ஆஸ்திரேலிய வீரர் நாதன் ஐ.பி.எல்.லில் ஆடுகிறார்

26 வயதான நாதன் எல்லிஸ் தனது முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். வங்காள தேசத்திற்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் அதாவது மே 2-ந் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.

எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐ.பி.எல்.லின் 2-வது கட்ட போட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

செப்டம்பர் 19-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ரிச்சர்ட்சன், மெரிடித் ஆகியோர் விளையாடவில்லை. அவர்கள் விலகி உள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர் நாதன் எல்லிசை பஞ்சாப் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க வில்லை. தற்போது நாதன் எல்லிசை எடுக்க 3 அணிகள் முயற்சி செய்தது. கடைசியில் பஞ்சாப்தான் வெற்றி பெற்றது.

26 வயதான நாதன் எல்லிஸ் தனது முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். வங்காள தேசத்திற்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

மேலும் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் 3 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றுள்ளார். இதனால்தான் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் அவருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.