தற்போது கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதிக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதருவதாக நாயாற்றுப் பகுதி மீனவர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்கள் முடக்க நிலையையும் மீறி நுழைவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவைத் தோற்றுவிக்கும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறு முடக்க காலத்தில் நாயாற்றுப்பகுதிக்கு வருகைதரும் வெளிமாவட்ட மீனவர்களைத் தடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பும், உரிய அரசதிணைக்களங்களும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த முடக்ககாலத்திலும் நாயாற்றுப் பகுதிக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதருவதாக அங்குள்ள தமிழ் மீனவர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இவ்வாறு வருகைதரும் வெளிமாவட்டமீனவர்களால் அப்பகுதிக்குரிய தமிழ் மீனவர்கள் மிகவும் அச்சமடைந்த சூழலில் வாழ்கின்றனர்.
குறிப்பாக கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி முதல்தடவையாக செம்மலை கிழக்கு நாயாறுப்பகுதியில் உள்ள வெளிமாவட்ட மீனவர்கள் 25பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவிலே ஐவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டிருந்தது.
அதேவேளை குறித்த செம்மலை கிழக்கு நாயாற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குடும்பங்களுடன் தங்கியிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் பதிவுகள் இன்றி இருந்ததாகவும், இதனால் அங்கு எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்பதிலும், பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் பலத்த இடர்பாடுகள் நிலவுவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அங்கிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் பரிசோதனைச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், தனிமைப்படுத்தலை மீறி வெளியிடங்களுக்குச் சென்றுவருவதாகவும் அதனால் தொற்று மேலும் அதிகரிக்கலாம் எனவும் அப்போது பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் அதன்பின்னர் அப்பகுதியில் தங்கியிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் வெளியில் செல்ல முடியாதவாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் தாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், தமது சொந்த இடங்களுக்குச் செல்லவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் நாயாற்றிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தனர்.
இவ்வாறு தமது சொந்த இடங்களுக்குச் சென்ற வெளிமாவட்ட மீனவர்கள் மீளவும் தற்போது நாயாற்றுப் பகுதிக்கு வருகைதருவதாக நாயாற்றுப்பகுதிக்குரிய தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடந்த 30.08.2021அன்று 10படகுகளில் சிலாபம், கருக்குப்பனைப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாயாற்றுப்பகுதிக்கு வருகைதந்திருப்பதாகவும், தொடர்ச்சியாக வெளிமாவட்டங்களிலிருந்து படகுகளில் மீனவர்கள் நாயாற்றுப்பகுதிக்கு வருகைதருவதாகவும் நாயாற்றுப் பகுதித் தமிழ் மீனவர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.
ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 29.08.2021 அன்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 50கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதேபோல் 30.08.2021அன்று 60 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை 31.08.2021அன்று மாத்திரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு கொரோனத் தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளதுடன், இதுவரையில் 21கொவிட் மரணங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையினையும் அவதானிக்கமுடிகின்றது.
இந் நிலையில் இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து நாயாற்றுக்கு மீனவர்கள் வருகைதருவது முல்லைத்தீவு மாவட்டத்திற்கே பாரிய ஆபத்தினைத் தோற்றுவிக்கும்.
இவ்வாறு கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், நாடு முடக்கப்பட்டுள்ளது. இப்படியாக நாடு முடக்கப்பட்டுள்ளபோது வெளிமாவட்டங்களிலிருந்து மீனவர்கள் நாயாற்றுப் பகுதிக்கு வருகைதருகின்றனர். இவர்களுக்குரிய அனுமதியை வழங்கியது யார்? இவர்களைக் கட்டுப்படுத்தவேண்டிய பாதுகாப்புத் தரப்பினரும், உரிய அரச திணைக்களங்களும் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்?
முல்லைத்தீவு மாவட்டம் என்பது கடந்த 2009ஆம் ஆண்டு பாரிய உயிரிழப்புக்களைச் சந்தித்த ஓர் மாவட்டமாகும். அத்தகையதான சூழலை கொவிட் தொற்றினூடாக மீண்டும் ஏற்படுத்துவதற்கு இந்த அரசு முயல்கின்றதா?
இந்த கொவிட்தொற்று பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பாதுகாப்புத் தரப்பினரும், வெளிமாவட்ட மீனவர்களைக் கட்டுப்படுத்தவேண்டிய கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களும் கரிசனையுடன் செயற்படவேண்டும்.
நாட்டினுடைய முடக்கத்தை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும். வெளிமாவட்ட மீனவர்களின் வருகையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்படப்போகின்ற பாரிய அழிவைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் – என்றார்.