அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா?

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார்.

முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்குரிய நிகழ்ச்சிநிரல் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு. மேற்கு நாடுகளுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில்  டீல் ஒன்றை உருவாக்குவதே அவருடைய அமெரிக்க விஜயத்தின் நோக்கம் என்று கருதப்படுகிறது.அந்த டீலின் பிரகாரம் மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா covid-19இற்கு  எதிரான நடவடிக்கைகளுக்கென்று இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக உதவிகளை புரிந்து வருகிறது. மேலும் அமெரிக்கா தலைமையிலான குவாட் நாடுகளுக்கு திருகோணமலையில் காணிகளைக் கொடுக்கும் ஓர் உடன்படிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டு வருகிறது. அதோடு அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் உதவிகளைப்  பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக  புதிய வெளியுறவு அமைச்சர் பீரிசும்  இந்தியாவுக்கான விசேட அந்தஸ்துடைய தூதுவர் மிலிந்த மொரகொடவும் வொசிங்டனுக்குச் செல்ல இருப்பதாக ஒரு தகவல் உண்டு.இலங்கைத்  தீவு கடன் உதவிகளுக்காக சீனாவிடம் மட்டும் தங்கியிருக்காமல் மேற்கு நாடுகளிடமும் தங்கியிருக்கும் விதத்தில் உதவிகளை வழங்குவதே புதிய நகர்வுகளின் நோக்கம் என்று தெரிகிறது.மேற்குநாடுகளின் நிதி உதவிகளைப் பெறுவதென்றால் அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பில் மேற்கு நாடுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். இதுவும் தமிழ்த் தரப்புடன் பேச வேண்டிய தேவைகளை அதிகப்படுத்துமா?

இவ்வாறு அமெரிக்காவுடன் ஒருமுனையில் அரசாங்கம் சுதாரிக்க தொடங்கிவிட்டது. மறுமுனையில் ஐரோப்பிய யூனியன். ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்று ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. அதற்கமைய நாட்டின் நிலவரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணித்து வருவதாக இலங்கைக்கான தலைமை அதிகாரி டெனிஸ் சாய்பி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய யூனியனின் நிபந்தனையை ஏற்று அரசாங்கம் சில சுதாரிப்புக்ககளை ஏற்கனவே செய்யத் தொடங்கிவிட்டது. முதலாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான ஒரு குழுவை உருவாக்கியது. அன்மையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.அதோடு அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சுமந்திரனும் ஜிஎல்பீரிசும் சந்தித்துப் பேசியி ருக்கிறார்கள். கடந்தமுறை ஜி.எஸ்.பி வரிச்சலுகை விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தமிழ்த்தரப்பே பிணையெடுத்தது.இம்முறையும் அரசாங்கம் அந்த நோக்கத்தோடு தமிழ்த் தரப்பை ஆகுமா? இது இரண்டாவது முனை.

மூன்றாவது முனையில் ஐநாவோடும் அரசாங்கம் சில சுதாகரிப்புகளை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐநாவுக்கு விடுத்த அழைப்பின் நோக்கமும் அத்தகையதுதான். அது போல ஏற்கனவே நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை அரசாங்கம் கலைக்காமல் தொடர்ந்தும் பேணிவருகிறது.அக்கட்டமைப்புக்கள் இப்பொழுது வினைத்திறனோடு இயங்குவதில்லை. எனினும் அந்த அலுவலகங்களை அரசாங்கம் மூடாமல் வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல அண்மையில் கிளிநொச்சியில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ரகசியமாக திறக்கப்பட்டது. இவை தவிர ஐநா வை நோக்கி அரசாங்கம் மேலும் சில சுதாகரிப்புக்களைச் செய்யலாம் என்று தெரிகிறது.

நாலாவது இந்தியாவை நோக்கி மிலிந்த மொரகொட ஒரு மூலோபாயத் திட்டத்தொடு போகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே ஏற்பட்டிருக்கக் கூடிய மனஸ்தாபங்களை நீக்க மிலிந்த முயற்சிப்பார் என்று நம்பப்படுகிறது

மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. பசில் ராஜபக்ச தன் வேலையை தொடங்கிவிட்டார். மிகக் குறுகிய காலத்தில் மிக விரைவாக அவர் சேதங்களை சீர்செய்யும் வேலைகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் முகமாக பசிலை முன்னிறுத்தி அரசாங்கம் தான் செய்ய விரும்பிய எல்லா சுதாரிப்புக்களையும் செய்து வருகிறது. அது ஒரு அரசுக் கட்டமைப்பு. எனவே மாற்றங்களைச் செய்வது என்று முடிவெடுத்த பின் அதற்குப் பொருத்தமான நியமனங்களைச் செய்துவிட்டு அவற்றை முன்வைத்து விரைவாக வெளியுறவுச் சுதாகரிப்புகளைச் செய்து வருகிறது.அதன்மூலம் வெளியுறவுப் பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமை ஒப்பீட்டளவில் மாறி வருகிறது.

ஆனால் அரசற்ற சிறிய மக்கள் கூட்டமான தமிழ்மக்கள்;தோற்கடிக்கப்பட்ட நிலையில் இருந்து தமது பேரத்தை மேலும் உயர்த்த முடியாதிருக்கும் தமிழ்மக்கள் என்ன செய்கிறார்கள்? அரசாங்கம் தமிழ்த்  தரப்போடு பேச வேண்டிய தேவைகள் அதிகரித்து வருமொரு சூழலில் தமிழ்த் தரப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது?

சுமந்திரன் தமிழ் மக்களின் வெளிவிவகாரத்  தூதுவர் போல  எல்லாச் சந்திப்புகளையும் முன்னெடுக்கிறார். கூட்டமைப்பின் வெளிவிவகார பிரதிநிதி தானே என்று கூறுகிறார்.ஊடகங்களுக்கு அது தொடர்பில் விளக்கம் அளிக்கிறார்.ஜி.எல்.பீரிசுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்பு உத்தியோகபூர்வமானது அல்ல என்றும் அவர் கூறுகிறார்.கூட்டமைப்புக்குள் தூதரகங்களோடும் ராஜதந்திரிகளோடும் அதிகம் தொடர்புகளை கொண்டவராகவும் தொடர்ச்சியாக  இடையூடாடும் ஒருவராகவும் அவரே காணப்படுகிறார்.அவர் ஒரு ராஜதந்திரியை அல்லது  அரசு தரப்பில் ஒருவரை எதற்காகச் சந்திக்கிறார்? யாரோடு போய் சந்திக்கிறார்? என்று அவரைக் கேள்வி கேட்கும் நிலையில் கூட்டமைப்புக்குள் அநேகமாக யாரும் இல்லை. இதுதான்  பிரச்சினை.

மொழியறிவும் சட்ட அறிவும்தான் அதற்குரிய தகமைகள்  அல்ல. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு உண்மையாக இருப்பதுதான் முதலாவது தகுதி.இரண்டாவது தகுதி பொருத்தமான ஒரு வெளியுறவுத் தரிசனத்தைக் கொண்டிருப்பது. மொழி ஒரு பிரச்சினையே அல்ல.மொழிபெயர்பாளரை  வைத்துக்கொள்ளலாம். உத்தியோகபூர்வ சந்திப்பு என்று வரும்பொழுது அதில்  யார் கலந்து கொள்வது என்பதனை முதலில் தீர்மானிக்க வேண்டும். ராஜதந்திரிகளோடும் அரசதரப்பு அரசியல்வாதிகளோடும் சகஜமாக இடையூடாடுவது வேறு உத்தியோகபூர்வமாக உரையாடுவது வேறு.இங்கே பிரச்சினை என்னவென்றால் கூட்டமைப்புக்குள் அதற்குரிய கட்டமைப்புக்கள் எதுவும் கிடையாது என்பதுதான்,

சுமந்திரனும் சம்பந்தரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் பங்காளிக் கட்சிகள் கலந்தாலோசிக்கப் படுவதில்லை என்றுதெரிகிறது.பங்காளி கட்சிகள் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் தலைவராகிய மாவையோடும் அவர்கள் கலந்தாலோசிப்பது இல்லை என்று தெரிகிறது.அண்மையில் டெலோ இயக்கம் தமிழ் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் தொடர்  முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒரு மெய்நிகர் சந்திப்பை ஒழுங்கு படுத்தியது.அச்சந்திப்பில் முதலில் சுமந்திரன் அழைகப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் அது கட்சித் தலைவர்களுக்கான சந்திப்பு. ஆனால் உரையாடலின் போக்கில் ஸ்ரீகாந்தா கேட்ட சில விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு சுமந்திரனை சந்திப்பின் இறுதிக்கட்டத்தில் அழைக்க வேண்டி வந்தது. அவர் உரையாடலில் பங்குபற்றிய போதே ஒரு விடயத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்று கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்காத ஒரு கட்சி தலைவர் தெரிவித்தார்.அது என்னவெனில் சம்பந்தரும் சுமந்திரனும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கு மட்டுமல்ல மாவைக்கும்கூட விடயங்கள் தெரிவிக்கப் படுவதில்லை என்று.

ஒரு கட்சித் தலைவராக இல்லாத போதிலும் சுமந்திரனை அழைக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?ஏனென்றால் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்தான் எல்லாமுமாக தெரிகிறார்.கட்சிக்குரிய உத்தியோகபூர்வ சந்திப்புகளில் அவர்தான் சம்பந்தரோடு போகிறார்.இதுவிடயத்தில் பங்காளிக்கட்சிகள் என்னதான் எதிர்ப்பைக் காட்டினாலும் சுமந்திரன் கூட்டமைப்புக்குள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக தொடர்ந்தும் காணப்படுகிறார். அவர் அவ்வாறு தனி ஓட்டம் ஓடக்கூடாது என்று கருதும் பங்காளி கட்சிகளும் தமிழரசுக்கட்சியின் மாவை அணியும் அதற்கு எதிராக  வலிமையான எதிர்ப்பைக் காட்ட முடியாமல் இருக்கின்றன என்பதே உண்மை.

முதலில் கூட்டமைப்புக்குள் இருக்கும் எல்லாத் தரப்புக்களும் வெளியுறவுக் கொள்கை பொறுந்தும் வெளிவிவகார பேச்சுக்கள் பொறுத்தும்  ஒரு கூட்டு நடவடிக்கைக்கு போகவேண்டும்.அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்குப் பின்னரே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கு இடையேயான ஒரு பொது கட்டமைப்பைப் பற்றி யோசிக்கலாம்.

ஆண்மையில் டெலோ  ஒழுங்குபடுத்திய மெய்நிகர் சந்திப்பில் ஒப்பீட்டளவில் அதிகளவிலான கட்சிகள் பங்குபெற்றன.அதில் புளெட்டும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்குபற்றவில்லை.இதுபோன்ற சந்திப்புக்களை சித்தார்த்தன் தவிர்க்கிறார்.மக்கள் முன்னணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கு  இதுவரை அனுகூலமான பதில்வினைகளைக்  காட்டல்லை..

இவ்வாறான ஒரு பின்னணியில் டெலோ ஒழுங்கு செய்த மெய்நிகர் சந்திப்பில் ஒப்பீட்டளவில் அதிக தொகை தமிழ்த் தேசியக்  கட்சிகள் பங்குபற்றியிருந்தன ஜநாவை அணுகுவதற்குரிய கூட்டு முயற்சிகள் மற்றும் பேச்சுவார்தைகளுக்கு எப்படித் தயாராகுவது என்பன குறித்து அச்சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. அது ஒரு நல்ல தொடக்கம்.அச்சந்திப்பின்  முடிவுகளுக்கு சுமந்திரனைப் பொறுப்புக்கூற  வைப்பதில் முதலாவது வெற்றி இருக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அதற்குள் இணைப்பதில் அடுத்த கட்ட வெற்றி இருக்கிறது.மக்கள் முன்னணி அதற்குள் இணைய மறுத்தால் ஏனைய  11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை  உருவாக்கலாம். அப்பொதுக்கட்டமைப்பு ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கையின் பிரகாரம் ராஜதந்திரிகளை சந்திப்பது   ஜெனிவாவை கையாள்வது போன்ற எல்லா  விடயங்கள் குறித்தும் கட்டமைப்பு ரீதியிலான விஞ்ஞானபூர்வமான ஒரு அணுகுமுறைக்கு போகலாம்.

அரசாங்கம்  தமிழ்த்தரப்போடு பேச வேண்டிய தேவைகள் அதிகரித்து வருகின்றன.அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட வெளித் தரப்புக்கள்  இனப்பிரச்சினை பொறுத்து தலையிட வேண்டிய தேவைகளும் அதிகரிக்கின்றன. அத்தேவைகள் அந்தந்த நாடுகளின் அரசியல் பொருளாதார ராணுவ நோக்கு நிலையிலிருந்து ஏற்பட்டவைதான். அதாவது இலங்கைத்தீவில்  தலையிட விரும்பும் எந்த ஒரு வெளியரசுக்கும் இனப்பிரச்சினைதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருக்கிறது. அத்தேவைகளை தமிழ்நோக்கு நிலையிலிருந்து கையாள்வதற்கு  தமிழ்த் தரப்புக்கு ஒரு  பொதுக்  கட்டமைப்பு அவசியம்.ஒரு கூட்டு முடிவு அவசியம்.

நிலாந்தன்