முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் மரணம்

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளரான ஊடக வித்தகர் கலாபூசணம் முபீதா உஸ்மான் தனது 74ஆவது வயதில் காலமானார்.நேற்று செவ்வாய்க்கிழமை (17) திடீரெனெ நோய்வாய்ப்பட்ட அவர், சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இரவு மரணமடைந்துள்ளார்.

அன்டிஜன் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

தலைநகர் கொழும்பை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான், 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள அவர், தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருப்பதுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தில் பிரசார உத்தியோகத்தராகவும் பத்திரிகைத் தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

கலை, இலக்கிய மற்றும் ஊடகத்துறை பணிகளுக்காக 2008ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூசணம் விருதையும் ஊடகத்துறை சேவைக்காக 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடக வித்தகர் எனும் முதலமைச்சர் விருதையும் பெற்றிருக்கிறார்.

அத்துடன், சமூக சேவைகளை மையப்படுத்தி, 2012ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் பெண்ணாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் முபீதா உஸ்மான் தெரிவு செய்யப்பட்டு, மாவட்டச் செயலாளரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக கடந்த 2020ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தல் கலைஞர் சுவதம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.ரி.என். மற்றும் எம்.ரி.வி. தொலைகாட்சி நிறுவனங்களால் ஆளுமைப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிலோன் முஸ்லிம் கவுன்சில், மன்சூர் பவுண்டேஷன், மருதம் கலைக்கூடல் மன்றம், கலைச்சுடர் ஷக்காப் மௌலானா பவுண்டேஷன் போன்ற சிவில் சமூக, கல்வி, கலாசார அமைப்புகளினாலும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தனது குடும்ப சுமைக்கு மத்தியிலும் சமூகத்தில் குடும்பப் பெண்கள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் இதரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பெண் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும் கூடிய கவனம் செலுத்தி, அவர்களை முன்னிலைக்குக் கொண்டு வருவதில் முபீதா உஸ்மான் அயராது உழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.