நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் திரிபுகளின் அதிகரித்த தொற்றுக் காரணமாக சுகாதார, பொருளாதார, சமூக அடிப்படைகளில் பெரும் பின்னடைவையும் அவல நிலையையும் இலங்கை சந்தித்திருக்கின்ற இக்கால கட்டத்தில், அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற இவ்வாறான காலம் பிந்திய, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கட்டுப்பாடுகள், இந்த நெருக்கடிகளை எல்லாம் தீர்த்து வைக்கப் போதுமான வல்லமையைக் கொண்டிருக்குமா என்ற கேள்வி, எல்லோரிடமும் இருக்கின்றது.
கடந்த ஒன்றரை மாதத்துக்குள், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையொன்று வரப்போகின்றது என்று, சுகாதார துறையினர் முன்னரே கூறியிருந்தனர். ஆனால், அரசாங்கம் அதைப் பெரிதாகக் கவனத்தில் எடுக்கவில்லை.
சில விடயங்களில், சுகாதார அதிகாரிகளை விட, படை அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதைப் போல, நாட்டை முடக்கும் விடயத்தில் சுகாதார நிபுணர்களின் சிபாரிசை விட, அரசியல், பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கை அரசாங்கம் வெளிப்படுத்தியது.
அரசாங்கம், தனது முழுக் கவனத்தையும் பெருந்தொற்றின் மீது செலுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. ஆனால், சட்டத் திருத்தங்கள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றில் ஆட்சியாளர்கள் தமது கவனத்தைச் சிதற விட்டனர். சூழல் நெருக்கடிகளையும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் ‘சமாளிக்க’ அதிக காலத்தைச் செலவழிக்க வேண்டியிருந்தது.
அரசாங்கம், கொரோனாவை ஒரு சாதாரணமான விடயமாகக் கருதியது போல செயற்பட்டது. நாட்டை முடக்கினால், பொருளாதாரம் இன்னும் அதலபாதாளத்துக்குள் விழுந்து விடும் என்று சொல்லப்பட்டது. அது யதார்த்தமான விளக்கம்தான். ஆனால், இன்று ஒவ்வொரு தனி குடும்ப அலகின் மீதும், பொருளாதாரச் சுமை அதிகரித்துள்ளதைக் காண்கின்றோம்.
இன்று அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. நாட்டை முடக்கினால், ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படுவார்கள் என்று வியாக்கியானம் சொன்ன அரசாங்கம், பல பொருட்களுக்கு விலைகளை அதிகரித்தமையானது, ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.
இவ்வாறு பல விடயங்களில், அரசாங்கம் செயற்றிறன் இல்லாமலும் மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமலும் நடந்து கொண்டதால், குறிப்பிட்ட காலத்துக்குள் சிங்கள மக்களாலும் விமர்சிக்கப்படுகின்ற ஒரு புள்ளிக்கு வந்திருக்கின்றது. இந்தப் பின்புலத்தில், நாட்டில் அமலில் இருந்த கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்ல செயலிழந்து போயின. இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல் என்ற பெயரில், மக்களும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டனர்.
இந்தப் பின்னணியில், ‘டெல்டா’ உள்ளிட்ட திரிபுகள் சமூகத்துக்குள் ஆழமாக ஊருடுவி விட்டன. இப்போது மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டி விட்டது. தினமும் 150 இற்கு மேற்பட்ட மரணங்கள் அறிவிக்கப்படுகின்றன. வைத்தியசாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐ.சி.யு கட்டில்கள், ஒட்சிசன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளிலும் நிலைமை இதுதான்.
மிக முக்கியமாக, மரணங்கள் மலிந்த பூமியாக இலங்கை மாறிக் கொண்டு வருகின்றது. தினமும் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன. இவ்வாறு இறப்போரின் உடலங்கள், ஜனாஸாக்களை எரிப்பது அல்லது அடக்கம் செய்வதிலும் பெரும் நெருக்கடி நிலையொன்று தோன்றியுள்ளது.
தகனச்சாலைகளில் நீண்ட வரிசையில், பிரேத வாகனங்கள் காத்துக் கொண்டு நிற்கின்றன. தற்போது செயற்பாட்டிலுள்ள தகன மையங்களால் நிலைமைகளைக் கையாள முடியாமல் போகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதிலும் இடநெருக்கடி ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. ஓட்டமாவடி, மஜ்மா நகரில் இதுவரை 1,600 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மட்டுமன்றி, சக மதத்தவரின் பிரேதங்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 25க்கு குறையாத ஜனாஸாக்கள், இங்கு வந்து கொண்டிருக்கின்றன. இதே வீச்சில் மரணங்கள் நிகழ்ந்தால், இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே, மஜ்மா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜனாஸாக்களை புதைக்க முடியும்.
எனவே, வேறு இடங்களில் அடக்கம் செய்வதற்கு அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு, கொரோனாவை மையமாகக் கொண்டு நாட்டில் சுகாதார, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் என்றும் இல்லாதவாறு தலைதூக்கியுள்ளன. எனவே, இந்த வைரஸை கட்டுப்படுத்தினால் நாட்டிலுள்ள முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும். அத்துடன் ஆயிரக் கணக்கான உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
இவ்விடயத்தை, சுகாதார தரப்பினர் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நேரமே, பொருத்தமானதல்ல எனக் கூறிய சுகாதார நிபுணர்கள், அன்றிலிருந்து நாட்டை மூடுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
யுத்த களத்தில் நிற்கின்ற கட்டளைத் தளபதிக்குத்தான், களநிலைமை எப்படி இருக்கின்றது, என்ன நடக்கலாம் என்பது ஒப்பீட்டளவில் அதிகமாகத் தெரிந்திருக்கும். எனவே, அவர் சொல்வதை மேலிடம் கேட்டுச் செயற்பட்டாலேயே தோல்வியை தவிர்க்க முடியும். அதுபோல, கடந்த ஒன்றரை வருடங்களாக களத்தில் நின்று, கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்ற மருத்துவ துறைசார்ந்தோரின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்தாலே, இந்த வைரஸை வெற்றி கொண்டு, மக்களை காப்பாற்ற முடியும்.
தாம் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமையவே, தீர்மானங்களை எடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை அரசாங்கம் காண்பித்து வருகின்றது. இது உண்மைதான். ஆனால், இந்தத் தீர்மானம் சற்றுக் காலம் பிந்தி எடுக்கப்படுகின்றது. அதுவரையும், சுகாதார அறிவுறுத்தலை வேறு விடயங்கள் மேவி நிற்கின்றன என்பதே யதார்த்தமாகும்.
இன்றும் அவ்வாறான ஒரு முடிவே எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் முழுமையாக ‘கறுப்பு’ முடக்கமொன்றை அமல்படுத்துமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தி வந்த சூழலில், இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு நேற்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இப்போதாவது ஒரு முடிவுக்கு வந்தார்களே என்ற ஆறுதல் இருந்தாலும், இரவு நேர கட்டுப்பாடுகளின் பெறுபேறுகள் பற்றி பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.
முதலாவது அலையின் போது, அரசாங்கம் விதித்திருந்த நாடு தழுவிய ஊரடங்கானது சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத் தந்தது. மாகாணங்களுக்கு இடையில் நீண்டகாலம் பயணத்தடை விதித்தபோதும் அது எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றுத்தரவில்லை எனலாம்.
நாட்டை முற்றாக முடக்கினால், அல்லது ஊரடங்கை பிறப்பித்தால், அது ஏழை மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்று அரசாங்கம் கருதுகின்றது. இது உண்மைதான்! ஆனால், தளர்வான கட்டுப்பாடுகள், மாகாணப் பயணத் தடையால் பாதிக்கப்பட்டது கீழ் நடுத்தர மக்களும் அடிமட்ட மக்களும்தான்.
அத்தியாவசிய சேவை, அரச சேவை என்ற பெயரில் பலர் பயணித்தார்கள். அதிகாரம் இருப்பவர்கள், வர்த்தகர்கள், செல்வந்தர்களும் உலவித் திரிந்தார்கள். ஆகவே, பெரும்பாலும் ஒன்றுக்கும் இயலாத மக்களையே மேற்சொன்ன கட்டுப்பாடுகள் வீடுகளுக்குள் கட்டிப்போட்டன. இரவு நேரக் கட்டுப்பாடுகளும் அவ்விதமாகவே அமைந்திருந்தன.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. ஏற்கெனவே, வழக்கமான செலவுகளுக்குக் கூட நிதி இல்லாது தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், நாட்டை முற்றாக முடக்கினால் நிவாரணங்களை வழங்க வேண்டியநிலை ஏற்படும். அத்துடன், அரசியல் ரீதியாக அதனை ஒரு கௌரவக் குறைச்சல் எனவும் அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது.
இதனையெல்லாம் தாண்டிய ஒரு நிர்ப்பந்தமே, அரசாங்கம் இரவுநேர கட்டுப்பாட்டையாவது விதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. ஆயினும், இரவு நேரக் கட்டுப்பாடுகள் எந்தளவுக்கு வினைத்திறனாக கொவிட்- 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் என்ற அங்கலாய்ப்பு பொதுவாக எல்லோரிடமும் இருக்கின்றது.
கொழும்பு உட்பட நாட்டின் எல்லா பகுதிகளிலும் வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், வீதிகள் வெறிச்சோடியுள்ளன. இது அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளால் அல்ல. மாறாக, நோய், மரணம் பற்றிய பயத்தால் உருவான நிலையாகும். இந்நிலையில், இரவு நேரத்தில் யார் வெளியில் வரப் போகின்றார்கள்? யாரை இந்த ஊரடங்கு கட்டுப்படுத்தப் போகின்றது என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.
எது எவ்வாறாயினும், எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தின் பக்கத்தில் இருக்கின்ற குறைகளை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் மக்களும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும். வைரஸில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாயின், அரசாங்கம் நாடு தழுவிய முடக்கத்தை அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
இரவு நேரக் கட்டுப்பாடு மட்டும் போதாது என்ற அடிப்படையில். மக்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, வீடுகளுக்குள் முடங்குவது அவசியம். வைத்தியசாலைகளில் இடம் பிடித்தல், தகன சாலைகள், மையவாடிகளை தயார்படுத்துவதை விட, இது இலகுவானது என்பதைப் புரிந்து கொண்டால் சரி!
மொஹமட் பாதுஷா