Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / பாரதி: ஒரு புரிதல்!

பாரதி: ஒரு புரிதல்!

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரைக் குறித்தும் அவரது எழுத்துகளைக் குறித்தும் எழுதியும் பேசிக்கொண்டும் இருக்கும் நிலையில், அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் எப்போதும்போலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாரதியைக் குறித்து திராவிடர் கழகத்தின் இதழ் ஒன்றில் வெளியாகிவரும் கட்டுரைத் தொடர் அதற்கு ஒரு உதாரணம்.

அந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியர் அடுக்கடுக்காக வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை: பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது, இந்து மதத்தைக் காப்பதற்கான ஆரிய சமாஜத்தின் முயற்சிகளில் ஒன்று, பாரதியும் அதைத்தான் செய்தார்; அவர் மீசை வைத்துக்கொண்டது சாதி மறுப்பின் அடையாளமல்ல, அது வடநாட்டு பிராமணர்களின் வழக்கம்; சாதியத்துக்கு அடிப்படையான வர்ணமுறையின் ஆதரவாளராகவே பாரதி இருந்தார். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து 1917-ல் டி.எம்.நாயர் சென்னையில் ஆற்றிய உரை புதுச்சேரியில் இருந்த பாரதிக்குக் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், அவரும் சுயசாதி அபிமானியாகத்தான் இருந்துள்ளார்; இந்திய நாடே பாரதிக்கு ஆரிய தேசமாக மட்டும்தான் காட்சியளிக்கிறது; ஆர்எஸ்எஸ் உருவாவதற்கு முன்னாலேயே அதன் அடிப்படைச் சித்தாந்தங்களை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தவர் அவர். இப்படியெல்லாம் கூறும் அவர் ஆதாரங்களாக பாரதியின் கவிதைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் நிறைய மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார்.

பாரதியை மக்கள் கவி என்று அண்ணாவும் அவரின் பின் வந்த சில திராவிட இயக்கத் தலைவர்களும் பாராட்டியிருக்கலாம். ‘ஒருவனே தேவன்’ என்று நல்லிணக்கப் பாதையைத் தேர்ந்துகொண்டவர் அண்ணா. அது பெரியாரின் பார்வைக்கு நேர் எதிரானது. ‘தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற மற்றொரு வகை முயற்சிதான், பாரதி விழாவும் பாரதியை ஒட்டிய பிற நினைவுக்குறி நிகழ்ச்சிகளும் ஆகும்’ என்பதே பெரியாரின் பார்வை. (குடிஅரசு 18.10.1947). பாரதி மட்டுமில்லை, உவேசா, மு.ராகவன் ஆகியோரையும் பெரியார் அவ்வாறே மதிப்பிடுகிறார். தமிழ் இலக்கியங்கள் சாதியைக் காப்பாற்றும் இலக்கியங்கள் என்ற பெரியாரின் மதிப்பிடலுக்குப் பாரதியும் தப்பவில்லை.

பாரதி, அத்வைதம் பேசிய ஒரு வேதாந்தி. உபநிடதங்களையும் அவற்றின் முன்தொடர்ச்சியான வேதங்களையும்தான் வேதாந்திகள் போற்றிப் புகழ்வார்கள். பாரதி பிராமணராக இல்லையென்றாலும்கூட அதுதான் நடந்திருக்கும். நமக்குப் பிடித்த கடவுள் மறுப்புக் கொள்கையை ஏன் ஒரு அத்வைதி பேச வேண்டும்? மேலும், பெரியார் பேசிய பொருள்முதல்வாதம் உபநிடதங்களிலேயே பேசப்பட்டிருக்கிறது. காணாத எதையும் ஏற்றுக்கொள்ளாத பிரத்யட்சவாதிகளின் குரல்களும் உபநிடதங்களில் இடம்பெற்றிருக்கின்றன. அவை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதாலேயே தள்ளிவைத்துவிட வேண்டுமா? உலகம் தன் போக்கிலேயே இயங்குகிறது என்றும் அறிவதற்கியலாத ஆற்றலால் இயக்கப்படுகிறதென்றும் இருவேறு கருத்துகள் ஆதி காலத்திலிருந்தே தொடர்கின்றன. பகுத்தறிவாளர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வோர் விரும்பினால், தங்களுக்கான வாதங்களையும் உபநிடதங்களிலிருந்தும்கூடப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாரதியைப் பொறுத்தவரை, தத்துவச் சார்புகளைக் காட்டிலும் பிறப்புதான் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதற்கான காரணம். சமத்துவம் நாடும் ஒருவர், இயன்றவரையில் சாதியத் தளையிலிருந்து விடுபட முயல்வதுதானே இயல்பானதாக இருக்க முடியும்? இந்தக் கேள்வி பாரதியை மட்டுமல்ல, சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரையுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுகிறது. இத்தனைக்கும் பாரதி சுயசாதி மீதான விமர்சனங்களையும் கோபத்தையும் பல இடங்களில் வெளிப்படுத்தியவர். நூறாண்டு கழித்துத் தற்காலத்தின் கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கும்போது, பாரதியிடம் சிற்சில போதாமைகள் கண்ணுக்குத் தென்படலாம். அவற்றைக் கொண்டு மட்டும் பாரதியை எடைபோட்டுவிடக் கூடாது.

பாரதி தவிர்க்கவியலாத தமிழ்க் கவி. அவர் வேத உபநிடதங்களைப் புகழ்ந்திருக்கலாம். அவற்றையே தனது பாடுபொருளாகவும் கொண்டிருக்கலாம். ஆனால், அவற்றைத் தமிழில் பாடியவர். உரைநடையில் அன்றைய நிலையைப் பின்பற்றி வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் கவிதையில் மொழிக் கலப்புக்கு இயன்றவரையில் இடம்கொடுக்காதவர். தமிழ்க் கவிதையின் திசைவழியைத் தீர்மானித்தவர். அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஒரு தரப்பும் இருக்கவே செய்யும். ஆனால், பாரதியைத் தவிர்த்துவிட்டு தமிழ்க் கவிதையின், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை எழுதிவிட முடியாது.

About குமரன்

Check Also

தமிழர்கள் எப்படி நம்புவது?

ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ...