சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பின்தங்கிய கிராமிய பெருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் படையினர் வசமிருந்து வருகின்ற பல காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாக அண்மையில் கும்புறுமுலையில் மூன்று தசாப்த காலமாகப் இராணுவம் ஆக்கிரமித்திருந்த 30 ஏக்கரிற்கு மேற்பட்ட தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இராணுவ முகாம் அமைந்திருக்கும் காணிகளையும் விடுவிப்பதற்காக படைத்தரப்பினருடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் இராணுவ முகாம் அமைந்திருக்கும் காணியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு இராணுவ முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஜெனரல் ஹர்சன குணரத்ணவுடன் கலந்துரையாடியதன் பின்னர், இராணுவத்தரப்புப் பிரதானி லெப்டனன் ஜெனரல் நளின் கொஸ்வத்தவுடன் தொலைபேசியில் உரையாடி குறித்த தனியாரிற்குச் சொந்தமான காணியை மிக விரைவாக விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த காணியை மிக விரைவாக விடுவிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளைத் தாம் மேற்கொள்வதாக இராணுவத்தரப்புப் பிரதானி வாக்குறுதியளித்துள்ளார்.