ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்

தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’. 

பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையிடலின் பதின்மூன்று பக்கச் சுருக்கத்தை கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது.

உள்நாட்டுப் பொறிமுறைகள் மிகவும் சீராக இயங்குவதான தோற்றப்பாட்டைக் கொடுக்கும் வகையில் 14 தலைப்புகளில் 25 புள்ளிகளில் கனகச்சிதமாக அவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதைப் பார்த்து வியந்து போயிருப்பதாகப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் தகவலறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையிடல் மூலம் கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இயங்கிய மைத்திரி- ரணில் அரசாங்கம் எந்தவகையில் ஐ.நா. பொறிமுறைகளுடன் ஒத்து இயங்கியதோ அதே அளவிலே தாமும் இயங்கப்போவதான ஒரு செய்தியை சர்வதேச சமூகத்திற்கு நுட்பமாக பீரிஸ் வெளியிட்டிருப்பதாக ஜெனீவா மனித உரிமை வட்டாரங்கள் கருத ஆரம்பித்துள்ளன.

இதனால் எதிர்வரும் 13ம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாய்மூல அறிக்கையிடலை மேற்கொள்ளவிருக்கும் மிச்சல் பச்சலேற் அம்மையார் தனது கடும் தொனியை மிகவும் குறைத்த ஒரு நிலையிலேயே கருத்து வெளியிட இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர் தனது பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன் கொழும்பில் இருக்கும் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோணாப் பேரிடரின் மத்தியிலும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாகப் பாவலா காட்டும் விதத்தில் புள்ளிவிபரங்கள், பணத் தொகை மற்றும் நில அளவுகளை கொழும்பின் வெளிநாட்டமைச்சு புள்ளிவிபரங்கள் மற்றும் எண்கள் ஊடாக முன்வைத்திருக்கிறது.

அதேவேளை, கொழும்பில் நிலைபெற்றிருக்கின்ற அனைத்து இராஜதந்திர பணிமனைகளுடனும் தமது ”உயர் உத்தரவாதத்தைப் புதுப்பித்துக்” கொள்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அறிமுகக் கடிதம் தெரிவித்துள்ளது.

தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மறைந்த மங்கள சமரவீர தனது ”நல்லாட்சிக்” காலத்தில் சர்வதேசப் பொறிமுறைகளுடன் இணைந்து இயங்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு, நடைமுறையில், உள்ளகப் பொறிமுறையை மட்டுமே செயற்படுத்தும் உத்தியைக் கையாண்டிருந்தார்.

ஆனால், பீரிஸ் உள்ளகப் பொறிமுறை ஊடாக வெளியகப் பொறிமுறைக்கு ஒப்பாகச் செயற்பட முடியும் என்று நிறுவ முற்படுவது போலவும், சர்வதேச அழுத்தங்களைத் தாம் உணருவது போலவும் தனது அறிக்கையிடலை வடிவமைத்திருக்கிறார்.

நடைமுறையில் இரண்டும் ஒரே அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே தெரிகிறது என்று குறித்த அறிக்கையை முழுவதுமாக வாசித்த ஒரு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கூர்மைக்குக் கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகள் என்ற தலைப்பில் ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வு இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இருந்து மேற்கொள்ள முடியாதென்ற வாதம் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மூன்று வழிகளில் தனது ஒற்றையாட்சியை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இந்த அறிக்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நியாயப்படுத்தியிருக்கிறது.

spacer.png

2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில அரசாங்கம் கையாண்ட அதே உத்தியைக் கையெலடுத்துக் குறிப்பாக அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மங்கள சமரவீர கையாண்ட அணுகுமுறைகளில் இருந்து சற்றும் விலகாமல் அந்த மூன்று வழிகளை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது.

ஒன்று- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மூலமாக விசாரணைச் செயற்பாடுகளும் அதன் மூலமான நீதிமன்ற விசரணைகளையும் அரசாங்கம் நியாயப்படுத்தி உறுதிப்படுத்துகின்றது.

இரண்டாவது- தமிழ்க் கட்சிகள், தமிழ் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடனான செயற்பாடுகள். குறிப்பாகக் காணிகளைக் கையளித்தல் என்பது தமிழ் அதிகாரிகளின் செயற்பாடகக் காண்பிக்கப்பட்டுள்ளதோடு தமிழ்க் கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன என்பதாகும்.

அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டுக்கும் தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றன என்பதன் மூலமாக இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைத் தமிழர்கள் ஏற்றுள்ளனர் என்ற செய்தி வெளியிடப்படுகின்றது.

மூன்றாவது- எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கை ஒத்துழைத்துச் செயற்படுகின்றது என்ற சர்வதேசத்துக்கான நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆகவே இந்த மூன்று வழிமுறைகளையும் ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படுத்தியதன் மூலம் வடக்குக் கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் என்ற சொல்லாடல்கள் அவதானமாகத் தவிர்க்கப்பட்டிக்கின்றன. ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாகவும் அதற்கான தீர்வு என்ற கோணத்திலும் நடந்தது போர் அல்ல, அது மக்களை மீட்கும் பணி என்றே எண்ணத் தோன்றும் வகையிலும் அந்த அறிக்கையின் சொல்லாடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அ.நிக்ஸன்