வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்?

பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந்நாட்களில் இவர் எப்படி உண்மைகளை விழுங்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே இனிவரும் காலங்களில் வைரஸ் பற்றிய உண்மைகளும் விழுங்கப்படும் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் அவர் சுகாதார அமைச்சராக வருவதற்கு முன்னரே நாடு உண்மைகளை விழுங்க தொடங்கிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் பின்வருமாறு கூறுகிறார்….“கொரோனா தொற்று தொடர்பாகச் சரியான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை. இரசாயான ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும் பி.சி.ஆர். அறிக்கை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. நாளாந்தம் சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் விரைவான அன்டிஜன் பரிசோதனை தொடர்பான அறிக்கை புள்ளிவிபரத்தில் இடம்பெறுவதில்லை. அவர்கள் வேண்டும் என்றே செய்கிறார்களோ அல்லது அவர்களின் கவனக் குறைவோ எனத் தெரியவில்லை.”

இப்பொழுது ஹெகலிய வந்துவிட்டார். அவர்,வந்தகையோடு பத்துநாள் சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் உத்தியோகப்பற்றற்ற ஒரு தணிக்கையை அமுல்படுத்துவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சவேந்திர சில்வாவுக்கும் அவருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு எப்படியிருக்கும் என்ற கேள்வியும் இங்கு முக்கியம். எனினும் அரசாங்கம் அமைச்சரவையில் மேற்கொண்டிருக்கும் மாற்றங்கள் நாடு இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் நோக்கிலானவை என்பதில் சந்தேகமில்லை. இது அமைச்சரவை பொறுத்து இரண்டாவது மாற்றம். முதலாவது பசில் ராஜபக்சவை உள்ளே கொண்டு வந்தது. இப்பொழுது அமைச்சரவை மாற்றம். இதன்மூலம் அரசாங்கம் உள் நோக்கியும் வெளி நோக்கியும் சில சமிக்ஞைகளை காட்டவிரும்புகிறதா ?

சலித்துப் போயிருக்கும் சிங்கள மக்களுக்கு ஒரு மாற்றம் என்ற செய்தியை அரசாங்கம் உள்நோக்கிக் காட்ட விளைகிறது. அதேசமயம் வெளியுறவு அமைச்சராக ஜி.எல்பீரிஸை நியமித்ததன்மூலம் வெளிநோக்கி மேற்கு நாடுகளுக்கு ஏதோ ஒன்றை கூறவிரும்புகிறதா? ஏற்கனவே பீரிஸ் சுமந்திரனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். எனவே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு பேச்சுக்களை தொடங்குவதன் மூலம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பாக மேலும் சுதாகரிப்புக்களை செய்யப்போகிறதா? நேற்றுமுன்தினம் அரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தைத்த ஆடை ஏற்றுமதித் துறை பற்றி அழுத்திக் கூறியிருக்கிறார். நாட்டை நீண்டகாலம் முடக்கினால் ஆடை ஏறுமதித் துறை சரிந்து விடும் என்ற அச்சம் அங்கே தெரிகிறது. ஆடை ஏறுமதி என்றால் அங்கே ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பற்றியும் கவனிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியின்போதும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பில் ஐரோப்பிய யூனியன் நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது அனைத்துலகத் தரத்துக்கு ஏற்ப அதில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் நிபந்தனை விதித்தது. அப்பொழுது கூட்டமைப்பு அரசாங்கத்தை பிணை எடுத்தது. அதன்மூலம் நிபந்தனையோடு அந்த சலுகை வழங்கப்பட்டது. இப்பொழுது மறுபடியும் அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்காக ஒரு குழுவை நியமித்திருந்தது. அந்த குழுவின் தகைமை குறித்து நிபுணர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அரசாங்கம் பெயரளவிலாவது பயங்கரவாத தடைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்யக்கூடும். அதன்பின் கூட்டமைப்பு அரசாங்கத்தை பிணை எடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால் பசில் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் என்பது மட்டும் தெரிகிறது. இது முதலாவது. இரண்டாவது-அதையும் பஸில்தான் முன்னெடுக்கிறார். திருகோணமலை துறைமுகத்தை அண்டிய ஒரு தொகுதி காணிகளை அரசாங்கம் அமெரிக்கா தலைமையிலான குவாட் நாடுகளுக்கு கொடுக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்தன. இதற்குரிய அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருக்கும் ஒரு பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் காணிகளை பெற்றுக்கொள்ள கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். இது இரண்டாவது.

மூன்றாவது-அதுவும் பசிலின் வருகையோடுதான் முடுக்கிவிடப்பட்டி ருப்பதாக கருதப்படுகிறது. என்னவெனில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரான மிலிந்த மொரகொட இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவதற்காக இரண்டு ஆண்டுத் திட்டம் ஒன்றை வரைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததும் மிலிந்த மொரகொடவை இந்தியாவுக்கான தூதுவராக நியமித்தார். அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்த நியமனம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நிலைமை காணப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியா அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்க தயாரில்லை என்று கூறப்படுகிறது. அப்படி மிலிந்த மொரகொடவிற்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்குவதாக இருந்தால் அதைப்போல கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவருருக்கும் அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் வந்தபின் மிலிந்தவின் நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் அமைச்சரவை அந்தஸ்தோடு டெல்லிக்குப் போகிறாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மிலிந்த மொறக்கொட இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கென்று தயாரித்த ஒன்றிணைந்த மூலோபாயத் திட்டம் ஒன்றைப்பற்றி அரசியல் வடடாரங்களில் அதிகம் பேசப்படுகிறது.

அதாவது அரசாங்கம் இந்தியா தொடர்பான அதன் அணுகுமுறைகளில் மாற்றங்களை செய்ய விரும்புகிறது என்று பொருள்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியா முதலில் என்பதே அதன் வெளியுறவுக் கொள்கை என்று கூறிக்கொண்டாலும் நடைமுறையில் அது இந்தியாவுக்கு ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே பல விடயங்களிலும் நடந்துகொண்டது.குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் மேற்கு முனையம் விடயங்களில் இலங்கை அரசாங்கம் இந்தியாவை திருப்திப்படுத்த தவறியது.அடுத்ததாக பலாலி விமான நிலையத்தை அடுத்தகட்டமாக புனரமைப்பதற்கு இந்தியா தயாராக இருந்த போதிலும் அரசாங்கம் covid-19ஜக் காரணமாக கட்டி அதை தள்ளிப்போட்டு வருகிறது.அது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. மூன்றாவது காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவை நோக்கிய ஒரு கப்பல் பாதையை திறப்பதற்கும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் தரவில்லை.நாலாவது யாழ்ப்பாணத்தின் தீவுகளில் புதுப்பிக்கப்படும் எரிசக்தித் திட்டத்தை சீன நிறுவனத்துக்கு கொடுத்தமை.

இவ்வாறாக அரசாங்கம் இந்தியாவை திருப்திப்படுத்தும் விதத்தில் சில விடயங்களில் நடந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மாறாக முதலீடு என்ற அடிப்படையிலும் கடன் உதவி என்ற அடிப்படையிலும் அரசாங்கம் மேலும் சீனாவை நோக்கி சாயும் நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் வந்ததும் அவர் ஒரே நேரத்தில் அமெரிக்காவை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் அனுகூலமான அசைவுகளை காட்டத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.இவ்வாறான அசைவுகளில் ஆகப் பிந்திய ஒன்றுதான் வெளிவிவகார அமைச்சராக பீரிஸ் நியமிக்கப்பட்டிருப்பதும். ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவர். மேற்கைப் பொறுத்தவரையிலும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவோடு ஒப்பிடுகையில் கையாள்வதற்கு இலகுவான ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை வெளியுறவு அமைச்சராக நியமித்ததன்மூலம் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சாதகமான சில கதவுகளை திறக்க முயற்சிக்கின்றதா?

எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் சித்திரம் என்னவென்றால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பலவகைப்பட்ட நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் தனது சில நிலைப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை முன்னிட்டு அரசாங்கம் மேலும் தனது நிலைப்பாடுகளில் நெகிழ்வை காட்டக்கூடும்.. ஆனால் பசில் ராஜபக்ச பொருளாதார ராஜதந்திரப் பரப்புகளில் முன்னெடுக்கும் இதுபோன்ற சுதாகரிப்புக்கள் யாவும் வைரசுக்கு எதிரான போரில் அரசாங்கம் தனது கவனத்தை முழுமையாக குவிப்பதற்கு உதவுமா?

இக்கட்டுரை எழுதப்படும் காலகட்டத்தில் நாட்டில் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டது.அரசாங்கம் இந்தியாவிடம் ஒக்சிசனை வாங்கத் தொடங்கியிருக்கிறது.டெல்டா திரிபு வைரஸ் மேல் மாகாணத்தை கடந்து நாடு முழுவதும் பரவிவருகிறது.எட்டு நிமிடத்துக்கு ஒருவர் வைரஸ் தொற்றினால் இறக்கிறார்.நாடு முடக்கப்பட்டிருக்கிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதைப்போல கெஹலிய ரம்புக்வெல பெருந்தொற்று நோய் தொடர்பான புள்ளிவிபரங்களில் உண்மைகளைக் கூறலாம் கூறாமல் விடலாம். ஆனால் அவர் covid-19 தொற்றத் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு விடயத்தை பிரகடனம் செய்ததை இந்த நினைவூட்ட வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த அரசாங்கத்துக்கு ஒரு வைரஸை தோற்கடிப்பது பெரிய காரியம் இல்லை என்ற தொனிப்பட அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் வைரசுக்கு எதிரான போரும் இன முரண்பாடுகளின் விளைவாக வந்த போரும் ஒன்று அல்ல என்பதை கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் நிரூபித்திருக்கும் பின்னணியில், அமைச்சரவை மாற்றத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ரம்புக்வெல கூறினார் தடுப்பூசியைப் போடுங்கள் ஆனால் கடவுளைப் பிரார்த்தியுங்கள் என்ற தொனிப்பட. இப்பொழுது அவர்தான் சுகாதார அமைச்சர். இனியும் அவர் அப்படித்தான் கூறுவாரா? ஏனெனில், மருத்துவர்களும் துறைசார் நிபுணர்களும் சொல்லிக் கேட்காத அரசாங்கம் இரண்டு மகாநாயக்கர்கள் சொன்னபின்தானே நாட்டை முடக்கியது?

நிலாந்தன்