தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,கோவிந்தன் கருணாகரம், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் தமிழ் தரப்பினரோடு அரசாங்கம் முயற்சிக்கும் பேச்சுவார்த்தை ஆகியவை முக்கிய விடயங்களாக கருத்தில் கொள்ளப் பட்டன.
ஏற்கனவே தமிழ் கட்சிகள் சந்தித்த கூட்டங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்களை அடையாளப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பட்டியலிடப்பட்ட விடயங்களில் மிக முக்கியமாக, முதல் கட்டமாக ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காணப்படுவதற்கு நான்கு விடயங்கள் அடையாளப்படுத்த பட்டன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசியல் யாப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் என்பவையாகும்.
13வது திருத்தச் சட்டத்தை எம்முடைய தீர்வாக ஏற்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பது அனைவருடைய நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய 13ஐ நிறைவேற்ற அரசு முன் வருவது நல்லிணக்க நடவடிக்கையாக கருத முடியும் என தீர்மானிக்கப் பட்டது.
இந்த விடயங்களில் காத்திரமாக ஒருமித்து செயலாற்றுவதென தீர்மானிக்கப் பட்டது. அதேவேளை மற்ற விடயங்களையும் கட்டம் கட்டமாக ஒருமித்து எதிர் காலத்தில் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.
அரசியல் தீர்வு சம்பந்தமாக அரசுடனான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். ஆயினும் அது தமிழ் மக்களின் நலன்களுக்காக அமைய வேண்டும் என்பதிலும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசு தப்பிக்க இடமளிக்க கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என முடிவு எட்டப் பட்டது.
போருக்கு முன்னும் பின்னும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பல பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும். இது பேச்சுக்கான ஒரு நல்லிணக்க நடவடிக்கையாக அமைவதோடு சாதகமான சூழலையும் ஏற்படுத்தும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் தமிழ் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில், மேல் குறிப்பிட்ட இணக்கம் காணப்பட்ட விடயங்கள் உட்பட மற்றும் பல விடயங்களையும் உள்ளடக்கிய கோரிக்கையை முன் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வரவிருக்கும் ஐநா கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதன் பொருட்டு தமிழ் தரப்பினால் ஒருமித்து அறிக்கை ஒன்று தயாரித்து சமர்ப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதில், 46/1 பிரேரணையில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமலும் அதேவேளை அவற்றிற்கு எதிராகவும் செயற்படுவதை சுட்டிக்காட்டியும் குறிப்பாக பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் விபரங்களையும் உள்ளடக்குவது என்று இணக்கம் காணப்பட்டது.
மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்றதோடு மீண்டும் விரைந்து சந்திப்பதற்கான ஒத்திசைவுடன் பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு நிறைவு பெற்றது.
Eelamurasu Australia Online News Portal