அவுஸ்ரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடியெல்டு நகரில் பகல்–இரவு மோதலாக நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்களுடன் திடீரென ‘டிக்ளேர்’ செய்தது. கப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 118 ரன்கள் விளாசினார். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்ரேலியா தொடக்க நாள் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த அவுஸ்ரேலிய அணி ஆட்ட நேர இறுதியில் 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. 5–வது சதத்தை பூர்த்தி செய்த உஸ்மான் கவாஜா 138 ரன்களுடனும் (285 பந்து, 12 பவுண்டரி), மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடனும் (50 பந்து) களத்தில் இருக்கிறார்கள். கேப்டன் ஸ்டீவன் சுமித் (59 ரன்), ஹேன்ட்ஸ்கோம்ப் (54 ரன்) அரைசதம் அடித்தனர். இது தென்ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 48 ரன்கள் அதிகமாகும். 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.