பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தக் கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பி யிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப் பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் பசில் ராஜபக்‌ச நியமிக்கப் பட்டிருக்கின்றார். அதே வேளையில் பேச்சுக்களுக்கு முன்னோடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இவை எல்லாம் பகிரங்கப் படுத்தப்படாமல் இரகசியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், தகவல்கள் இப்போது கசிந்திருக்கின்றது.

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு பேச்சுக்களை நடத்துவதற்காக முன்னெடுத்துள்ள முயற்சிகள் தமிழ் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ‘ரெலோ’ இந்தச் செய்தியால் கொதித்தெழுந்திருக்கின்றது. நிபந்தனையற்ற வகையில் பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் செல்ல முடியாது என அதன் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். இந்தப் பின்னணியில், கடந்த இரு வாரங்களாக என்ன நடைபெறுகின்றது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அமெரிக்க ஆதரவில் பேச்சுக்கான முயற்சி

அமெரிக்க ஆதரவில் பேச்சுக்கான முயற்சி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு வார்த்தை முயற்சிகளில் அமெரிக்காவும் சம்பந்தப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. பசில் ராஜபக்ச‌ இரு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பி அமைச்சர் பதவியைப் பொறுப் பேற்ற போதே, பேச்சு வார்ததை ஒன்றுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படலாம் எனத் தகவல்கள் வெளி வந்திருந்தன. குறிப்பாக, அமெரிக்க ஆதரவுடன், பசில் ராஜபக்‌ச இந்தப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலெய்னா தெப்லிஸின் முன்னிலையில் அமைச்சர் பீரிஸுடன் சுமந்திரன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடத்தியிருந்தார். அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்காக இருவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அமைச்சர் பசில் ராஜபக்‌ச முன்னெடுப்பார் என்ற தகவலை அமைச்சர் பீரிஸ் கூட்டமைப்பின் பேச்சாளரிடம் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார்.

இருந்தபோதிலும், பசில் ராஜபக்‌ச தான் பேச்சுக்களை முன்னெடுக்கப் போகின்றார் என்ற தகவல் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பில் இந்தியத் தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழு சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்தது. அதன்போது, “அரசுடனான பேச்சுக்களை எப்போது ஆரம்பிக்கப் போகின்றீர்கள்?” என இந்தியத் தூதுவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த சுமந்திரன், “பசில் ராஜபக்‌ச நாடு திரும்பியதும் பேச்சுக்களை ஆரம்பிப்போம்” எனப் பதிலளித்திருந்தார்.

சர்வதேச அழுத்தங்கள் நெருக்கடிக்குள் அரசு!

ராஜபக்‌சக்களின் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை என்பதற்கு உண்மையில் இடமில்லை. இரண்டு காரணங்கள் இதற்குள்ளது. முதலாவது, தனிச் சிங்கள மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் அரசாங்கமாகவே ராஜபக்‌ச அரசாங்கம் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது, அதன் ‘தனிச் சிங்கள முகத்தை’ பாதிப்பதாக அமையும்.

இரண்டாவதாக, இனநெருக்கடி ஒன்று இலங்கைத் தீவில் இருக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. அதற்கு அதிகாரப் பரவலாக்கலின் மூலமாகத்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய கொள்கை அல்ல. இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார். இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு அவர்களுக்கு என்ன இருக்கின்றது?

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

ஆனாலும், சர்வதேச ரீதியாக உருவாகிவரும் அழுத்தங்களும், அடுத்த மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ள புதிய பிரேரணையும் இலங்கைக்கு கலக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. அதனைவிட, அமெரிக்க காங்கிரஸில் முன்வைப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பு என்பன இந்தக் கலக்கத்தை அதிகரித்துள்ளது.

இவ்வாறான கலக்கத்தில் இலங்கை இருக்கும் பின்னணியில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான அழுத்தம் அமெரிக்காவில் வைத்தே பசில் ராஜபக்‌சவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. இலங்கை விவகாரத்தை அமெரிக்கா கையாள்கின்றது என்றால், அதன் பின்னணியில் இந்தியாவும் சம்பந்தப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும். இந்தியாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமல், இலங்கை விவகாரத்தை அமெரிக்கா கைகளில் எடுக்காது.

அமெரிக்காவின் தேவை என்ன?

இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் தலையிடியைக் கொடுக்கும் ஒன்றாகத்தான் உள்ளது. காரணம் – இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு இதன்மூலம் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. ஜெனீவா 41/1 தீர்மானத்தை அடிப்படையாக வைத்து இலங்கை மீது கொடுக்கப்படும் அழுத்தங்களின் பின்னணியும் இதுவாகவே இருக்க வேண்டும் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.

திருமலையில் 33,000 ஏக்கர் காணியை அமெரிக்காவுக்கு குத்தகைக்குக் கொடுப்பதற்கு இலங்கை இணங்கியிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் சார்பில் தகவல் ஒன்று சில வாரங்களின் முன்னர் வெளிவந்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்தச் செய்தி மறுதலிக்கப்பட்டிருந்தாலும் கூட, இவ்வாறு வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவே கருதப்படுகின்றது. இது குறித்தும் பசில் ராஜபக்‌ச தான் அமெரிக்காவுடன் பேச்சுக்களை நடத்தியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில்தான் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது அதில் இன நெருக்கடிக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற வகையான அழுத்தங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளால் ராஜபக்சக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு இணை அனுசரணை நாடுகள் திட்டமிட்டிருப்பதாக கசியவிடப்படும் செய்திகளுக்கும் இதுதான் காரணம்.

இலங்கை அரசின் உபாயம் என்ன?

இந்த நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசப்போவதாக அரசாங்கம் சொல்லிக் கொள்கின்றது. அதற்கான முன்னகர்வாகத்தான் சுமந்திரனுடன் பேராசிரியர் பீரிஸ் பேசியிருக்கின்றார். அடுத்த கட்டம் பசில் ராஜபக்‌ச கூட்டமைப்பை சந்திப்பதாகத்தான் இருக்க வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர்கள் பேசுவதை சிங்கள மக்கள் சந்தேகத்துடன் நோக்கப்போவதில்லை. சர்வதேச ரீதியாக உருவாகும் அழுத்தங்களைச் சமாளிக்கத்தான் பேசுகின்றோம் என அவர்கள் சொல்லிக் கொள்ள முடியும். இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கப் போவதில்லை என்பது சிங்கள மக்களுக்குத் தெரியும். ஜெனீவாவைத் தாண்டிச் செல்வதற்கான காலங்கடத்தலாக மட்டும்தான் இது இருக்கமுடியும்.

அதேவேளையில் பேச்சுவார்த்தைக்குச் செல்வதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். நல்லாட்சியில் அரசுடன் இணக்க அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியதும், புதிய அரசியலமைப்பை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அரசுடன் அவர்கள் நடத்திய பேச்சுக்களும்தான் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்ட பாரிய பின்னடைவுக்குக் காரணம். தற்போதும் பேச்சுவார்ததை ஒன்றுக்குச் செல்வது, ஜெனீவா நெருக்கடியிலிருந்து அரசைப் பிணை எடுப்பதாக மட்டுமே இருக்கும். இது அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் பின்னடைவைக் கொடுக்கும்.

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு

இந்தப் பின்னணியில் தான் இந்த முயற்சியில் தாம் சம்பந்தப் படவில்லை எனக் காட்டிக் கொள்ள ரெலோ முற்படுகின்றது. அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை வெளிப் படுத்தினால், அதற்கான நிபந்தனை களுடன் பேச்சுக்குச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அடைக்கலநாதன் வெளிப்படுத்தி யிருக்கின்றார். புளொட் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சிக்குள்ளும் சுமந்திரனின் நகர்வுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன. அவர்களும் மௌனமாக இருக்கின்றார்கள்.

எதிர்பாராமல் உருவாகியுள்ள விமர்சனங்கள் சுமந்திரனின் முயற்சியைத் தடைப்படுத்துமா? அல்லது வழமைபோல விமர்சனங்களை புறக்கணித்து தமது நகர்வை அவர் முன்னெடுப்பாரா?

அகிலன்