ஷங்கரின் மகள் அதிதியை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என ‘விருமன்’ படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன்.
இயக்குநர் ஷங்கர் வீட்டில் இருந்து சினிமாவுக்கு புது வரவு. ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி டாக்டருக்கு படித்த கையோடு, சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.
சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். சென்னையில் நேற்று காலை நடந்த ‘விருமன் பூஜையில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்று அதிதியை வாழ்த்தியிருக்கிறார்கள்.
ஷங்கரின் மகளை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என ‘விருமன்’ படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன்.
” ‘விருமன்’ படத்துக்காக புதுமுகம் தேடிட்டு இருந்தோம். அந்த சமயம் மேனேஜர் தங்கதுரை, ‘இயக்குநர் ஷங்கர் சாரின் இரண்டாவது மகள் அதிதி, சினிமாவில் நடிக்க விரும்புறாங்க’னு சொன்னார். அப்ப ‘ஷங்கர் சார் சம்மதிச்சாங்களா?’னு அவர்கிட்ட கேட்டோம். ‘ஷங்கர் சாரும் பர்மிஷன் கொடுத்துட்டார். உன்னோட விருப்பம் எதுவோ அதை தைரியமா பண்ணுன்னு பொண்ணுகிட்ட ஷங்கர் சார் சொல்லியிருக்கார்’ என்றார்.
அதிதி சின்ன குழந்தையா இருக்கும் போதிலிருந்தே எங்களுக்கு நல்லா தெரியும். அப்ப ஷங்கர் சாரோட பக்கத்து வீடு சூர்யா வீடு. அவருக்கு எதிர் வீடு எங்க வீடு. அதனால, அப்போதில் இருந்தே தெரியும். சின்னக்குழந்தையா பார்த்தவங்க சமீபத்துல எம்.பி.பி.எஸ் முடிச்சிருக்காங்கனு கேள்விப்பட்டதும் ஆச்சரியமாகிடுச்சு. அவங்களை நேர்ல பார்த்ததும், அவங்க இந்தக் கதைக்கான சரியான முகமா தெரிஞ்சாங்க. அதனாலேயே இந்த படத்துக்குள்ள அவங்க வந்துட்டாங்க. அதிதி ரொம்பவே சிம்பிள் அன்ட் ஹம்பிள். ஷங்கர் சாரின் சரியான வளர்ப்பும், பண்பும் அப்படியே அவங்ககிட்ட பிரதிபலிச்சது.
கார்த்தி ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி… சூர்யா தயாரிப்பில் கதாநாயகி ஆனது ஏன்?
எல்லார்கிட்டயும் மரியாதை கொடுத்து எளிமையா பழகுறாங்க. ‘விருமன்’ல அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்க இப்பவே உழைக்க ஆரம்பிச்சிருக்காங்க. ட்ரெயினிங் எடுத்துட்டு இருக்காங்க. ட்விட்டர்ல அவங்க சூர்யா சாருக்கும் ஜோதிகா மேடமுக்கும் நன்றி சொல்லியிருக்காங்க. ‘நீங்க பெருமைப்படுற மாதிரி நூத்துக்கு நூறு கடினமா உழைப்பேன்’னு சொல்லியிருக்காங்க. நடிப்பு மீதான அதிதியின் passion அவங்களை நிச்சயம் பெரிய உயரத்துக்கு கொண்டு போகும். அதிதியை எங்க நிறுவனம் அறிமுகப்படுத்துறது பெருமையா, சந்தோஷமா இருக்கு. வெல்கம் அதிதி” என்றார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.