அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் காவலாளிக்கு கோவிட் தொற்று!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள காவலாளிக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, குடிவரவுத் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காவலாளிக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பில்லை என சொல்லப்பட்டு வந்த நிலையில், மற்றொரு காவலாளிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து 35 முதல் 45 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதே சமயம், இந்த தகவல் குறித்து அவுஸ்திரேலியா எல்லைப்படை இதுவரை எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை.தடுப்பு முகாம்களில் உள்ள பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களுக்காக கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள்,” என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் திட்ட மேலாளர் சதாப் இஸ்மாயில் கூறுகின்றார்.

இந்த நிலையில், குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சமூகத்திற்குள் விடுதலைச் செய்யுமாறு தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம், ஆமென்ஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் சட்ட மையம் உள்ளிட்ட 140 அமைப்புகள் அவுஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.