கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.

உடல்நலக் குறைவு காரணமாக பிடல் காஸ்ட்ரோ உயிரிழந்ததாக அவரது சகோதரரும், கியூப அதிபருமான ரால் காஸ்ட்ரோ அரசு தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு அறிவித்துள்ளார். ராணுவ ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக புரட்சி செய்து கியூபாவில் கம்யூனிஸ ஆட்சியை மலர செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. இந்த புரட்சியின் போது சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து செயல்பட்டனர்.

1959 முதல் 2008-ம் ஆண்டு வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் கியூபாவை ஆட்சி செய்து வந்த பிடல் காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக 2008-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்த பிடல் காஸ்ட்ரோ பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கியூபா நேரப்படி இரவு 10.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.