Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / காலத்தாண்டுதலை நிகழ்த்திய நகுலன்

காலத்தாண்டுதலை நிகழ்த்திய நகுலன்

சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் காலத்திலிருந்து கவிதை (1959) எழுதினாலும் நாவல், சிறுகதை பெற்ற கவனத்தை நகுலனின் கவிதை பெறுவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இது தனிக்கவிதைகள் மூலமாக அல்லாமல், நீண்ட கவிதைகள் மூலமாகவே சாத்தியமாயிற்று. தனிக்கவிதைகளைத் தொடக்கக் காலத்திலும், தனது இறுதிக் காலத்திலும் எழுதியிருக்கிறார்.

‘சிலை’ (1959) கவிதையில் சடங்கு வழிப்பட்ட மத நம்பிக்கைகளை, ‘சிலை முன் பல பேசி என்ன பயன்?’ என்று கேள்விக்கு உட்படுத்துகிறார். அதே கவிதையில், ‘சாவுக்கும் அர்த்தமுண்டு/ சம்போகத்தில் நாசமுண்டு’ எனச் சொல்வதன் மூலமாகப் புலன்வழி வாழ்க்கையின் எல்லைகளைச் சுட்டுகிறார். 1961-ல் தொடங்கி 1966 வரையில் சிறிய அளவில் ஐந்து பாகங்களாக ‘எழுத்து’வில் வெளிவந்த அந்தக் கவிதைகள் திரௌபதி, அகலிகை, சீதை என்று புராணப் பெண்களின் மகத்துவம் பற்றிப் பேசினாலும், ‘பூச்சுக்கலைந்து விட்டால்/ சூனியம் பல்லிளிக்கிறது’ என்று இறுதியில் முடிவதால், பெண்மை என்னும் அசாத்திய சக்திகூட எல்லா வெற்றிடங்களையும் நிரப்பப் போதுமானதாக இருக்காது என்ற முடிவுக்கு அவர் வந்ததைச் சொல்கிறது. இது பெண்மை என்பது மாயையா அல்லது பிரமிப்பா என்ற தடுமாற்றத்தைச் சந்தித்து, எதுவாக இருந்தாலும் கடைசியில் சூனியத்தைத்தானே பார்க்கிறோம் என்ற முடிவுக்கு அவர் வந்ததைக் குறித்திருக்கலாம்.

ஒரு தமிழ் மாணவராக இருந்தபடியால், செழுமையான தமிழ் இலக்கியம் அவரது எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்திருக்கிறது. கவிதையூடாகப் போகும் தத்துவச்சரடைத்தான் அவர் அதிகம் எதிர்பார்ப்பார் என்றாலும், சங்க இலக்கியப் பாடல்களில் தெரியும் ‘விளிச்சொற்கள், ஓசை அமைதி, சொல் முடிவுகள், அர்த்த வேறுபாடுகள்’ அவரை ஈர்த்திருக்கின்றன.

நான் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆராய்ச்சிசெய்வதாக பாவனை செய்துகொண்டிருந்தேன். ராஜமார்த்தாண்டனும் நானும் ஒரே இடத்தில் தங்கியிருந்தோம். அந்த இடம் நகுலன், எம்.எஸ்.ராமசாமி, தட்சிணாமூர்த்தி, ஷண்முக சுப்பையா போன்ற இலக்கிய நண்பர்கள் சந்திக்கக்கூடிய இடமாகவும் இருந்தது. ‘மழை மரம் காற்று’ கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘மழை மரம் காற்று’வைத் தொடர்ந்து வாசித்தபோது, சில இடங்கள் எங்களை நிற்கவைத்தன. வழக்கம்போல அவர் இருந்த சூழ்நிலையை விவரித்துவிட்டு, ‘என்னுடன் ஒருவருமில்லை/ நான்கூட இல்லை/ எவ்வளவு சுகம்’ என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை எங்களால் தாண்டிச்செல்ல முடியவில்லை. அதிலும் ‘வானம்பாடி’ கவிதைகளின் மயக்கத்தில் ஆட்பட்டிருந்த 24 வயதுக்காரனான என்னை, அப்போது இருந்த காதல் உணர்வுகளையும் மீறி இந்தச் சொற்கள் ஆட்கொண்டன. இந்த நீண்ட கவிதைக்கு இடையில் வரும் உரைநடைப் பகுதிகளும் ஒரு அத்துவானக்காட்டில் எங்களைக் கொண்டுபோய்விட்டன.

‘என் நிழலை வெட்டு/ எனக்கு நானே ஒரு மலடியாகப்போகும்/ நிலைமையைப் பார்த்துக்கொண்டிருக்கும்/ அவஸ்தையிலிருந்து என்னை விடுவி!’ என்ற அவரது மன அவஸ்தைக்கு இடையிலும் ‘எனது எல்லாக் காடுகளும், கணக்கற்ற/ நக்ஷத்திரங்களும்/ எவ்வளவு பகல் என்னால் கிரகித்துக்கொள்ள முடியுமோ?’ என்று அவருக்குக் கிடைத்த பாக்கியங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குப் பிறகு எழுதப்பட்ட ‘மூன்று’ (1978), ‘ஐந்து’ (1980) ஆகிய நீண்ட கவிதைகளின் மூலமாகத்தான் கவிதையில் அவரது இடம் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கொள்ளலாம்.

சத்தியத்தேடல் தீவிரமாகிறபோது கவித்துவம் புதிய வடிவத்தை அடைகிறது. இதை முயல்வதற்கு நகுலன் ராமாயணச் சூழ்நிலைகளையும் கதாபாத்திரங்களையும் கைக்கொண்டார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அவரது ‘உறங்குகின்ற கும்பகர்ணன்’ (‘மூன்று’) வீடணனுக்கும் கும்பகர்ணனுக்கும் இடையில் போர்க்களத்தில் நடந்த உரையாடலாக இருந்தாலும் அங்கே அதிகம் பேசுவது கும்பகர்ணன்தான். தான் சென்ற வழியைப் பற்றி கும்பகர்ணன் ஒரு வாக்குமூலமாகக் கூறுவது பாவம்-புண்ணியம், குற்றம்-தண்டனை என்பது பற்றியதான பல இலக்கிய ஆவணங்களுடன் சேர்க்கத்தக்கது. கிறிஸ்தவத்தின் பாவ சங்கீர்த்தனத்துக்கும் இது ஒரு நல்ல சேர்க்கையாக இருக்கும்.

‘உறங்குகின்ற கும்பகர்ணன்’ பகுதியில் தனது ஆக்ரோஷத்தையும் ஆற்றாமையையும் வேகமாக அவரால் வெளிப்படுத்த முடிந்தது. புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்கு எதிரான ஓர் எதிர்ப்புக் குரலாகவே பதிவானது. ஆனால், ‘உறங்குகின்ற கும்பகர்ணன்’ ஒரு எதிர்ப்புக் குரலாக இல்லாமல், ஒரு தன்னிலை விளக்கமாகவே இருக்கிறது. கும்பகர்ணன் ஓர் அரக்கன், அநியாயத்துக்கும் அதர்மத்துக்கும் துணைபோனவன் என்ற கோணத்தில் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அவனது தன்னிலை விளக்கம் வேறு ஒரு பாதைக்கு இட்டுச்செல்கிறது. உண்மையில், அங்கே கும்பகர்ணன் என்பதை எடுத்துவிட்டு, வேறு எந்தப் பெயரைப் போட்டாலும் அந்தக் குரலின் நியாயம் புரியும்.

வாக்குமூலங்களும் தன்னிலை விளக்கங்களும் இல்லாமல் இருந்திருக்குமானால், மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு என்றோ செத்திருப்பார்கள். தமிழ் அகப்பாடல்களில் இந்தத் தன்னிலை விளக்கங்களைப் பெரும்பாலும் பெண்களே நிகழ்த்துகிறார்கள். புறப்பாடல்களில் ஆண்கள் நிகழ்த்தியதாக இத்தகைய தன்னிலை விளக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடியவில்லை. அப்படி நடந்திருந்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய மண்ணில் அவ்வளவு போர்கள் நடந்திருக்காது. கும்பகர்ணன் அளவு சிந்திக்கத் தெரியாதவனாக ராவணன் இருக்கலாம். அதனால்தான், தனது தோல்வி மனப்பான்மையை உடனே வெளிப்படுத்திவிடுகிறான். ‘பிறந்த பின்னர்/ வென்றாலென்ன/ தோற்றாலென்ன?/ சொல்லடி பெண்ணே!’ தனது முடிவு இப்படித்தான் என்று தெரிந்த பிறகு சோர்ந்துவிடுகிற ராவணன், அப்படிச் சோர்ந்துவிடாத தனது தம்பி கும்பகர்ணனைப் பார்த்து, ‘தூங்கிச்சுகம் பெற்றாய்/ நீ போலும்!/ தூங்காமல் தூங்கி/ அல்லலுற்றேன்/ நான் போலும்/ ஐயனே!’ என்று பொறாமைப்படுவது இயல்புதான்.

புராண இதிகாசக் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் நியாயத்தைச் சொல்வது மாதிரியோ அல்லது தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு அந்தக் கதாபாத்திரங்களை ஊதுகுழலாகப் பயன்படுத்திக்கொள்வதோ உலக இலக்கியங்களில் காலம் காலமாக நடைபெறுவதுதான். தமிழிலும் புதுமைப்பித்தனும் கோவை ஞானியும் அத்தகைய முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், புராணக் காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான காலத்தாண்டுதலை அவர்கள் செய்யவில்லை. ஒரு அராஜகக் கவிதை மொழியில், காலத்தாண்டுதலை நிகழ்த்தி தற்கால மனிதனை மேடைக்குக் கொண்டுவருகிறார் நகுலன்.

‘…குடும்ப உறவுகள். பிறகு இன உறவுகள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இதைப் போலவே உலகுடன் நம் உறவு பொருள் சம்பந்தமானது என்கிறார்கள். இதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை… தேக சம்பந்தம் உடையவன் என்றாலும் நான் தேகமில்லை. மன சம்பந்தம் உடையவன் என்றாலும் நான் மனமில்லை.’ தனது இலக்கிய வெளிப்பாட்டை ‘ஐம்பற்றுதல்’ (மதம், சாதி, இனம், மொழி, தேசம்) என்னும் அடித்தளத்தில் நிறுத்திச் சோதித்துப் பார்த்த மா.அரங்கநாதனைப் போன்றதுதான் நகுலனது இந்த முயற்சியும். ஆனால், இது வேறு ஒரு தளத்தில் நிகழ்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நகுலன் வீடணனைப் போன்ற மனநிலை கொண்டவராகவே இருந்தார். அவர் முப்புரிநூல் அணிந்தோ சந்தியாவந்தனம் செய்தோ நான் பார்த்ததில்லை. வட்டத்திலிருந்துகொண்டு வட்டத்தை மீறுபவர்களும், வட்டத்தையே தங்கள் உலகமாகக் கொள்பவர்களுமாகத்தான் காலம் சுழல்கிறது. ‘இருந்தாலும் தன்னிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் துணிவு அவனுக்கு (இராவணனுக்கு) கிடையாது’ என்ற வீடணனிடம் விடுவித்துக்கொள்ள முடியாத சில அம்சங்கள் இருப்பதாக நகுலன் பார்க்கிறார்.

ஒரு தேசம் தன்னிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறதோ அதற்குச் சமமான அளவில்தான் காகித நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் என்பது நியதி. ஆனால், காகிதத்தையே தங்கமாக நினைத்தால் எப்படி? அப்படித்தான் வாழ்க்கை நெறிகளை வெறும் வார்த்தைகளாகச் சுருக்கி, அதன்படியே வாழ்ந்து முடியும் மனிதர்கள். இதில் மாறுபடுகிறார் நகுலன். தொடர்ச்சியான இந்த அலைக்கழித்தலுக்குப் பிறகு, ஒரு சோர்ந்த நிலையில்தான் நகுலனது தனித்துவமான பிரகடனம் வருகிறது: ‘இருப்பதற் கென்றுதான்/ வருகிறோம்/ இல்லாமல் போகிறோம்.’ தான் கடந்துவந்த, தன்னைக் கடந்துபோன ஒவ்வொன்றையும் மறுபரிசீலிக்கும்போது, ‘ஒவ்வொன்றாகக்/ கழித்துக் கொண்டு வந்து/ கடைசியில் நிற்கும் பூஜ்யம்தான்/ பூரணம் என்கிறீர்கள்’ என்று அவர் குற்றம்சாட்டுபவர்களில் நாமும் கலந்துநிற்கிறோம் என்பதை நினைத்து பெருமைப்படுவதா, வெட்கப்படுவதா?

– ப.சகதேவன், பேராசிரியர், ‘புதுமைப்பித்தன் இலக்கியத்தடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: krishnaswamip@yahoo.com

 

About குமரன்

Check Also

அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் ...