ஈபிள் டவரின் 14 படிக்கட்டுகள் ரூ. 3.8 கோடிக்கு ஏலம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ் பெற்ற ‘இரும்பு பெண்’ என அழைக்கப்படும் ‘ஈபிள் டவர்’ கட்டுமானம் 1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. முழுவதும் இரும்பினால் கட்டப்பட்ட இதன் ஒட்டுமொத்த உயரம் 324 மீட்டர்கள் ஆகும்.

1983ல் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் 24 பகுதிகளாக வெட்டி எடுக்கப்பட்டு பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அவை 1983-ஆம் ஆண்டில் இருந்து ஏலம் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் இதன் 14 இரும்பு படிக்கட்டுகள் ரூ. 3.80 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

ஏலத்தை நடத்திய பிரான்கோயஸ் டாஜன் கூறுகையில், ‘தொலைபேசி மூலமாகவும் ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இது பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுக்கு இருக்கும் பாரம்பரியத்தின் மீதான ஆர்வத்தை காட்டியது’ என்றார். இதற்கு முன் 2013ல் நடந்த ஏலத்தில் 19 படிகள் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

ஈபிள் டவர் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெயருடன் விளங்கியது குறிப்பிடத்தக்கது.