நெஞ்சுக்கு முன் துப்பாக்கியை நீட்டியபோதும் அசராத பெண்

ஆப்கானிஸ்தானில் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தலிபான்கள் தரப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களால் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக பல பெண்கள் களத்துக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இப்படி காபூல் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் அந்நாட்டுக் குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காபூல் போராட்டத்தின் போது தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், களத்தில் இருந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார். அதற்கு சற்றும் அசராமல் அந்தப் பெண், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். இது குறித்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.