கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் எங்கே தோன்றியது என்பதை கண்டறிய அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறுகிற நிலைதான் இன்றளவும் நிலவுகிறது. உலகளவில் இந்த தொற்றினால் இதுவரையில் 21 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 06 ஆயிரத்து 244 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது சீனாவின் வுகான் நகர மாமிச சந்தையில் தோன்றி பரவியதாக நம்பப்படுகிறது. மேலும், வுகான் நகர வைரலாஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்ததாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் குற்றம்சாட்டினார். இதை சீனா மறுத்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
இந்த நிலையில், அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி 90 நாளில் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு கடந்த மே மாத இறுதியில் அதிரடியாக உத்தரவிட்டார்.
அமெரிக்க உளவு அமைப்புகள் இது தொடர்பாக விசாரணை நடத்தின. ஆனால் கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதை கண்டுபிடித்து உறுதிபட கூற முடியாமல் திணறி உள்ளன. இது அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க தேசிய உளவு அமைப்பு நேற்று முன்தினம் அளித்த அறிக்கையில், “இந்த வைரஸ் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிய அளவிலான வெளிப்பாடு மூலம் மனிதர்களைப் பாதித்திருக்கலாம். டிசம்பர் மாதம், வுகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸ் கொத்தாக எழுச்சி பெற்றிருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் உளவு அமைப்புகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதில் ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியாமல் அவை தோல்வியை சந்தித்துள்ளன.
அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இவை:-
* கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான உளவு அமைப்புகள், கொரோனா வைரஸ் மரபணு ரீதியில் உருவாக்கப்பட்டிருக்காது என்று குறைந்த நம்பிக்கையுடன் மதிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், 2 உளவு அமைப்புகள் எந்த வகையிலும் ஒரு மதிப்பீட்டைச் செய்வதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளன.
* சீனாவில் இந்த வைரஸ் ஆரம்பத்தில் வெளிப்படுவதற்கு முன்பு, அதிகாரிகளுக்கு அது பற்றிய முன்னறிவிப்பு இல்லை.
* உளவு அமைப்புகளின் அனைத்து தகவல்களையும், பிற தகவல்களையும் பரிசீலித்த பின்னர், கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் உளவு அமைப்புகள் பிளவுபட்டுள்ளன.
* 2 அம்சங்களை எல்லா உளவு அமைப்புகளும் நம்பத்தகுந்தவை என மதிப்பிடுகின்றன. ஒன்று, இந்த வைரஸ் இயற்கையாக வெளிப்பட்டு விலங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். மற்றொன்று, அது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடைய சம்பவத்தைக் கொண்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இந்த வைரஸ் வெடிப்பின் வேர்களை கண்டுபிடிக்க எனது நிர்வாகம் எல்லாவற்றையும் செய்யும். இந்த வைரஸ் பெருமளவு வேதனையையும், இறப்புகளையும் உலகமெங்கும் ஏற்படுத்தி உள்ளதால், அதைத்தடுக்க எல்லோரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இது உதவும்.
ஆரம்பத்தில் இருந்தே சீனாவில் உள்ள அரசு அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை பெற விடாமல், சர்வதேச புலனாய்வு குழுவினரையும், உலகளாவிய பொது சுகாதார உறுப்பினர்களையும் தடுத்து விட்டனர்.
இந்த நாள் வரையில், வெளிப்படையான விசாரணையை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. தகவல்களை நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் பதில்களைப் பெற உலகத்துக்கு தகுதி உள்ளது. நாங்கள் அவற்றைப் பெறுகிற வரையில் ஓய மாட்டோம். பொறுப்பான நாடுகள், இந்த வகையிலான பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்வதில்லை.
அறிவியல் நெறிமுறைகளை, தரங்களை பின்பற்ற வேண்டும், தொற்றின் ஆரம்ப காலம்தொட்டு தகவல்களையும், தரவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்க உளவு அமைப்புகளின் அறிக்கை, சீனாவுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது. இதுபற்றி சீனா கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க தரப்பு விரும்பியபடி அமெரிக்க உளவு அமைப்பினர் எந்த ஒரு சரியான பதிலையும் அளிக்கவில்லை. அத்தகைய முயற்சியைத் தொடர்வது வீண். மேலும் இது அறிவியலுக்கு எதிரானது” என தெரிவித்தது.
கொரோனா தோன்றியது முதல் திறந்த, வெளிப்படையான, பொறுப்பான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும் சீனா கூறியது.