நோக்கியா 3310 தொலைபேசியை முழுவதுமாக விழுங்கிய நபருக்கு இம்மாதத் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்த போன் நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் கொசோவோவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”கொசோவோ நாட்டில் உள்ள பிரிஸ்டினா நகரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் 2000ஆம் ஆண்டின் தொடக்கக் கால மாடலான நோக்கியா 3310 போனை முழுமையாக விழுங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் இளைஞர் விழுங்கிய போன் அவரது வயிற்றுப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் தலுகு கூறும்போது, “போனை விழுங்கிவிட்டதாக ஒரு நோயாளிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு ஸ்கேன் செய்ததில் போன் மூன்று பகுதிகளாக வயிற்றில் இருந்தது. பின்னர் அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.
அந்த இளைஞர் நோக்கியோ போனை ஏன் விழுங்கினார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.