கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.
காஸ்ட்ரோ பற்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி என குறிப்பி்ட்டிருக்கிறார். கியூபா மக்களை அறுபது ஆண்டுகளாக ஒடுக்கி வைத்திருந்தவர் காஸ்ட்ரோ என்றும், தனது தாய் நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட வழங்க மறுத்தவர் பிடல் என்றும் ட்ரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார்.
காஸ்ட்ரோ ஏற்படுத்திய சோகம், உயிரிழப்புகள், வலி ஆகியவற்றை அழித்துவிட முடியாது எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செழுமையையும், சுதந்திரத்தையும் நோக்கிய புதிய பயணத்தை கியூபா மக்கள் தொடங்க முடியும் எனவும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிடெல் காஸ்ட்ரோ மறைவுக்குப் பின்னர் கியூபா மற்றும் உலகில் ஏற்படும் தாக்கம் என்னவென்பதை வரலாறு தீர்மானிக்கும் என்று அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.