`கொரோனா சூழல் இல்லாதபோதும் கூட அது வேண்டாமே..!’ – நியூசிலாந்து பிரதமர்

கோவிட் முதல் அலையைத் திறமையாகக் கையாண்டு சாதனைபடைத்தது நியூசிலாந்து. ஆனால், உருமாறிய டெல்டா வைரஸால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இதற்கிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். பிரதமர் ஆர்டெர்ன், `மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகள், பார்வையாளர் சந்திப்பின்போது உடலுறவில் ஈடுபடக் கூடாது’ எனக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

கொரோனா பாதிப்பு குறித்து தினசரி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, மக்களுக்கு நிலைமையை தெரிவிக்கும் அன்றாட நிகழ்வின்போது பத்திரிகையாளர் ஒருவர் குளிர்காலத்தைச் சுட்டிக்காட்டி, கோவிட் பாதித்த நோயாளிகள், பார்வையாளர் சந்திப்பு நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, பிரதமரின் முகம் சற்று மாறியது. உடனே பத்திரிகையாளருக்கு பதிலளித்த சுகாதாரத்துறைச் செயலாளர், “அவ்வாறு செய்வது ஆபத்தில் முடியலாம். எனினும், அது குறித்துத் தெளிவாகக் கூற முடியாது” என்றார். அப்போது, குறுக்கிட்ட பிரதமர் ஆர்டர்ன், “கோவிட் சூழல் இல்லாதபோதுகூட பார்வை நேரத்தில் அம்மாதிரி காரியங்களில் ஈடுபடலாகாது என நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

நியூசிலாந்தின் சில பகுதிகளில் கோவிட் நோயாளிகளைப் பார்க்க நேரடியாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மருத்துவ நிர்வாகம் அனுமதிப்பதாகவும், அவ்வாறு பார்க்க வருபவர்கள் நோயாளிகளுடன் உடலுறவுகொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே டெல்டா கோவிட் தொற்றுக்குப் பிறகு அதிக மக்கள் பாதிக்கப்பட்டு, நாட்டின் பல இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நியூசிலாந்தில் நிலையைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஸ்பெயினிலிருந்து 2,50,000 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் சந்திப்பில், “தடுப்பூசி போட முடியாத குழந்தைகளைக் காக்கவேண்டி, பெரியவர்கள் அனைவரும் விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” எனவும் பிரதமர் கூறினார்.