலுகை.  அது எளிதில் கிடைக்கக்கூடியதொன்றல்ல.  விண்ணப்ப தாரர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  நற்குணம் படைத்தவர்களாக (character) அவர்கள் இருக்க வேண்டும், அற நெறி கொண்டவர்களாக (values) அவர்கள் இருக்க வேண்டும், அத்துடன் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  அது மட்டுமின்றி, இந் நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்” என்று அமைச்சர் Alex Hawke கூறினார்.

 

Immigration Minister Alex Hawke.

 “இருந்தாலும் சில எதிர்கால குடிமக்களின் தனித்துவமான வேலை மற்றும் நாட்டிற்கு வெளியே பயணிக்க வேண்டிய தேவை காரணமாக அவர்களால் , ‘இந் நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாது என்பதால், விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது சில நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்துமாறு உள்துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

சிலர் செய்கின்ற வேலையின் தனித்துவமான தன்மை காரணமாக அவர்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்

சிறப்பு திறமை வீசா (distinguished talent visa) வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஆஸ்திரேலிய அணி ஒன்றில் அங்கம் வகிக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அமைச்சர் சிறப்பு குடியிருப்பு சலுகையை வழங்குவார்.

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், குடியுரிமை பெறத் தகுதி வாய்ந்த வீசா ஒன்றைப் பெற்ற பின்னர் 4 ஆண்டுகள் இந்நாட்டில் வசித்து வர வேண்டும் அத்துடன் தொடர்ச்சியாக 12 மாதங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது.

 

Australian citizenship

 சிலருடைய வேலை காரணமாக நாட்டை விட்டு வெளியே பயணிக்க வேண்டிய தேவை அதிகம் இருக்கலாம்.  நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விளையாட்டு வீரர்கள், கப்பலில் வேலை செய்யும் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட சிறப்பு திறமை வீசா வைத்திருப்பவர்கள் பலர் நாட்டிற்கு வெளியே பயணிப்பதால் இவர்கள் ‘4 ஆண்டுகள் இந்நாட்டில் வசித்து வர வேண்டும் அத்துடன் தொடர்ச்சியாக 12 மாதங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது’ என்ற நிபந்தனையை பூர்த்தி செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கலாம்.  எனவே, இந்த வீசா பெற்ற 4 ஆண்டுகளில் குறைந்தது 480 நாட்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தது மட்டுமின்றி, நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பதற்கு முந்தைய 120 நாட்களை இந்த மண்ணில் கழித்திருக்க வேண்டும் என்ற புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது.  அதன்படி, சிறப்பு திறமை வீசாவை முன்னர் பெற்றிருந்தவர்களும் இதன் அடிப்படையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது குறித்து மேலும் அறிந்து கொள்ள https://immi.homeaffairs.gov.au/citizenship/become-a-citizen என்ற இணையத் தளத்திற்கு செல்லவும்.