உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்- அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவுக்கு படகில் சட்டத்திற்கு புறம்பாக வந்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் என அந்நாட்டு எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் எந்த வகையிலும் படகு வழியிலான அகதிகள் வரவுக்கு இடமளிக்காது என அவுஸ்ரேலிய அரசு முன்பே எச்சரித்திருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல் விடுத்துள்ள எச்சரிக்கையில், அகதிகள் மீள் குடியேற்றம் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் ஒப்பந்தம் ஒரு முறை மட்டுமே இடம்பெறும் தீர்வாகும். புதிதாக வரும் எவருக்கும் இது கிடைக்காது. எதிர்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்குள் வந்து சேர முயற்சிக்கும் எவருக்கும் இது கிடைக்காது.

அப்படியே நீங்கள் வந்தாலும் எங்களின் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவீர்கள். நீங்கள் உங்கள் பணத்தை வீணாக்கி உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். முன்னரைக் காட்டிலும் அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு ஏற்பாடுள் பலமாக உள்ளன. வான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.

அத்துடன் சட்ட விரோத படகை உறுதி செய்ய அதிகளவு கப்பல்களை ஈடுபடுத்துவோம். நீங்கள் சட்ட விரோதாக படகில் வர முயற்சித்தால் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவது ஒரு போதும் நிறைவேறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய தளபதியின் இந்த எச்சரிக்கை இலங்கை, இந்தியா, சூடான், சோமாலியா, இநதோனேசியா, மியான்மர் ஈராக் உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பது, அகதிகள் பிரச்சனை தொடர்பான சர்வதேச நிலையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.